எப்போது மரணம் நிகழும்? நாள் குறிக்கும் இணையதளங்கள்:பிறப்பு என்றால் இறப்பு உறுதி. இறக்கும் நாள் தெரிந்தால், வாழும் நாள் நரகம் ஆகிவிடும் என்பார்கள்!
சென்னை: பிறப்பு என்றால் இறப்பு உறுதி. இறக்கும் நாள் தெரிந்தால், வாழும் நாள் நரகம் ஆகிவிடும் என்பார்கள். ஆனால், இறக்கும் நாளை கணித்து கூறுவதற்கு www.deathdate.info, deathdate.org, deathclock.com போன்ற ஏராளமான இணையதளங்கள் உலா வருகின்றன. இந்த இணைய தளங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இந்த இணையதளத்தில் பெயர், பிறந்த தேதி, உயரம், எடை, சிகரெட், மது மற்றும் போதை பழக்கம் இருக்கிறதா போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து, எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர்கள், எந்த ஆண்டு, என்ன தேதியில் இறப்பு நிகழும் என்பதை இணையதளம் தெரிவிக்கிறது.
அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே ஆயுளை குறிக்கிறது. யாருக்கும் 60 வயதை தாண்டி உயிர் வாழ்வீர்கள் என்று கூறுவதில்லை. 80, 90 வயதுகளை தாண்டி உயிர் வாழ்ந்து வரும் முக்கிய பிரமுகர்களின் விவரங்களை பதிவு செய்தால், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல்களை தருகிறது.
இதுதொடர்பாக, சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் மனநல பேராசிரியர் எஸ்.நம்பி கூறுகையில், ‘‘இதுபோன்ற இணையதளங்கள் தரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம். மனநல மருத்துவத்தில் ஒருவரின் ஆளுமை திறன், குணநலன்களை வைத்து உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து கூற முடியும். ஒருவர் எப்போது இறப்பார் என்று யாராலும் கணிக்க முடியாது. அதுபோல் கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம்’’ என்றார். இதுபோல், அடுத்த பிறவி என்னவாக இருக்கும் என்பதை காட்டும் இணையதளங்களும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக