ஞாயிறு, 27 ஜூலை, 2014

அது என்ன 111 விதி ? கலைஞர் :110வது விதி என்பதற்குப் பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்:

110வது விதி என்பதற்குப் பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் சனிக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.ள்வி :- தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப் புப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் போகிறதாமே?
கலைஞர் :- தனியாருக்கு அப்படித் தாரை வார்த்தால்தானே “கமிஷன்” தொகையை கோடிக் கணக்கிலே பெற்று, அதில் ஒரு பகுதியை தேர்தல் நேரத்தில் பாமர மக்களுக்குக் கொடுத்து அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறமுடியும். முதலில் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் யோசனை வந்ததாம். அதற்கு எதிர்ப்பு கடுமையாக இருக்குமென்பதால், தற்போது நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க. அரசினர் வேகமாக இறங்கி விட்டார்களாம்.  வேறென்ன பட்டை நாமம்தான்


தமிழக நெடுஞ்சாலைத் துறையால் 11,594 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் - 11,289 கிலோ மீட்டர் மாவட்ட முக்கிய சாலைகள் - 34,160 கிலோ மீட்டர் மாவட்ட இதர சாலைகள் - 2,250 கிலோ மீட்டர் என மொத்தம் 57,043 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்புப் பணிகளில், முதல் கட்டமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட, 378 கிலோ மீட்டர் சாலையை, ஐந்தாண்டுகளுக்குப் பராமரிக்க 237 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டு விட்டதாம். இந்தப் பராமரிப்புப் பணிகளை இதுவரை சாலைப் பணியாளர்கள்தான் கவனித்து வந்தார்கள். அவர்களே தொடர்ந்து இந்தப் பணிகளை ஐந்தாண்டுகளுக்குக் கவனித்தால், 80 கோடி ரூபாய்தான் செலவாகும். 

தனியாரிடம் இந்தப் பணியைத் தாரை வார்ப்பதால், 157 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் உரிய காரணமின்றி அதிகமாகச் செலவிடப்படும். இதிலே நமக்குத் தெரியாத ஒன்று, இடையிலே அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு ரூபாயைக் கொடுத்தது என்பதுதான்! 

பொள்ளாச்சியைத் தொடர்ந்து ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் என வரிசையாக சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவ்வாறு செய்வதின் காரணமாக கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 9,600 சாலைப் பணியாளர்களின் பணியும் கேள்விக் குறியாகியுள்ளது. பரிதாபத்திற்குரிய அந்தச் சாலைப் பணியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். மக்கள் நலப் பணியாளர்கள், உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். சாலைப் பணியாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ? 

கேள்வி :- ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த “விஸ்வரூபம்” - நடிகர் விஜய் நடித்த “தலைவா” படங்களைக் கூறலாமே! “விஸ்வ ரூபம்” திரைப்படம் வெளிவருமா என்று இருந்த நிலை யையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமைச்சர் எண்ணியிருப்பார் அல்லது ஒரு வேளை கிண்டலாகச் சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கக் கூடும்! 

கேள்வி :- மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய முதலீட்டுக்கு அதிக வரவேற்பு அளிக்கப்படுகிறதே?

கலைஞர் :- இன்சூரன்ஸ் துறையிலே, அன்னிய நேரடி முதலீட்டு அளவை, தற்போதுள்ள 26 சதவிகிதத் திலிருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்க, மத்திய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் காரணமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு, இன்சூரன்ஸ் துறைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படு கிறதாம். ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலேயே இந்த முதலீட்டு வரம்பினை 49 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான இன்சூரன்ஸ் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. உட்பட பல அரசியல் கட்சிகளும் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அப்போது இந்த முடிவினை எதிர்த்த பா.ஜ.க., தற்போது ஆளுங் கட்சியாக வந்தவுடன், அதே முடிவினை எடுத்திருப்பது தவறான நடைமுறையாகும். அன்னிய முதலீட்டுக்கு வரவேற்பு, அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனை, பாதுகாப்புத் துறைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதற்குக் கூடத் தனியார் மயம் போன்ற நடவடிக்கைகள் பிற்போக் குத்தனமானவை மட்டுமல்ல; நமது பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்திடக்கூடியவை. 

கேள்வி :- “அம்மா” திரையரங்கம் கட்டப் போகிறார்களாமே?

கலைஞர் :- ஆமாம், சோழிங்கநல்லூரில் அம்மா திரையரங்கம் அமைப்பதற்கான இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்திருக்கிறார். சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் அருகிலே மாநகராட்சிக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கர் நிலத்தில் கடைகள், சென்னை குடிநீர் அலுவலகம் போக மீதமுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் “அம்மா” திரையரங்கம், அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைப்பதற்காக மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். “அம்மா” திரையரங்கம் தொடங்குவது வரை வந்திருக்கிறார்கள். இந்த “அம்மா” கூத்து எங்கே போய் முடியுமோ? 

அ.தி.மு.க.வினர் சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளு மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் அவர்களைப் பெருவாரியாக ஆதரிக்கிறார்களாம். அதனால் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டு மென்றாலும் செய்வார்கள். 

கேள்வி :- கடலாடியில் 1,500 கோடி ரூபாயில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப் படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த அறிக்கையில் சொன்னதுதானே? 110வது விதி என்பதற்குப் பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்! 

கேள்வி :- சமஸ்கிருத வாரம் தமிழகத்திலே கொண்டாடுவதற்குத் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது பற்றி?

கலைஞர் :- சமஸ்கிருத வாரம் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் தமிழுக்கு வாரம் கொண்டாட வேண்டுமென்றும் கூறியிருந்ததை நான் படித்த போது, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் குட்டிகளுக்கு தாரா என்றும் மீரா என்றும் பீமா என்றும், நர்மதா, அனு என்றும், திருவரங்கத்தில் “யாத்ரி நிவாஸ்” என்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியது தான் நினைவுக்கு வந்தது. புலிக்குட்டிகளுக் குப் பெயரிடக் கூடத் தமிழ்ப் பெயர்களா கிடைக்க வில்லை? இந்த அழகில்தான் “தமிழ்ச் செம்மல்” விருது அறிவித்திருக்கிறார். முதல் விருதை முதல்வருக்கே வழங்கலாமே? 

அ.தி.மு.க. அரசுக்குத் தமிழ் மீது உள்ள பற்றுக்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், தோல்வியே காணாத தமிழ் மன்னன், “அலைகடல் மீது பல கலம் செலுத்தி” பல நாடுகளை வென்றெடுத்த தமிழ் மன்னன், சோழ அரசை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா கங்கைகொண்டசோழ புரத்தில் தனியார் முயற்சியால் நடைபெறுகிறது. தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவைத் தஞ்சையில் தமிழக அரசு சார்பில் வெகு சிறப்பாக நடத்தி, அதில் நானே சென்று கலந்து கொண்டேன். தற்போது நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கூட அல்ல, வேறு எந்த ஒரு அமைச்சராவது பங்கேற்கிறார்களா? இது ஒன்று போதாதா, இந்த ஆட்சியினருக்கு தமிழ் மீதும், தமிழ்ப் பாரம்பரியத்தின் மீதும் எவ்வளவு அக்கறை என்பதை வெளிப்படுத்த? 

கேள்வி :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீதும் அவதூறு வழக்கா?

கலைஞர் :- ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மணல் கடத்தல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தாராம். அது முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே உள்ளது என்று முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குத் தொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களில் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் அனைவர் மீதும் அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடுத்த கட்டம்தான் இது! வாழ்க கருத்துச் சுதந்திரம்; வாழ்க ஜனநாயகம்! 

கேள்வி :- வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக முடிக்க வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் படி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறாரே?

கலைஞர் :- நல்ல யோசனை! பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய யோசனை. இந்தத் திட்டம் அப்போதே எடுக்கப்பட் டிருந்தால், பலருடைய உண்மை உருவம் உலகத் திற்குத் தெரிந்திருக்கும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: