1987 மீரட் கலவரத்தின் போது உத்தர பிரதேச சிறப்பு ஆயுதப் படையினர். (படம் : நன்றி frontline)
இந்தியாவின் படுகொலைகளில் முக்கியமான ஒன்றான ஹாஷிம்புரா படுகொலை 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்தது. உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தின் போது உ.பி மாநில சிறப்பு ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் ஹாஷிம்புரா பகுதியைச்சேர்ந்த முசுலீம் இளைஞர்கள் 65 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகருக்கு அருகில் சுட்டுக் கொன்ற போலீஸ் கயவர்கள், உடல்களை அருகாமையில் உள்ள கால்வாய்களில் வீசிச் சென்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். கால்வாயில் வீசிச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு பிணங்கள் மிதந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்குற்றம் எப்படி நடந்தது, யார் யாரை கொன்றார்கள் அனைத்திற்கும் ஆதாரங்கள் இருந்தும் மனு தர்மம் வழுவாத நாட்டில் இந்து மதவெறிப் படுகொலையாளர்களை அதிலும் அவர்கள் போலீசு எனும் போது கைது செய்வது குறிப்பாக தண்டிப்பது சாத்தியமா என்ன?
இக்கொலையினைச் செய்த உ.பி மாநில ஆயுதப்படை பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களையும், பொதுவில் மனித உரிமையை நசுக்குவதற்கும் புகழ் பெற்றது. இவர்கள் செய்த குற்றங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பா.ஜ.க ஆட்சியில் அமராத காலத்திலேயே வட இந்தியா இப்படித்தான் இந்துமதவெறியின் செல்வாக்கில் இருந்தது. போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம், அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாகியே இருந்தது.
13 வருடங்களுக்குப் பிறகு 2000-ம் ஆண்டு மே மாதத்தில்தான் குற்றவாளிகளில் 16 பேர் சரணடைந்து சில நாட்களில் பிணையில் வெளிவந்தனர். இதற்கு முன்பே மூன்று போலிசார் இயற்கையாக மரணமடைந்து விட்டனர். காசியாபாத்தில் நடைபெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் 2002-ம் ஆண்டு, தில்லி விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்து மதவெறிக்கு ஒத்தூதுவதில் காசியபாத்திலிருந்து தில்லி மட்டும் வேறுபடுமா என்ன?
படுகொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007, மே, 24-ம் தேதி கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினர் லக்னோ சென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 615 மனுக்களை தாக்கல் செய்து காவல் துறை அதிகாரியிடம் வழக்கு குறித்த நிலையைக் கேட்டனர். அப்போதுதான் கொலைக்குற்றவாளிகள் அனைவரும் பணியில் இருப்பதும், அவர்களது பணிக்கால இரகசிய அறிக்கையில் இக்கொலை குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இக்குற்றவாளிகளால் சுடப்பட்டு காயமடைந்து பிழைத்துக் கொண்ட ஐந்து பேர் வழக்கின் நேரடி சாட்சிகளாக 2007-ல் சேர்க்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. வட இந்தியாவில் இந்து முசுலீம் கலவரம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்தான். அதில் இந்துக்கள் சிறு எண்ணிக்கையிலும், முசுலீம்கள் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்படுவதும் உண்மை என்றாலும் அரசு, இராணுவம் என்று வரும் தாக்குதலில் முசுலீம்கள் மட்டும்தான் கொல்லப்படுவார்கள். அந்த வகையில் இது ‘இந்து நாடாகவே’ இருக்கிறது.
பிளாட்டூன் கமாண்டர் சுரீந்தர் பால் தலைமையில் ஆயுதப்படை போலிசார் ஹாஷிம்புரா சென்று மக்களை சுற்றி வளைத்து அதில் வயதானவர்கள், குழந்தைகளை விலக்கி 65 பேர்களை மட்டும் லாரியில் அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளிகளும், நெசவாளர்களும் ஆவர். முராத் நகரின் கங்கை கால்வாயில் அவர்களை நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக தலையில் சுட்டு தண்ணீரில் தள்ளி ரசிப்பதற்கு ஒரு பெரிய இந்து ஞான மரபின் பயிற்சி வேண்டும். அப்படி சுடும் போது சாலையில் பிற வண்டிகள் வந்த நிலையில் போலீசுக் குற்றவாளிகள் அப்படியே மிச்சம் இருந்தவர்களுடன் லாரியில் ஓடி விட்டனர். இப்படித்தான் ஐந்து பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் முராத் நகர் காவல் நிலையியத்தில் புகார் பதிவு செய்தார்.
பிறகு லாரியில் இருக்கும் மக்களை ஹிண்டான் ஆற்று கால்வாய் அருகே சுட்டுக் கொன்று வீசினர். அதிலும் இருவர் சுடப்பட்டு உயிர் பிழைத்து அருகாமை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதே உ. பி மாநிலத்தின் பாகல்பூரில்தான் போலீசு கயவாளிகள் 1980-ம் ஆண்டில் 31 விசாரணை கைதிகளின் கண்ணில் ஆசிட் ஊற்றி பார்வையை பறித்தனர். அந்த வகையில் இவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளை விஞ்சுகிறார்கள்.
ஹஷிம்புரா படுகொலை குறித்து பி.யூ.சி.எல் அமைப்பு 87-ம் ஆண்டிலேயே ஒரு குழு அமைத்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. இந்தியாவின் உண்மை முகத்தை அறிய வரும்புவோர் அதைப் படித்து பாருங்கள். 19 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் அரசின் அனைத்து உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்று பி.யு.சி.எல் மற்றுமொரு அறிக்கையையும் வெளியிட்டது.
படுகொலை நடந்த காலத்தில் அங்கே பணிபுரிந்த காவல் துறை அதிகாரி விபூதி நாராயண் ராய், இதை உ.பி. போலிஸ் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என்று குறிப்பிடுகிறார். காசியாபாத்திலிருந்து தில்லிக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் உத்திர பிரதேச அரசு எந்த ஆர்வத்தையும் இவ்வழக்கில் காட்டவில்லை என்று 2005-ல் வெளிவந்த ஃபிரண்ட்லைன் ஏடு குறிப்பிடுகிறது.
இப்படி இருக்கும் போது குற்றம் நடந்து 27 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வரும்போதே அது எப்படி இருக்கும்? தற்போது தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் ஜிண்டால் அளித்த தீர்ப்பின் படி, குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லையாம். குற்றவாளிகள் சரியாக அடையாளம் காட்டப்படவில்லையாம். ஆக சந்தேகத்தில் பலனை அளித்து கொலையாளிகளை அவர் விடுதலை செய்து விட்டாராம்.
மனுவின் நீதியை மரபாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பினை கேள்விப்பட்ட மாத்திரத்தில் ஹஷிம்புராவின் முசுலீம் மக்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்? இனி இந்தியாவில் மதச்சிறுபான்மை மக்கள் வாழ முடியுமா, இங்கே அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்விகள் நிச்சயம் எழுந்திருக்கும்.
“இந்தப் படுகொலை நடக்கும் போது பிறந்தவன் நான். தீர்ப்பைக் கேட்டதும்தான் புரிகிறது, என்னுடைய பக்கத்து வீட்டு மாமா போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்படவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று. இதுதான் அரசியல் சாசனம் நமக்கு அளித்திருக்கும் நீதி உத்திரவாதமா?” என்கிறார் இருபதுகளின் முடிவில் இருக்கும் மெகர்பான் எனும் இளைஞர்.
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இங்கே உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களுக்கு பாடை கட்ட வேண்டும்.
“இப்போது எங்களிடம் என்ன கேட்கிறார்கள்? நாங்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தோமென்றும், அதிலும் கார்வாப்சி செய்து இந்துவாக மாற வேண்டும் என்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு எங்களது மக்கள் 42 பேர் கொல்லப்படவில்லை என்று எங்களிடம் கூறுகிறது” என்று பொருமுகிறார் அந்த முதியவர்.
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இனி சட்டப்படியே ஹாஷிம்புரா படுகொலையில் குற்றவாளிகள் தவறு செய்யவில்லை என்று இந்துமதவெறியர்களும், அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். ஏற்கனவே மும்பை படுகொலையில் சிவசேனாவும் தாக்கரேக்களும் குற்றம் சாட்டப்படாமேலேயே விலக்களிக்கப்பட்டனர். மோடியும் அவரது கேடிகளும் கூட அவ்வாறு காப்பாற்றப்பட்டனர். தற்போது ஹாஷிம்புராவின் போலிசுக் குற்றவாளிகள்.
இதுதான் நிலைமை என்றால் ஹாஷிம்புராவில் உறவினர்களை பறிகொடுத்த முசுலீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்று என்ன செய்வான்? அவனுக்கென்று இங்கே நீதி இல்லை, அரசு இல்லை, ஆதரிப்போர் யாருமில்லை எனும் போது அவன் குண்டை எடுக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
இந்தியா இனி இப்படியே இருக்காது என்பதற்கு ஹாஷிம்புரா ஒரு வலுவான அறிகுறி. இல்லை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இங்கே உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களுக்கு பாடை கட்ட வேண்டும்.
இது தொடர்பான செய்திகள்
- Meerut’s communal holocaust
- Meerut riots of May 1987
- A day after verdict, anger and anguish in Hashimpura
- Hashimpura massacre trial after 19 years– Failure of all organs of state
- Hashimpura massacre
- Hashimpura: the black chapter in the history of UP Police / Vibhuti Narain Rai
- Justice out of sight
- ஹாஷிம்புரா சம்பவம்: 42 பேர் படுகொலை தொடர்பான வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 16 பேரும் விடுதலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக