வியாழன், 26 மார்ச், 2015

துணை விமானி வேண்டுமென்றே மலையில் மோதியதாக குற்றச்சாட்டு


ஜெர்மன் விமானத்தை துணை விமானி ஆல்ப்ஸ் மலையில் வேண்டுமென்றே மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டோர்ப் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜெர்மன்விங்ஸ், 4யூ 9525 விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் மரணமடைந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விமானி ஒருவர் காக்பிட்டில் இருந்து வெளியேறினார். அதன்பின் கதவு மூடிக்கொண்டது. அவர் பலமுறை தட்டியும் துணை விமானி எந்த பதிலும் அளிக்க வில்லை. அதனால், அவர் மயக்கமான நிலையில் இருந்திருக்கலாம். ஆகையால் விமானம் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.


இந்நிலையில் விசாரணை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-

விமான பயணத்தின்போது 28 வயதான அண்ட்ரியாஸ் லுபிட்ஸ் துணை விமானியாக இருந்தார். விமானி பாத்ரூம் செல்வதற்காக காக்பிட்டை விட்டு வெளியே வந்தார். அதன்பின் காக்பிட் பூட்டிக்கொண்டது. திரும்பி வந்த அவர் பலமுறை கதவைத் தட்டியும் லிபிட்ஸ் ஒரு பதில் கூட சொல்லவில்லை. அதன்பின் 8 நிமிடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

எங்களுக்கு கிடைத்த ஒரு தகவல்படி லுபிட்ஸ் பயத்துடனோ அல்லது பதற்றத்துடனோ இருந்ததாக தெரியவில்லை. அவர் சீராக மூச்சு விட்டுக்கொண்டுதான் இருந்துள்ளார். மலைக்கு மேல் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, திட்டமிட்டு மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை செலுத்த வேண்டும். ஆட்டோமேடிக் மோடில் வைத்திருக்க முடியாது. இந்த சூழ்நிலைகளை வைத்து பார்க்கும்போது இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட விபத்து என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

மேலும், தரையில் இருந்து காக்பிட்டுக்கு பலமுறை தகவல் தொடர்பு கொண்டும். அங்கே இருந்து ஒரு பதிலும் வரவில்லை. விமானி பெயர் சொல்லாமல் பலமுறை சத்தம்போட்டு கதவை தட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

லுபிட்ஸ் 100 மணி நேரம் மட்டுமே ஏர்பஸ் ஏ320 விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ளவர். ஆனால், சில மாதங்களுக்கு முன்தான் முழுத்தகுதியுடன் விமானியாக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: