nakkheeran.in : ‘100 லட்சம் கோடி’ - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் பகீர் குற்றச்சாட்ட
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மும்மடங்காக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் 14 பிரதமர்களின் 67 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கடன் 55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் அவரது 9 ஆண்டு கால ஆட்சியில் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாளி ஆகியுள்ளார். இந்த கடனுக்கான ஆண்டுதோறும் மத்திய அரசு 11 லட்சம் கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார சீரழிவுக்கான பெருமை பிரதமர் மோடியையே சாரும். அதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான கடனும் 84% உயர்ந்துள்ளது. இதற்கு மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். இதனாலேயே நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக