பொய்யான வதந்திகள் குறித்து ஊடகங்களை அழைத்து யாழ் முதல்வர் தெளிவுபடுத்தினார்!
யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை உடைக்கப்படுவதாகவும் விரும்பத்தகாத மாற்றங்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் பரப்பப்பட்டு வந்த பொய்யான வதந்திகள் குறித்து யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் ஊடகங்களை அழைத்து உண்மை நிலையை விளக்கியுள்ளார். இன்று காலை யாழ் முத்திரைச் சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்துள்ள யாழ் முதல்வர் அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் யாழ் மாநகர சபை சிறந்த முறையில் இயங்கி வருகிறது. பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் புனருத்தாரணப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இதைக் கண்டு சகிக்க முடியாத போட்டி அரசியல் வாதிகள் எம்மீது சேறு பூசுவதற்காகவே இதுபோன்ற கட்டுக் கதைகளை கட்டவிழ்த்திருக்கின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் இவ்வாறான பொய்யான வதந்திகளை பரப்புவதன் மூலம் யாழ் மாநகர சபையை நிர்வகித்து வரும் ஈ.பி.டி.பி. மீது சேறுபூசி அதன் மூலம் வாக்குகளை அபகரிக்கலாம் எனத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர். புனர்நிர்மாணப் பணிகளுக்காக மூடிக்கட்டப்பட்டுள்ள திரை மறைப்பை திறந்து ஊடகவியலாளர்கள் உள்ளே சென்று உண்மை நிலையை பார்வையிடவும் ஒழுங்கு செய்திருந்தார். இதேவேளை புனரமைப்பு செய்யப்பட்டு புதுத் தோற்றத்துடன் காட்சியளிக்கவிருக்கும் சங்கிலியன் சிலையின் மாதிரி வரைபடம் ஒன்றையும் அங்கு பொதுமக்களின் பார்வைக்கு தொங்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக