ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பாஜகவை திடீரென புகழும் நமது எம்ஜிஆர்! தினகரன் அணியோடு பாஜக அரசியல் வி ....ம்?

Prabha ,,  Oneindia Tamil   :  சென்னை: திடீரென பாஜகவை புகழ ஆரம்பித்துள்ளது டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்ஜிஆர் நாளிதழ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பா.ஜ.கவைப் புகழும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது நமது எம்.ஜி.ஆர் நாளிதழ். ' தமிழ்நாட்டில் தற்போது தேசத்துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் பா.ஜ.கவினர் மீது தேசத்துரோக சட்டம் போடப்பட்டதை கடுமையாக எதிர்த்தவர் மோடி' என வெகுவாகப் புகழ்ந்திருக்கிறது நமது எம்.ஜி.ஆர். 
 தமிழக அரசை அவமதிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக சேலம் மாவட்டத்தில் தினகரனால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட ஆறு பேரை தேசத்துரோக வழக்கில் போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்களோடு, கட்சியில் களையெடுப்பு தொடரும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தினகரன் மீதும் வழக்கு பாய்ந்தது. இதையடுத்து, எந்த நேரமும் தினகரன் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது. சிறையில் இருந்து பரோலில் சசிகலா வந்திருக்கும் சூழலில், ஆட்சிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், இந்த வழக்கின்கீழ் தினகரன் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. 
நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், தரை தட்டிய கப்பல் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை முழுக்கவே எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 
அதில், ' சட்டமன்றத் தேர்தலின்போது, அம்மா அளித்த வாக்குறுதிகளை ஆளும் தரப்பினர் தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்கள். இரட்டை இலை சின்னத்தையே முடக்கியவர்களுடன் கைகோர்த்து துரோகம் செய்யும் ஆளும் தரப்பினர், அம்மா அவர்களின் வாக்குறுதிகளை தூக்கி எறிந்ததில் எந்த வியப்பும் இல்லை. அம்மா அறிவித்த திட்டங்களான தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக் கணினி, கறவை மாடு- ஆடுகள், பணிக்குச் செல்லும் மகளிருக்கு ஐம்பது சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் மறந்துவிட்டு, டீ கடையின் வாசலில் யார் நிற்கிறார்கள்? யார் டீ குடிக்கிறார்கள்? துண்டுப் பிரசுரத்தை யார் விநியோகிக்கிறார்கள்? என்று தேடித் தேடி பொய் வழக்குப் போடுவதில் பொழுதைக் கழித்து வருகிறார்கள். 
 ஊழல் மலிந்துவிட்டது, நிர்வாகம் சீர்கெட்டுப் போயுள்ளது' என்று சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை வைத்து தேர்தலில் ஜெயித்த ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இன்று எம்.ஜி.ஆரையும், அம்மாவையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டு ஆட்சி நடத்துகிறார்கள். முதலமைச்சர் பங்குகொள்ளும் நூற்றாண்டு விழாக்களை பொதுமக்கள் புறக்கணித்து வருவதும், அதனால் நீதிமன்ற உத்தரவையும் அவமதித்து மாணவ- மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதையும் ஊடகங்கள் மட்டுமல்லாது, மத்திய அரசின் உளவுத்துறையும் கூர்ந்து கவனித்து வருகிறது.

 வேலூர் மாநாடாக இருந்தாலும் சரி, நீட் விவகாரமாக இருந்தாலும் சரி, கழக துணைப் பொதுச்செயலாளர் பங்கு பெறும் கூட்டங்களில் அலைமோதும் சுனாமி போன்ற மக்கள் வெள்ளத்தைக் கண்டு இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சியினரும் அசந்து போயிருக்கிறார்கள்.
இதனையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து வரும் மத்திய உளவுத்துறையானது பன்னீர்- எடப்பாடி அணிக்கு பொதுமக்கள் வரவேற்பு இல்லை என்றும், மேலும், மக்களின் அமோக ஆதரவையும் வரவேற்பையும் டிடிவி தினகரன் பெற்று வருகிறார் என்றும், அதனால் வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் துணையுடன் தமிழகத்தில் தேர்தலை பி.ஜே.பி சந்தித்தால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் உளவுத்துறை மத்திய பா.ஜ.க மேலிடத்துக்கு அறிக்கை அளித்ததுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.


இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடப்பாடி அரசுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது தேசத்துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பி.ஜே.பி.யினர் மீது தேசத்துரோகச் சட்டத்தை ஏவி கொடுமைப்படுத்துகிறார்கள், 
அதை நிறுத்த வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மோடி அவர்கள் கோரிக்கை விடுத்ததை இப்போது நினைவுகூர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆக, தேசத்துரோகச் சட்டத்தை எந்த மாநில அரசு துஷ்பிரயோகம் செய்தாலும் அதை தற்போதைய பிரதமர் மோடி எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்' என எடப்பாடி பழனிசாமி அரசைக் காட்டமாக விமர்சித்துள்ளது.

கருத்துகள் இல்லை: