ஞாயிறு, 5 நவம்பர், 2017

யாருக்குப் பயனளிக்கிறது டிஜிட்டல் மீடியா?

சண்டே சர்ச்சை: யாருக்குப் பயனளிக்கிறது டிஜிட்டல் மீடியா?மின்னம்பலம்: கபீஷ் பாலகிருஷ்ணன் படம் ஓடவில்லை, சாட்டிலைட் ரைட்ஸ் விற்கவில்லை, வீடியோ பைரஸி என்று தினம் தினம் புலம்பும் சினிமா தயாரிப்பாளர்களின் சங்கடங்களைஓரளவுக்கு தீர்த்துவைக்கும் அவதார புருஷன் ‘வீடியோ-ஆன்-டிமேன்ட்’ (விஓடி) டிஜிட்டல் மீடியா என்று தற்போது சொல்லப்பபட்டுவருகிறது.
தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்பது வரையறுக்கப்படாத உலக நியதி. இந்நிலையில் மீடியா உலகம் முழுவதையும் தன்வயப்படுத்தும் முயற்சியில் அதீத வெற்றி பெற்றுள்ள விஓடி டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள், அதில் முழுமையான வெற்றியைப் பெறப் பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதற்கான செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும் விதத்தில் பொழுதுபோக்கு, செய்தி, சினிமா என்று அனைத்து ஊடகங்களின் டிஜிட்டல் ரைட்ஸையும்அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றன.

இந்நிறுவனங்களின் செயல்பாடு, ”இப்போதைய சூழலில் முதல் மூன்று நாட்களிலேயே படத்தின் ஆயுள் முடிந்துவிடுகிறது. இனி சினிமாவைத் தேடி ரசிகன்வரமாட்டான். அவனைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். சினிமாவுக்கான இன்னொரு தளமாக இணையம் உருவாகிக்கொண்டிருக்கிறது” என்ற இயக்குநர்மீரா கதிரவனின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் (விஓடி) படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அனைத்துத்தயாரிப்பாளர்களும் தங்களுடைய படங்களை டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்விஷால் கோரிக்கை வைத்திருந்தார்.
இன்றைய சூழலில் சாட்டிலைட் உரிமை அதிகமாக விற்பனையாவது இல்லை. துப்பறிவாளன், மகளிர் மட்டும் போன்ற படங்கள் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல், தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி, தங்களுடைய திரைப்படங்களின்டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதியுங்கள் என்று விஷால் கூறினார்.
.
டிஜிட்டல் மீடியா: விழிப்புணர்வு இருக்கிறதா?
விஓடி நிறுவங்களின் விளம்பர தூதர் போன்று அந்நிறுவனங்களைப் பற்றிப் பேசுவது தயாரிப்பாளர்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையா அல்லது வேறேதும் உள்நோக்கம் உள்ளதா என்று திரையுலகை சார்ந்த சிலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
“பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேருக்காகத்தான் தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கிவருகிறது. இதுவரையில் பெரிய நிறுவனங்களின் படங்கள் மட்டுமேஅமேசான், நெட்ஃபிலிக்ஸ் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன. மற்றபடி விஓடி ஆன்லைன் வியாபாரம் குறித்த தகவல்களை அனைத்துத்தயாரிப்பாளர்களுக்கு விளக்கியிருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா?” என்று தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சிகேள்வி எழுப்பினார்

இயக்குநர் சேரன் சி2எச் என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரிஜினல் டிவிடிக்களை விற்பனை செய்யலாம் என்றுதெரிவித்தபோது அதற்கு உறுதுணையாக இல்லாமல் அதைத் தோல்வியடையச் செய்துவிட்டு இன்று அமேசான், நெட்ஃபிலிக்ஸ் புகழ் பாடுவது ஏன் என்றகேள்வியும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.
இப்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராகச் சிலர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தாலும் அதற்கான எந்த பதிலும் தயாரிப்பாளர்கள் சங்கநிர்வாகிகளிடம் இருந்து இதுவரையில் வரவில்லை.
தமிழ்த் திரையுலகில் இன்றும் சிறு முதலீட்டுப் படங்களின் சாட்டிலைட் உரிமத்தை விற்கும்போதே படத்தின் உள்நாடு, வெளிநாடு, டிஜிட்டல் உரிமையையும்சேர்த்து விற்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பாலிவுட்டில் இந்த நிலை இல்லை. படத்தின் உரிமையைத் தங்களுக்கு ஏற்றாற்போல் தயாரிப்பாளர்களால்பிரித்து விற்க முடிகிறது. இந்த நிலை இன்னும் தமிழுக்கு வரவில்லை. இதனால் பல சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தின் டிஜிட்டல்உரிமையை இழந்து அதன் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை யாரோ ஒருவருக்குத் தாரைவார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எல்லாப் படங்களுக்கும் கிராக்கி இல்லை
இந்தியப் படங்களின் டிஜிட்டல் உரிமையை விஓடி நிறுவனங்கள் கோடிகளைக் கொட்டி வாங்குவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின. இப்படி எல்லாப் படங்களும் கோடிகளுக்கு வாங்கப்படுகிறதா என்றால் அதற்கு இல்லை என்பதே பதிலாக வருகிறது.
தெறி, கபாலி படங்களிலிருந்து தமிழ்ப் படங்களை அமேசான் ப்ரைம் போன்ற விஓடி நிறுவனங்கள் வாங்க ஆரம்பித்தன. அதன் பின்னர் பல முன்னணிநடிகர்களின் படங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்படும் படங்களை மட்டுமே இந்த நிறுவனங்கள் வாங்குகின்றன என்று தயாரிப்பாளர்தனஞ்செயன் தெரிவிக்கிறார்.
திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்கள் படங்களை டிஜிட்டல் மீடியாவில் வெளியிடக் கடும் எதிர்ப்புதெரிவித்துவருகின்றனர். இதனால் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது வழக்கொழிந்துவிடும் என்று அச்சப்படுகின்றனர்.

டிஜிட்டல் மீடியாவின் வசூல் எல்லைகள்
விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்று கமல் அறிவித்தபோது அதற்காக ரூ.1000 கொடுத்து முன்பதிவு செய்தவர்கள் பத்தாயிரம் பேர்கூட இல்லை. இங்குள்ளவர்கள் குடும்பத்தோடு சென்று ரூ.1000 கொடுத்து திரையரங்கில் பார்க்க முன்வருகிறார்கள். ஆனால் அதே ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒருமாதத்துக்கு விஒடியை சப்ஸ்க்ரைப் செய்ய பெரிதாக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இங்கு ஒருமுறை சப்ஸ்க்ரைப் செய்தால் வெவ்வேறுபடங்களை பார்க்க முடியும் என்றபோதிலும் அதற்குத் தமிழ் ரசிகர்கள் தயாராக இல்லை. பத்து நாளில் 100 கோடி வசூல் செய்வது என்பது திரையரங்குகளில்மட்டுமே சாத்தியமானது. இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் டிஜிட்டல் மீடியாவால் இந்த அளவுக்கு வசூல் செய்வது என்பது சாத்தியமில்லாதஒன்று.
இப்படிப்பட சூழலில் அனைத்துப் படங்களையும் டிஜிட்டல் மீடியாவில் விற்பது என்பது சாத்தியமில்ல ஒன்று. முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்களின்படங்கள் விற்பனையானாலும், சிறு முதலீட்டு படங்கள் இங்கும் தத்தளிக்கவே செய்கின்றன.
இங்கு அனைவரும் லாபகரமான தொழில் செய்யவே வந்துள்ளனர். ஒரு படத்தை வாங்குபவரும், விற்பவரும் லாபமடையும் வகையில் ஒரு படம்உருவாகவில்லை எனில் பண மதிப்பழிப்பின் போது நம் கைகளில் வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் போன்று அந்தப் படம் எதற்கும் பயனின்றிபோகும். படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கப் புதிய களங்கள் உருவானாலும், படம் எந்த அளவுக்கு மக்களால் வரவேற்கப்படும் என்பதைப் பொறுத்தே அந்தக் களங்கள் பயன்படும். அதாவது, சரக்கு நன்றாக இருந்தால்தான் அது சந்தையில் இணையத்திலும் விலைபோகும்.

எனவே சிறு முதலீட்டுப் படமாக இருந்தாலும், நட்சத்திரம், கதை, இயக்கம், உருவாக்கப்பட்ட விதம், படத்திற்குள் இருக்கும் புதுமையான அம்சம் என ஏதோ ஒரு வகையில் ரசிகர்களைக் கவரக்கூடிய விதத்தில் படங்களை எடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு வகையிலேனும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படம் இருக்க வேண்டும். அப்போதுதான் டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனைக் கருத்தில் கொண்டுஇனிவரும் காலங்களில் படங்களை எடுக்கலாம்.

கருத்துகள் இல்லை: