வெள்ளி, 29 ஜூன், 2018

எட்டப்பன் எடப்பாடியின் எட்டுவழிச்சாலை

savukkuonline.com 26 ஜுன் அன்று சட்டப்பேரவையிலே 8 வழிச்சாலையை நியாயப்படுத்திய பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை அமைவதால், வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று பேசினார்.  இதைக் கேட்டதும் இவர் முதல்வரா லாரி கிளினரா என்ற சந்தேகம் எழுந்தது.   ஒரு வளர்ச்சித் திட்டத்தை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் பேசுவது இயல்பு.  ஆனால் தேய்மானம் குறையும் என்ற அளவுக்கு ஒரு முதல்வர் பேசும் அளவுக்கு ஏன் செல்கிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
சேலத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து, சக பத்திரிக்கையாளர்கள் இருவரை அழைத்தபோது, அவர்கள் வருகிறேன் என்று வாக்களித்தார்கள்.   26 ஜுன் அன்று, திருவண்ணாமலையில், 8 வழிச் சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறை கைது செய்து, செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டு, பல மணி நேரம் கழித்து விடுவித்த செய்தி வெளியானதும், வருகிறேன் என்று கூறிய அந்த இரண்டு பத்திரிக்கையாளர்களுமே, கடைசி நிமிடத்தில் இந்த கைதுகளை சுட்டிக்காட்டி வர இயலாது என்று கூறியதோடு, என்னையும் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.

திட்டமிட்டபடி நான் மட்டும் தனியாக சேலத்துக்கு கிளம்பினேன்.  அதிகமாக விளைநிலங்கள் பாதிக்கப்படும் பகுதியாக அறியப்பட்ட, பகுதியான குப்பனூர் பகுதிக்கு சென்றேன்.  16 மே 2018 அன்று முதன் முறையாக செய்தித்தாளில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.  அந்த அறிவிக்கையில் 21 நாட்களுக்குள், இந்த நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.   அறிவிக்கையை பார்த்த உடனேயே, கிராம மக்கள், உடனடியாக மனு எழுதி தங்கள் எதிர்ப்புகளை வருவாய் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

முதலில் வருவாய்த் துறை அதிகாரிகள் வருகை தந்தது, ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்துக்கு.   அந்த 21 நாட்கள் முடிந்த 6 ஜுன் அன்றே அதிகாரிகள் அளவு கற்களை நட வருகின்றனர்.
உடனடியாக கிராமத்தினர் ஒன்று கூடி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே எப்படி நீங்கள் கற்களை நட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.  நாங்கள் விளை நிலங்களில் கற்களை நட வரவில்லை.   அரசு நிலத்தில்தான் கற்களை நட வந்துள்ளோம் என்று பம்மிய அதிகாரிகள், உடனடியாக மதியம் 2 மணிக்கு தண்ட்டோரா போட்டு, அன்று மாலை 5 மணிக்கே கூட்டம் என்று அறிவிக்கின்றனர்.
கிராமத்தினர் அனைவரும் கூடி, சுமார் 40 பேர், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று மனு எழுதி ஆர்டிஓ மற்றும் தாசில்தாரிடம் அளிக்கின்றனர்.   இது நடப்பது ஜூன் 6 அன்று.   இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது.  அந்த விவகாரங்கள் குறித்து, குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் பேட்டியளிக்கிறார்.
8 ஜுன் அன்று காலை 4 மணிக்கு, நாராயணன், ரவி, பழனியப்பன், முத்துக்குமார், பழனியப்பன், கந்தசாமி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.   இதில் ரவி, பழனியப்பன், கந்தசாமி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் காலை 7 மணிக்கு விடுவிக்கப்படுகின்றனர்.  கிராம மக்கள் ஒன்று கூடி, நாராயணன் மற்றும் முத்துக்குமார் வைக்கப்பட்டிருந்த அம்மாபேட்டை காவல் நிலையத்தை நோக்கி செல்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறுகிறன்றனர்.  மதியம் 2 மணிக்கு நாராயணன் மட்டும் விடுவிக்கப்படுகிறார்.

நாராயணன் மற்றும் அவர் தந்தை செவத்தராஜன்
அது வரை நாராயணனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணை என்னவென்றால், எந்த நக்சல் இயக்கத்தோடு அவருக்கு தொடர்பு ?  யார் அவருக்கு ஹேன்ட்லர் (தொடர்பாளர்), இடது சாரிகள் இயக்கத்தில் அவருக்கு என்ன பொறுப்பு உள்ளிட்டவை.
முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.  என்ன வழக்கு தெரியுமா ?   காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடிபோதையில் முத்துக்குமார், நான் ரவுடி டா என்று கத்தியவாறே, பேருந்து கண்ணாடிகளை உடைக்க முற்பட்டபோது, அவர் கைது செய்யப்பட்டார் என்பதே அந்த வழக்கு.
அளவு கற்கள் நடுகையில் அந்த இடத்தில் இருந்த வெங்கடேஷ் பேசுகையில், “ஒவ்வொரு நாளும் மிகுந்த அச்சுறுத்தலிலேதான் வாழ்கிறோம்.  எங்கள் வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்பதை காவல்துறையினர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மனு எழுதினால் கூட, அதில் என்ன இருக்கிறது என்பதை முன்னதாகவே கூற வேண்டும் என்று காவல் துறையினர் நிர்பந்திக்கிறார்கள்.
கடந்த வாரம் அளவுக் கற்கள் நட வந்தபோது கூட, எங்களில் யாரையுமே பேச விடவில்லை.  யாராவது பேசினால், இது உன் நிலமா ?  நிலத்தின் சொந்தக்காரர் மட்டுமே பேச வேண்டும் என்று கூறி, வேறு யார் பேசினாலும், உடனே காவல் துறையை வைத்து, கைது செய்து ஜீப்பில் ஏற்றி விடுகிறார்கள்.   அளவு முடிந்ததும் ஜீப்பில் இருந்து இறக்கி விடுகிறார்கள்.  இது என்ன ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா ?” என்றார்.
வெங்கடேஷ்
அவரே தொடர்ந்து “திருவண்ணாமலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் 8 வழிச் சாலை திட்டம் தொடர்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன்.   அது ஒரு அரங்கக் கூட்டம்.   முதலில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தை காவல்துறை மிரட்டி ரத்து செய்த்து.  அந்த ஊரில் இருந்த பல திருமண மண்டபங்களை அணுகினோம்.  காவல்துறை மிரட்டல் காரணமாக அனைவரும் மறுத்து விட்டனர்.
பிறகு, விவசாயிகள் சங்கத் தலைவர்கள், ஷாமியானா போட்டு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.  ஷாமியானா போடும்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இறுதியாக திருவண்ணாமலை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டம் நடைபெற்றபோது, கூட்டத்துக்கான இடம் மாற்றப்பட்டது தெரியாமல், கிராமத்தினர் 25 பேர், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு வந்தனர். வந்த 25 பேரையும் காவல் துறை கைது செய்தது.  எங்கள் கூட்டம் முடிந்ததும்,  நாங்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று, காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்னரே, அந்த 25 பேரும் விடுவிக்கப்பட்டனர்.   ஏன் இத்தகைய நெருக்கடி நிலை போன்ற சூழலை அரசு உருவாக்குகிறது ?  அப்படி இந்த திட்டத்துக்கு என்ன அவசரம் ?” என்றார் வெங்கடேஷ்.
அரசு கையகப்படுத்த இருந்த நாராயணனின் நிலம் மற்றும் வீட்டின் நேர் வழியே 8 வழிச் சாலை செல்கிறது.    சாலையின் இரு மருங்கிலும் 4 சென்ட்டுகள் நிலம் மட்டுமே அவருக்கு மிஞ்சும்.  பசுமை கொஞ்சும் சோலையாக இருக்கிறது அந்த நிலம்.  கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன.  ஆடுகள் கட்டிப் போடப்பட்டிருந்தன.  தென்னை மரங்கள் காற்றோடு சேர்ந்து ஒயிலாக ஆடிக் கொண்டிருந்தன.
எங்களுக்கு இந்த வீடும் நிலமும் மட்டுமே வாழ்வாதாரம் என்றார் நாராயணன்.
நாராயணனின் வீட்டுக்கு அருகே இருப்பவர் எஸ்.கே.கிருஷ்ணன். இவர் வயது முதிர்ந்த நாடகக் கலைஞர்.  இவருக்கு நிலம் போகிறதே என்ற பிரக்ஞை இல்லை.   இந்த இடத்துக்கு இவர் வந்த்து எழுபதுகளில்.   சேலம் இரும்பு உருக்காலைக்கு இடம் எடுக்கப் போகிறார்கள் என்று பயந்துபோய் அதனருகே இருந்த இவரது பல ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு,  குப்பனூர் கிராமத்தில் நிலம் வாங்கி இருந்து வருகிறார்.

நாடகக் கலைஞர் எஸ்கே.கிருஷ்ணன்
தற்போது இந்த இடமும் போகப் போகிறதே என்பதை விட, அவருக்கு தனது பழைய நாடகங்களைப் பற்றி பேசுவதில் அத்தனை ஆர்வம்.  கஞ்சமலை காவியம்,  என்று அவர் எழுதி நடித்த 68 நாடகங்களைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்.   தற்போது திரைப்படத்தில் பிரபலமாக உள்ள ரோபோ சங்கரின் தந்தையும், இவரும் ஒன்றாக நாடகம் போட்டவர்கள்.
அவரிடம் உங்கள் நிலம் எவ்வளவு போகிறது என்று கேட்டபோது, “எல்லாம் போகிறது.  அதோ அந்த கிணறில் பாதி போகிறது” என்றார்.  பாதி கிணறை வைத்து என்ன செய்வீர்கள் என்றதற்கு, சிறிது நேரம் யோசித்து விட்டு மீண்டும் நாடகக் கதைக்கே வந்து விட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் பேசுகையில், “நாங்கள் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் இல்லை.  வளர்ச்சித் திட்டங்கள் அவசியமே என்பது எங்களுக்கும் தெரியும்.   நாம் இப்போது அமர்ந்து பேசும் இந்த இடத்தில்தான் 8 வழிச்சாலை வருகிறது.   இந்த இடத்திலிருந்து 500 மீட்டரில்தான், சேலம்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை உள்ளது.  இந்த மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, 4 வழிச் சாலையாக மாற்ற ஒரு வருடம் முன்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.   தற்போது உள்ள சாலையின் இரு மருங்கேயும் நிலத்தை கையகப்படுத்த கூட்டம் நடத்தப்பட்டது.  அந்த பகுதியில் கடைகள் மற்றும் வீடுகள் வைத்திருப்பவர்கள் அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
செல்வராஜ்
அவர்களில் பலர் நிலத்தை கையகப்படுத்த சம்மதம் தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.   எந்தெந்த கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்பது கண்டறியப்பட்டு அந்த கட்டிடங்களில் எண் பொறிக்கப்பட்டது.  ஆனால் ஒரு ஆண்டுகளை கடந்தும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேயில்லை.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டரில் இருக்கும் சாலையை அகலப்படுத்துவது எளிதான காரியம்தானே ?  அதை விடுத்து எதற்காக விளைநிலங்களை அழித்து புதிய சாலையை உருவாக்குகிறார்கள் ?” என்று கேள்வி எழுப்பினார் செல்வராஜ்.
அவரே தொடர்ந்து, தற்போது அமைய உள்ள 8 வழிச்சாலைக்கு வலது புறம், 600 மக்கள் வசிக்கிறார்கள்.   அவர்கள் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல தேவைகளுக்கு சாலையை கடந்துதான் வர வேண்டும்.  8 வழிச் சாலை அமைக்கப்பட்டால், இங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் மஞ்சவாடி அருகே அமையப் போகும், அடிப் பாலம் வழியாகத்தான் சாலையை கடக்க வேண்டும். தற்போது இது வெறும் 500 மீட்டர்.” என்றார்.
நாராயணனின் தந்தை செவத்தராஜன், “புது ரோடு போட்டு, ஆயிரக்கணக்குல வண்டிங்க போச்சுன்னா, ரோடுக்கு ரெண்டு பக்கமும் எப்படி விவசாயம் செய்ய முடியும் ?   இந்த புகையில் மகரந்தச் சேர்க்கையே நடைபெறாதே.  பிறகு எப்படி விவசாயம் செய்ய முடியும் ?” என்றார்.
ஆச்சாங்குட்டப்பட்டியில் வசிப்பவர் சிலம்பரசன்.   இவர்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கிறது.  செழிப்பாக விளையும் பூமியில் நெல் பயிரிடுகிறார்கள்.    எங்களிடம் கிணறு இருக்கிறது.  நாங்கள் போர் கூட போடாமல் கிணற்று நீரில்தான் விவசாயம் செய்கிறோம் என்று பெருமையோடு கூறினார். இவர்களின் வீடு, சேலம்-திருப்பத்தூர் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது.
“நாங்க வளர்ச்சி வேண்டாங்கல சார். இதோ இந்த ரோட்டை அகலப்படுத்துறதுக்கு என்ன சார் கேடு இவங்களுக்கு.   தெனமும் லாரிக்காரன் கன்னா பின்னான்னு வேகமா போயி அடிக்கடி ஆக்சிடன்ட் ஆகுது.    இந்த ரோட்டை 4 வழிச்சாலையா போட்டா, எங்க வீடு அடிபடும்.  ஆனா பரவாயில்ல.  எங்களுக்கும் அந்த ரோடு உபயோகமா இருக்கும்.
சிலம்பரசன்
சிலம்பரசனனின் நிலம்
சேலம்-திருப்பத்தூர் சாலை. அதன் நேரே தெரியும் நிலத்தின் வழியேதான் 8 வழிச் சாலை செல்லப் போகிறது
வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்றாங்களே.  சென்னையில இருந்து மதுரை வரைக்கும் 4 லேன் இருக்கு.  பெங்களுர் வரைக்கும் 4 லேன் இருக்கு.  இந்த ரோடுங்க பத்து வருசத்துக்கு மேல இருக்கு.  என்ன சார் தொழில் வளந்துடுச்சு இந்த பத்து வருசத்துல ? ” என்றார்.
அவர் சொல்வது உண்மைதானே ?   இந்த சாலைகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றன.   என்ன தொழில் வளம் பெருகி விட்டது தமிழகத்தில் ? 1996-2001 திமுக ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூரில் உருவான தொழிற்சாலைகளுக்கு பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரே ஒரு தொழிற்சாலைகள் கூட தமிழகத்தில் உருவாகவில்லை.  பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலை தவிர்த்து.   அந்த தொழிற்சாலையும் ஆ.ராசாவின் முயற்சியால் உருவானது.    இந்த 18 ஆண்டுகளில் உருவாகாத எந்த தொழிற்சாலை இந்த புதிய 8 வழிச் சாலையால் உருவாகப்  போகிறது ?
சிலம்பரசனின் தாயார் அமுதா பேசுகையில் “6 தலைக்கட்டா விவசாயம் பாத்துக்குட்டு இருக்கோம் தம்பி. எங்களுக்கு விவசாயத்தை தவிர எதுவுமே தெரியாது.    என் கையைப் பாருங்க எப்படி காப்பு காய்ச்சி கிடக்கு.   இதுதான் எங்களுக்கு தொழில். இதுதான் எங்களுக்கு தெய்வம்.   இதை எப்படி தம்பி நாங்க விட்டுட்டுப் போக முடியும்.
அமுதா
அரசாங்கம் இயற்கை விவசாயம் பண்ணுங்கன்னு சொல்லுது.  நாங்களும் இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்.  இதை விட்டுட்டு போங்கன்னு இப்போ அரசாங்கமே சொன்னா அது என்ன நியாயம் ? ” என்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் போதுமான இழப்பீடு வழங்கப்படும். கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறுகிறாரே என்பதை சுட்டிக்காட்டியதும் அமுதா ”அந்த அம்மா விவசாய நிலம் கொஞ்சம்தான் இருக்கு.  எல்லா விவசாயிகளும் இதுக்கு ஒத்துக்குறாங்கன்னு கூசாம பொய் சொல்லுது.  நாங்க அத்தனை பேரும் இந்த திட்டத்தை எதுக்குறோம்.  எங்களை மாதிரி விவசாயிங்க ஒரு நாளும் நிலத்தை விட்டுக் குடுக்க மாட்டாங்க.
அந்த அம்மா சொல்றபடி, விவசாயிகள் தாங்களாவே நிலத்தை தர்றாங்கன்னா எதுக்காக 500 போலீசோட வர்றாங்க.  தனியா வர வேண்டியதுதானே ?” என்றார்.
தொடர்ந்த அமுதா, “அதிகாரிங்களை கேட்டா, எந்த நிலம், எவ்வளவு நிலம் தேவைப்படுதுன்றதை தெரிஞ்சிக்கறதுக்காகத்தான் நாங்க கல்லு நடுறோம்னு சொல்றாங்க.  எந்த நிலம்னே தெரியாம பேப்பர்ல எப்படி நிலத்தை பத்தி விளம்பரம் குடுத்தாங்க.  சர்வே நம்பர் உட்பட, எது அரசு நிலம், எது தனியார் நிலம்னு தெளிவா விளம்பரம் குடுத்துருக்காங்க.  நிலம் எதுன்னு தெரியாமத்தான் விளம்பரம் குடுத்தாங்களா” என்று கேள்வி எழுப்பினார் அமுதா.
சேலம் மாவட்ட நில ஆர்ஜித வருவாய் அதிகாரி நில உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ள சுற்றறிக்கையின்படி, சேலம் 8 வழிச் சாலைக்கான நில ஆர்ஜிதம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், 10 ஜுலை 2018, காலை 10 மணிக்கு, வாழப்பாடி வட்டம், அயோத்தியாப்பட்டினம், கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நில ஆர்ஜிதம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டமே 10 ஜுலை அன்றுதான் நடைபெற உள்ளது.
ஆனால் எட்டப்பர் எடப்பாடி எதற்காக 80 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டது என்று சட்டப்பேரவையில் கூசாமல் பொய் சொல்கிறார் ?
https://youtu.be/_UGXWQmJnAc
அடுத்து ஒரு கிராமத்துக்கு சென்றபோது, அவர்கள் புதிதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார்கள்.
சேலம்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரகன் செருப்புத் தொழிற்சாலை, திமுக பிரமுகரின் எஸ்ஆர்எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் மன்னர்பாளையத்தில் அதிமுக பிரமுகரின் க்ரஷர் தொழிற்சாலை ஆகியவை இடிபடாமல் தடுப்பதற்காகவே விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்றார்.
பாரகன் தொழிற்சாலை மற்றும் அதன் நேரெதிரே அமைந்துள்ள தோட்டம்.
பாரகன் செருப்புத் தொழிற்சாலை சேலத்திலிருந்து திருப்பத்தூர் செல்கையில் சாலையின் வலதுபுறம் அமைந்துள்ளது.  தற்போது 8 வழிச் சாலைக்காக பாரகன் தொழிற்சாலையின் நேர் எதிரில் உள்ள ஒரு தனியார் தோட்டம் மற்றும் வன நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.  அது வரை, இச்சாலையின் இடதுபுறம் வரும் 8 வழிச்சாலை, சரியாக, அச்சநாங்குட்டப்பட்டி வந்ததும், சாலையின் வலதுபுறம் சரியாக விளைநிலங்களின் ஊடே திரும்புகிறது.
இந்தத் தகவலை சொன்னவர், மற்றொரு தகவலையும் கூறினார். சேலத்திலேயே பிரபலமான சாகோ தொழிற்சாலை வரலட்சுமி ஸ்டார்ச் இன்டஸ்ட்ரீஸ்.  1984ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது இந்நிறுவனம்.  சேலத்திலேயே நம்பர் ஒன் சாகோ நிறுவனம் இதுதான்.  இந்த நிறுவனத்தை எடப்பாடி பழனிச்சாமி தனது பினாமி மூலமாக வாங்கி விட்டதாக தெரிவித்தார் அவர்.   இத்தகவலை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்னர், இந்நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொடர்பாக பெரிய சிக்கல் எழுந்தபோது விஷயம் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  அப்போது நிர்வாகத்துக்கு சாதகமாக தொழிலாளர்கள் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார் என்ற தகவலை, இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவர் உறுதி செய்தார்.
வரலட்சுமி சாகோ பேக்டரி
இந்த வரலட்சுமி சாகோ தொழிற்சாலை அடிபடாத வகையில் 8 வழிச்சாலைக்கான பாதை திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சேலத்திலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது வரலட்சுமி சாகோ தொழிற்சாலை.  அத்தொழிற்சாலையில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, பேச மறுத்தார்கள்.
சேலம் திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது.  23 நவம்பர் 2018 அன்று, மாநில நெடுஞ்சாலைகள் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த சாலையை மேம்படுத்துவதற்காக 22 கோடி நிதியை கேட்டு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  பராமரிப்புக்காக 22 கோடியை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, இச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையில்லை.
சேலம் திருப்பத்தூர் சாலை
சேலம் திருப்பத்தூர் சாலை தொடர்பாக எடப்பாடி எழுதிய கடிதம்.
அந்த சாலையில் பாப்பிரெட்டிப்பட்டியை நோக்கிப் பயணிக்கையில் வழி நெடுக, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 8 வழிச் சாலைக்காக அளவீடு செய்து கொண்டிருந்தனர்.   அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, வெறும் 60 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே கையகப்படுத்தப் படப்போகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது பச்சைப் பொய் என்பது.   அந்த சாலையில் இருமருங்கிலும் வனமே உள்ளது.   அது மலையடிவாரம்.  அந்த மலையை ஒட்டித்தான் 8 வழிச் சாலைக்கான பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் 8 வழிச் சாலை செல்லும் வனப்பகுதி

அடுத்ததாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த ஊரான பூலாவரி கிராமத்துக்கு சென்றேன்.   பாரப்பட்டி, பூலாவரி, பிஞ்சிக்காடு ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
பிஞ்சிக்காடு கிராமத்தில் உள்ளவர் லட்சுமி.   அவருக்கு அரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளது. அதன் அருகிலேயே வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.
அச்சநாங்குட்டப்பட்டியைப் போல இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை.
லட்சுமி அவருக்கு உள்ள அந்த நிலத்தில் அரளிப் பூ பயிரிட்டுள்ளார்.  அதில் மாதம் 8 ஆயிரம் வருமானம் வரும் என்றார்.   அவருக்கு இரண்டு பிள்ளைகள்.  அந்த வருமானம் போதுமா என்று கேட்டால், இரவு நேரத்தில் பூ பறிப்பேன். பகலில் கோல மாவு அரைக்கும்  வேலைக்கு செல்வேன் என்று கூறினார்.
லட்சுமியின் அரளித் தோட்டம் மற்றும் அவர் வீடு
அவரது வீடு நிலம் முழுமையாக போகப் போகிறது என்பது அவருக்கு தெரிகிறது.  ஆனால் அது குறித்த கோபம் அவரிடம் இல்லை.  ஏன் கோபம் வரவில்லை என்றால் “என்னா சார் பண்றது. கவுருமென்டு எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்ண முடியும் ?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்.
லட்சுமியின் வீட்டுக்கு நேரெதிரே 65 வயதான சித்த நாயக்கரின் நிலம் மற்றும் வீடு இருக்கிறது.  அவரின் நிலத்தில் கால் பகுதி 8 வழிச் சாலைக்காக எடுக்கப்பட்டு விடும்.  அவருக்கு ஒரே ஒரு மகன்.   என்னை பார்த்ததும் “என்னய்யா சாப்புட்றீங்க” என்று வெள்ளந்தியாக கேட்டார்.  உங்கள் நிலத்தில் கால் வாசி போய் விடும் என்று கூறியதும், “அதான் மீதி நெலம் இருக்குல்ல.  அதுல வெள்ளாம பண்ணுவேன்” என்றார்.   நீங்கள் நிற்கும் இடத்தின் அருகே சாலை வரப் போகிறது.  அந்த சாலையை நீங்கள் கடக்க முடியாது.  எதிர் புறம் செல்ல வேண்டுமென்றால், 4 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்று கூறியதும் அவருக்கு அதிர்ச்சி. ”என்னய்யா சொல்றீங்க. அதுக்கு எதுக்கு 4 கிலோ மீட்டர் போகணும்” என்றார்.  தடுப்புச் சுவர் அமைக்கப்படும் உங்களால் சாலையை கடக்க முடியாது என்றதும் அவர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
சித்த நாயக்கர்
உங்க எம்எல்ஏகிட்ட கேட்டீங்களா என்று கேட்டதும், ”அவங்க கால்ல கூட விழறேன்னு சொல்லிப் பாத்துட்டேன்.  அரசாங்கம் சொன்னா கேக்கணும்னு சொல்லிட்டாங்க” என்றார். ”உங்க கால்ல கூட விழறேன். ஏதாவது பண்ணுங்க” என்றார்.  அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சென்ற பல கிராமங்களில் இருந்தவர்களில் ஒருவரிடம் வெளிப்படையாக கேட்டேன்.  எப்படியும் அரசாங்கம் உங்க நிலத்தை எடுத்துக்கத்தான் போகுது.  என்ன பண்ணுவீங்க என்றதற்கு, “சார். இது எங்க உயிரு.  இதை எடுக்க விடவே மாட்டோம்“ என்றார்.   தூத்துக்குடியில நடந்தது மாதிரி சுடுவாங்க. என்ன பண்ணுவீங்க என்றேன். “எத்தனை பேரை சார் சுடுவாங்க.  இத்தனை கிராமத்துல உள்ள அத்தனை பேரையுமா சுடுவாங்க. சுடட்டும் சார்.  எங்க பொணத்து மேல ரோடு போடட்டும்.  என் உயிரு போனாலும் இந்த நெலத்தை எடுக்க விடவே மாட்டேன்“ என்றார்.  அந்த கிராமத்தின் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிர்த்த காரணத்தை நான் சொல்லவேண்டியதில்லை.  இன்றே காவல்துறையினர் அந்த கிராமத்தில் திடீர் நக்சலைட்டுகளை கண்டுபிடிப்பார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த 8 வழிச்சாலை திட்டம் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மக்கள் விரோத திட்டம்.  இத்திட்டத்தை எதிர்ப்பதற்காக, என் முழு உழைப்பையும் நான் செலவிடுவேன்.   இந்த மக்களோடு நான் என்றும் நிற்பேன்.
எடப்பாடி பழனிச்சாமியைப் போன்ற எத்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த எத்தர்களைப் பற்றித்தான் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
யார் கொள்ளைக்காரன் என்பதை சொல்லவும் வேண்டுமா ?

கருத்துகள் இல்லை: