ஞாயிறு, 10 ஜனவரி, 2021

இந்தோனேஷியா விமானம் 62 பயணிகளுடன் கடலில் விழுந்து மூழ்கியதாக அச்சம்

dhinkaran : ஜகார்தா: இந்தோனேஷிய தலைநகரான ஜகார்தாவில் இருந்து கிளம்பிய 62 பயணிகளுடன் திடீரென மாயமானது. அது, கடலில் விழுந்து மூழ்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில் ‘
விஜயா ஏர்வேஸ்’ என்ற பெயரில் தனியார் விமான நிறுவனம் இயங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்நாட்டில் விமான போக்குவரத்து முழுமையாக நடக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், விஜயா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், தலைநகர் ஜகார்தாவில் இருந்து நேற்று மதியம் 62 பேருடன் போன்டியனாக் என்ற நகருக்கு புறப்பட்டது. ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, விமானத்துடன் இருந்த தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்தோனேஷியா விமான போக்குவரத்து அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அதிதா இராவதி கூறுகையில், ‘‘விஜயா என்ற பயணிகள் விமானம் நேற்று மதியம் 1.56 மணிக்கு ஜகார்தாவில் இருந்து கிளம்பியது. 737-500 வகை போயிங் விமானமான இதில் 56 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் சென்றனர். விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய 90 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் தேசிய மீட்புப்படையும், தேசிய போக்குவரத்துத்துறை பாதுகாப்பு அமைப்பும் இறங்கியுள்ளன,’’ என்றார். இந்நிலையில், ஜகார்தாவின் தொடர் தீவுகளான ஆயிரம் தீவுகள் பகுதியில் உள்ள கடலில் சில உலோக பாகங்களை மீனவர்கள் கண்டுள்ளனர். இது, காணாமல் போன விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதில் பயணம் செய்த 62 பேரின் கதியும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்தோனேஷியா விமானங்கள் விபத்தில்  சிக்குவது அடிக்கடி நடக்கிறது. கடந்த காலங்களில் நடந்த விபத்து பற்றிய விவரங்கள் இதோ:

* 1997ம் ஆண்டு கருடா நிறுவன விமானம், சுமத்ரா தீவு கடலில் விழுந்ததில் 234 பேர் பலியானார்கள்.
* 2014ம் ஆண்டு சுரபியா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்தது. இதில், 162 பேர் கொல்லப்பட்டனர்.
* 2018ம் ஆண்டு ஜகார்தாவில் இருந்து கிளம்பிய 737 மேக்ஸ் 8 வகை போயிங் விமானம், ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 189 பேர் பலியானார்கள்.

கருத்துகள் இல்லை: