ஞாயிறு, 16 நவம்பர், 2014

ஜெர்மன் மொழியை கற்பிக்கவும்! மோடியிடம் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கல் வலியுறுத்தினார்.

நரேந்திர மோடியுடன் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா
மெர்கல்| படம்: பி.டி.ஐ.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது அவர் மோடியிடம், "இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கோரியுள்ளார்.
அதற்கு பதிலளித்த மோடி, "இந்திய அமைப்புக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுப்பேன். இந்தியக் குழந்தைகள் வெளிநாட்டு மொழிகள் பல கற்க வேண்டும் என்பது எனது விருப்பமும்கூட" என்றார்.
மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர வேண்டும் என்று அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து 2011-12 ஆம் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது.
மொத்தமுள்ள 1092 கேந்திரிய வித்யாலயாக்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை தேர்ந்தெடுத்தன. இப்பள்ளிகளில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜெர்மன் மொழியை படித்து வந்தனர். இம்மொழியைக் கற்றுத் தருவதற்காக ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும் மேக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா ஒப்பந்தம் செய்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.tamil.hindu.com

கருத்துகள் இல்லை: