வெள்ளி, 27 மார்ச், 2015

ராமானுஜர் வரலாற்று தொடர் கலைஞர் டிவியில்! வசனம் கலைஞரேதான்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ராமானுஜரைப் பற்றிய தொடரை எடுங்கள் என்று நடிகையும் இயக்குநருமான குட்டிபத்மினியிடம் உத்தரவிட்ட கலைஞர் கருணாநிதி, அந்த தொடருக்கு அவரே வசனம் எழுதப்போகிறார். 11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த சமய சீர்திருத்தவாதியும், வைணவ சீர்திருத்தவாதியும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவருமான, ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மீக துறவியான ராமானுஜரின் வரலாற்றை எழுத கருணாநிதியின் பேனா தலை வணங்குமா என்பதுதான் இப்போது பலரது கேள்வியாக உள்ளது. அதற்கான பதிலை தொடரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் கருணாநிதி.
வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ராமானுஜர்' நெடுந்தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதப் போகிறார் என்று கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பெயர் வைப்பதில் இருந்து சீரியல்களுக்கு கதை வசனம் எழுதுவது வரை இன்றைக்கும் சுறுசுறுப்பாக இருக்கிறார்
கருணாநிதியின் ஆலோசனை ராமானுஜர் குறித்த தொடரை எடுப்பதற்கான யோசனையைத் தந்தவரே அவர்தான் என்கிறார் தொடரின் இயக்குனரும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ராமானுஜரைப் பற்றிய தொடரை எடுங்கள். ஆனால், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் உள்ளது உள்ளபடியே எடுங்கள். எடுத்ததற்கெல்லாம் மேல் உலகத்தைக் காட்டாதீர்கள் என்று அறிவுரை கூறினாராம்
இப்படிச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் குட்டி பத்மினியைக் கூப்பிட்டு அவரிடமிருந்த ராமானுஜர் குறித்த 15-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொடுத்தாராம்.
மானுஜர் தொடருக்கு வசனம் எழுதுவது பற்றி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருணாநிதியோ, என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை. ஆமாம், உண்மைதான் என்று கூறியுள்ளார்
குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் எல்லாம் சிறந்த ஆன்மிகவாதிகள் என்றபோதிலும், அவர்களுடைய தமிழுக்காகவும் சாதி, மதப் புரட்சிகளுக்காகவும் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம்.
கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்துவைத்தேன். எனவே, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று கூறியுள்ளார்
இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாக பொருள் கொள்ளக்கூடாது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
ரோமாபுரி பாண்டியன் தொடரை இயக்கும் தனுஷ்தான் எபிசோடு இயக்குநர். குட்டி பத்மினி தொடரின் இயக்குநராம். கருணாநிதி ஏற்கனவே கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார்
விசிஷ்டாத்வைதத்தை உலகுக்கு அளித்த ராமானுஜரின் ஆன்மிக இறை அனுபவங்களை எழுதுவதற்கு கருணாநிதியின் பேனா தலைவணங்குமா என்று அவரிடம் கேட்டால், அதற்கு சிரிக்கும் அவர், ‘என் பேனா தலைவணங்கி இருக்கிறதா என்பதை தொடரைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளாராம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகத்ரட்சகனின் ஆழ்வார்கள் ஆய்வு மையம் விழாவில் பங்கேற்ற கருணாநிதி, ராமானுஜர் பற்றி விரிவான உரை நிகழ்த்தினார். மதத்திற்குள் ராமானுஜர் ஏற்படுத்திய புரட்சி, தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்தது, அதனால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அதை அவர் எதிர்கொண்ட முறை இவை பற்றியெல்லாம் பேசினாராம். இதன் காரணமாகவே ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடருக்கு வசனம் எழுதப்போகிறாராம்
கருணாநிதியின் இந்த முயற்சியை பகுத்தறிவு இயக்கத்திற்கு எதிரானதாகப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி.
ராமானுஜரைப் பற்றி நூல்களை எழுதியவரான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியிடம் இந்தத் தொடருக்கு வாழ்த்தைப் பெறும்படி கருணாநிதி கூறியிருக்கிறார். அந்தக் காலத்திலேயே ஒருவர் இவ்வளவு சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கிறாரே என்பதால் கருணாநிதி இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி. கருணாநிதி ஆன்மீகத்தை நாடுகிறாரோ என்றும் தனக்குத் தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் ராமானுஜர் படத்தை பதிவுசெய்து, தன்னுடைய கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார் கருணாநிதி. ராமானுஜர் தொடர் வரும் மே மாதத்திலிருந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: