சனி, 27 டிசம்பர், 2025

அமெரிக்க வலதுசாரி பாலக்காட்டு விவேக் ராமசாமி யார்

 Mo Jo  :  Loose lips sink ships...  நமக்கெல்லாம் "விவேக் ராமசாமி" பற்றி தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் நெடுங்காலம் வாழும் பாலக்காடு தமிழ் குடும்பத்தில் பிறந்த அமெரிக்க சங்கி. அமெரிக்க அரசியலில் காலூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் வலதுசாரிய கொள்கைகளை போற்றும் ஒருவர். பெரிய ஆச்சரியம் இல்லை.
நான் பார்க்கும் வரையில்,  அரசியலில் ஈடுபாடு கொள்ளும் அமெரிக்காவில் பிறந்த / அல்லது சிறு வயது முதல் அமெரிக்காவில் வாழும் முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கர்கள் தேர்ந்தெடுப்பது வலது சாரிய கட்சியாகவே இருக்கிறது. Bobby Jindal, Nikky Haley போன்ற முன்னுதாரணங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வலதுசாரிகளை ஆதரிப்பவர்களுக்கு பிறந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.


கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற சமயத்தில் DOGE என்றழக்கப் பட்ட (Department of Government Efficiency) அரசுத் துறையை உருவாக்கினார்கள். வீணான அரசு செலவுகளைக் குறைக்கும் வழிமுறைகளை, அரசாங்கத்தின் மற்ற துறைகளும் ஆலோசனைகள் வழங்குவதற்கெனறே தனியாக உருவாக்கப்பட்ட ஒரு துறை. அதற்கு தலைமை தாங்க,  Elon Musk-க்கு இணையான பதவியில் இவரும் நியமிக்கப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் அந்த அமைச்சகம் செயல்பாடுகளை ஆரம்பித்த சில நாட்களிலியே, இவரை  ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். Elon போன்ற ஒரு Aggressive Personality-யுடன் வேலை செய்வது அனைவராலும் முடியாது. ஒரு Data Center-ஐ ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றும் போது, கம்ப்யூட்டர்களை தானே தூக்கிச் சென்றதாக Walter Isaacson எழுதிய அவரது சுயபுராணத்தில் சொல்லியிருக்கிறார்.
அப்போதே எனக்கு இது நெடுநாள் தாங்காது என்று தோன்றியது. சென்னையில் படித்து, வளர்ந்த "அசோக் எள்ளுசாமி" எப்படி Tesla-வில் தாக்குப் பிடிக்கிறார் என்பது இன்னமும் ஆச்சரியம்தான். விவேக் ராமசாமியினால் தாக்குப்பிடிக்க முடியாமல், சப்பையான காரணங்கள் சொல்லி விலகினார்.
அதற்கு முக்கிய காரணம் அவர் வெள்ளையர்  அல்ல என்பதே எனது எண்ணம். எப்படித்தான் வெள்ளைக்காரர்கள் போன்றே "குரங்காட்டம்" போட்டாலும், நாம் அசல் குரங்குகளாகி விடமுடியாது.
 இன்னொரு முக்கியமான காரணமாக நான் கருதுவது, அவர் எழுதிய ஒரு Twitter பதிவு. அந்த முழுப் பதிவை முதல் பின்னூட்டத்தில் தந்துள்ளேன். அதன் சாராம்சம் என் மொழியில் கீழே.
---
"அமெரிக்க கலாச்சாரம் கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவதால்தான், நல்ல திறனான இளைஞர்கள் உருவாவதில்லை, அதனாலேயே திறமையானவர்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இருக்கின்றன. வாரக் கடைசியில் புத்தகங்களுக்கும், கணிதம் போன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தால்தான் அமெரிக்கா முன்னேறும். நாடோடி பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கேளிக்கைகளுக்கு பதிலாக புத்தகங்கள் கொடுப்பதால் அவர்கள் திறனாளர்களாக உருவாகிறார்கள்."
---
இந்திய-அமெரிக்க வம்சத்தின் முதல் தலைமுறை அமெரிக்கருக்கு அவ்வளவுதான் அறிவு இருக்கும். இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, பணிக்காக அமெரிக்கா வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பெற்றோர்களால் வளர்த்தெடுக்கப் பட்டவர்களை குறிப்பிட ABCD (American Born Confused Desis) என்ற ஒரு பதம் உண்டு. முழு இந்தியர்களாகவும், முழு அமெரிக்கர்களாவும் இல்லாமல் "ரெண்டுங் கெட்டான்"களாக வளர்ந்ததின் வெளிப்பாடுதான் அந்தப் பதிவு.
அமெரிக்காவில் வெள்ளையர்கள் தவிர மற்ற ஆசிய நாட்டினர் குடியேற ஆரம்பித்தது 1970-களுக்கு பிறகே.‌ இந்தியாவிலிருந்து மருத்துவர்களும், IIT எஞ்சினியர்களும் வர ஆரம்பித்தது அப்போதிலிருந்துதானே. 1990-களுக்கு பிறகுதான் H1-B விசாக்கள் உருவாக்கப்பட்டு, "கோழிப்பண்ணை கல்வித்தந்தைகள்" வழிவந்த என் போன்ற "Highly Skilled" திறனாளிகள் அமெரிக்காவுக்கு வந்து இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரு மாயையை நம்பி வளர்ந்த "ரெண்டுங்கெட்டான்" ஒருவரது உளறல்கள்.
1991-ல் வெளி வந்த "Inscrutable Americans" என்னும் புத்தகத்தில் வரும் கோபால் கதாபாத்திரத்தின் நிலைதான் இன்னும் பெரும்பாலான நாடோடி இந்தியர்களுக்கு. ஆங்கிலம் புரிந்தால் மட்டுமே போதாது, அவர்களின் உண்மையான மொழி, கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முற்பட வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ள மறுத்து, தாங்கள் செய்ததே / செய்வதே சரியென்று திடமாக நம்ப வைக்கப்பட்ட ஒரு சிறுவனின் சிறுபிள்ளைத் தனமான உணர்வுகளின் சிந்தனை.
அந்த கேளிக்கைத்தனமான கலாச்சாரத்தை பின்பற்றித் தான் அவர்கள் நிலவுக்கு சென்றார்கள், கம்ப்யூட்டர்களை உருவாக்கினார்கள், இண்டர்நெட்'டை கண்டுபிடித்தார்கள். இப்போது AI உருவாக்கியதும் அவர்களின் வழி வந்தவர்கள்தான். அவையனைத்துமே இறக்குமதி செய்யப்பட்ட திறனாளர்களுக்கு முன்பே.
அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டே அவர்களின் கலாச்சாரத்தை விமர்சனங்கள் செய்வதை எவ்வாறு உள்ளூர் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?
புத்தகங்களை உருட்டி, எண்களையே வெற்றிகளின் அளவு கோலாக வைத்து வளர்க்கப் படுபவர்கள் நாம். அதைத் தான் அவரும் வெளிக்காட்டி இருக்கிறார். தோல்வி பயத்தை உருவாக்கி வெற்றி பெற வைப்பதுதான் நமது வழக்கம். நம் வாழ்வில் தோல்விகளுக்கு இடமில்லை. சுதந்திர சிந்தனைகளுக்கு இடமில்லை. மதிப்பெண்கள் குறைந்தால் நிகழும் தற்கொலைகள்தான் நமது கல்வியின் கலாச்சாரம்.
ஒரே ஒரு பதிவினால் தனது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டார் இந்த இறக்குமதி செய்யப்பட்ட திறனாளர்.

கருத்துகள் இல்லை: