![]() |
அவை எல்லாவற்றையும், இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக சொல்ல வேண்டுமென்றால்,
பைசன் திரைப்படத்தையும் தாண்டிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்றால்,
அது அரண்செய் தோழர் மதன் அறிவழகன் பேரலை ஊடகத்துக்கு கொடுத்த பேட்டி தான்.
மாரி செல்வராஜ் ஜாதிய திரைப்படங்களாக எடுக்கிறார் என்ற விமர்சனத்தில் எனக்கு கருத்து மாறுபாடில்லை.
அவர் எடுப்பது அனைத்தும் ஜாதி ஒடுக்குமுறை திரைப்படங்கள் தான்.
ஆனால் அந்த கதைகளில் ஜாதி வேறுபாடு, பகை கொண்டவர்களில் கூட தோழமையுடன் பழகவும், உதவி செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தவறாமல் அனைத்து திரைப்படங்களிலும் சொல்லி வருவதை அழகாக தன் நேர்காணலில் தோழர் குறிப்பிட்டுள்ளார்.
தோழர் இமானுவேல் எப்படி எதற்காக இமானுவேல் 'சேகரன்' ஆனார் என்பதையும், முத்துராமலிங்க 'தேவர்' ரின் பொய் பிம்பத்தை உடைக்கும் வரலாறை மட்டுமே அறிந்த எனக்கு, அவரின் மறுபக்கத்தையும் லேசாக கோடிட்டு காட்டியுள்ளார். இமானுவேல் சேகரனாரின் படுகொலை ஜாதிய படுகொலை அல்ல, அது கட்சி வேறுபாட்டின் காரணமாக நிகழ்ந்த படுகொலை. அதன் பின்னர் கட்சி பகையை, ஜாதி பகையாக வரலாறு எப்படி நிறுத்தியது என்பதை எல்லாம் கேட்க புதிய செய்திகளாக இருந்தது.
ஓட்டிற்கு பணம் கொடுப்பதற்கு 'திருமங்கலம் பார்முலா' என்று திமுக மீது முத்திரை பதித்து, அதை துவக்கி வைத்த காமராஜரை மறக்கடிக்க வைத்ததை போல, ஜாதி ஓட்டு அரசியல் செய்த காமராஜரை, இதை விட கண்ணியமாக விமர்சித்து விட முடியாது. 'அவர் நல்ல அரசியல்வாதி. அது தான் அரசியலில் முக்கியம்.' தோழர் இம்மானுவேலை கொன்றவரை encounter செய்த பொழுது, காமராஜர் ஆட்சியில் காவல்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன் என்று மறைக்கப்பட்ட உண்மையை போகிற போக்கில் பதிவு செய்துவிட்டார்.
இந்த ஜாதிய பகையை ஓட்டுகளாக மாற்றிய ஜெயா - சசி அணி, 'காமராஜரை தோற்கடித்த திமுக' என்று நாடார்கள் ஓட்டுகளை அறுவடை செய்த mgr , காங்கிரஸில் இருந்து பிரிந்து forward block கட்சியின் தலைவரான முத்துராமலிங்க தேவர் என நேர்காணல் முழுவதும் தகவல்கள். அடுத்து பசுபதி பாண்டியன் - பண்ணையாரின் பகை. திரைப்படத்தில் இருந்து மிக லேசாக உண்மை நிகழ்வுகள் முன் பின் நிகழ்ந்ததை தவிர வேறு பெரிய மாற்றங்கள் இல்லை.
இறுதியாக மனத்தி கணேசன் பற்றிய தகவல்கள். வேற்று சமூகத்தினரும் அவரின் திறைமைக்காகவே அவரை கொண்டாடி தீர்த்த கதை. திரைப்படத்தில் எதிர் அணிக்கு ரெய்டு செய்வதை தான் காட்டி இருக்கிறார்கள், ஆனால் அவர் எதிராளி தன் பக்கம் வரும் பொழுது அவரை எதிர்கொள்வதில் மிக திறமை வாய்ந்தவர் என்பதை சுட்டி காட்டினார். இறுதியில் , மனத்தி கணேசனும், அணியின் தலைவன் ராஜரத்தினமும் ஆசிய கோப்பையை வென்றவுடன் 60 கிராமங்களுக்கும் கோப்பையை எடுத்து சென்றதை சொல்லும் பொழுது மிக உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
கிராமங்களில் இப்போதெல்லாம் படித்து வேலைக்காக பலரும் வெளியேறிவிட்டார்கள். அப்படி வெளியேறிய ஒருவர் பல ஆண்டுகள் கழித்து ஊர் திருவிழாவிற்கு வந்தவர், அங்கு ஒடுக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டதை கண்டு 'எங்க இவங்கள எல்லாம் விடுறீங்க' என்று கேட்க, அதற்கு அங்கிருந்த முதியவர் 'அட சும்மா இருப்பா. நீ பாட்டுக்கு ஏதாச்சும் சொல்லிட்டு ஊருக்கு போய்டுவ. நாளைக்கு ஏதாச்சும் பிரச்சனைனா இவங்க தான் வருவாங்க' என்றிருக்கிறார். இதை கேட்ட பொழுது மனதிற்கு இதமாய் இருந்தது.
மிக சரியாக ஒரு மணி நேர காணொளி. தெளிந்த நீரோட்டம், நிகழ்வுகளை அதன் கால வரிசைப்படி சொன்னது, குழப்பங்கள் இல்லாமல், தெளிவாக இருந்தது. பேட்டி எடுத்த தோழர் மில்டனும் தேவை இல்லாமல் குறுக்கிடாமல் மிக சரியான கேள்விகளை கேட்டு தகவல்களை பெற்றார். மிக நீண்ட நாட்கள் கழித்து பார்த்த நிறைவான நேர்காணல்.
கதைகளை விட உண்மை வரலாறுகள் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

1 கருத்து:
i watched interview in youtube. excellent. another interview of madan arivalagan also there. watch that one also
கருத்துரையிடுக