திங்கள், 11 ஜனவரி, 2021

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன?

வாட்சாப்
சாய்ராம் ஜெயராமன் -  பிபிசி தமிழ்   :  வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுவது ஒருபுறமிருக்க, இந்தியர்கள் பெரியளவில் பின்தொடர்ந்து வரும் அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்க்கே வாட்சாப்க்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்துங்கள் என்று கூறுவதும், வாட்சாப் குழுக்களில் கூகுள் தேடல் வழியாக யார் வேண்டுமானாலும் உள்நுழைந்துவிட முடியும் என்ற சர்ச்சையும் பயன்பாட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இதுகுறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், மக்கள் உண்மையிலேயே வாட்சாப் செயலியிலிருந்து மற்ற செயலிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்களா என்று கூகுள் ட்ரெண்ட்ஸ் சேவையை கொண்டு பரிசோதித்து பார்த்தோம்.

அலறும் வாட்சாப் பயனர்கள்: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகளுக்கு மாற முடியுமா?

அதில் வியப்பளிக்கும் வகையிலான பதில்கள் கிடைத்தன. ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்புவரை வாட்சாப் வெப், வாட்சாப் ஸ்டேட்டஸ், வாட்சாப் கணக்குக்கான புகைப்படங்கள், ஏ.பி.கே கோப்பு பதிவிறக்கம் உள்ளிட்ட பயன்பாட்டு ரீதியிலான தேடல்களை மேற்கொண்டு வந்த பயனர்கள், தற்போது நேரெதிர்மறையாக வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வாட்சாப் மற்றும் சிக்னல் செயலிகள் குறித்த ஒப்பீடு, சிக்னல் செயலிக்கு மாறுவது எப்படி, வாட்சாப் - சிக்னல் - டெலிகிராம் குறித்த ஒப்பீடு, வாட்சாப் குறித்து ஈலோன் மஸ்க் கூறியது என்ன?, வாட்சாப்க்கு மாற்று என்ன? என்பது உள்ளிட்ட எண்ணற்ற கேள்விகளை கூகுள் தேடல் மூலம் முன்வைத்து வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, மேற்கண்ட தேடலை இந்திய அளவில் பார்க்கும்போது, குஜராத் முதலிடத்திலும், தெலங்கானா, சண்டிகர், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக கூகுள் கூறுகிறது.

அதுவே தமிழக அளவில் இதுதொடர்பான கூகுள் தேடல் குறித்த தரவை பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் என்ற பகுதியில் அதிகபட்சமாகவும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கழனிவாசல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் உள்ளிட்ட ஊர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் திருச்சி 16ஆவது இடத்திலும், தலைநகர் சென்னை 17ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தை பொறுத்தவரை, மாவட்ட தலைநகரங்களை விட இரண்டாம் கட்ட மற்றும் ஊரகப் பகுதிகளை சேந்தவர்களே இதுகுறித்து ஆவலோடு தேடி வருவதாக தெரிகிறது.

வாட்சாப்புக்கு மாற்று என்ன?

வாட்சாப்

சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்சாப் நிறுவனம் கடும் போட்டிமிக்க செய்தி பரிமாற்ற செயலிகளுக்கான சந்தையில் 200 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009ஆம் ஆண்டு வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட வாட்சாப்பின் வளர்ச்சியை கண்ட ஃபேஸ்புக் 2014இல் இதை கையகப்படுத்தியது.

எப்போது ஃபேஸ்புக் கட்டுப்பாட்டுக்கு வாட்சாப் சென்றதோ அப்போதே அது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்ற செயலிகள் மற்றும் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்ற அச்சத்தை தொழில்நுட்பவியலாளர்கள் முன்வைத்திருந்தனர். அது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தாமதமாகவே நடந்திருக்கிறதே தவிர, இதில் வியப்படைய ஒன்றுமில்லை


இலவச பயன்பாடு, சீரிய இடைவெளியில் புதிய சிறப்பம்சங்கள், செய்தி பரிமாற்றத்தோடு புகைப்படம், குரல் - காணொளி அழைப்பு தொடங்கி இப்போது பணப்பரிமாற்றம் வரை பல புதிய பரிமாணங்களை கண்டு வந்த வாட்சாப் தற்போது இந்த புதிய தனியுரிமை கொள்கை வெளியீட்டால் திணறி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்த புதிய கொள்கையால் பயன்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்று அந்த நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், வாட்சாப்பிலிருந்து வெளியேறும் எண்ணத்தில் பயன்பாட்டாளர்கள் இருப்பது இணைய தேடல் குறித்த தரவுகள் மூலம் நிரூபணமாகிறது.

இந்த நிலையில், வாட்சாப்புக்கு மாற்றாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் சில செயலிகள் குறித்த அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.

டெலிகிராம்:

டெலிகிராம்

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டெலிகிராம் செயலியை 14 மொழிகளில் பயன்படுத்த முடியும். லண்டனை தலைமையிடமாக கொண்டு, துபாயிலிருந்து செயல்படும் இந்த செயலியை உலகம் முழுவதும் 40 கோடி பேர் பயன்படுத்துவதாக ஸ்டட்டிஸ்டா இணையதளத்தின் தரவு கூறுகிறது. மேலும், உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் இது ஆறாவது இடத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை: