ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

அமெரிக்க தூதர் : இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டிற்கு ஃபை ஐஸ் FIVE EYES தகவல்களும் அடிப்படை

மாலை மலர் :  அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டமைப்பு, ஃபை ஐஸ் (Five Eyes). உலகளாவிய தீவிரவாத, பயங்கரவாத மற்றும் நாசவேலைகள் குறித்து கண்காணிப்பின் மூலமாகவும் சமிக்ஞைகளை உள்ளடக்கியும் பெறப்படும் தகவல்கள், இந்த 5 நாடுகளுக்கிடையே பரிமாறி கொள்ளப்பட்டு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
2020ல் இந்தியாவால் தீவிரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

இந்நிலையில், ஹர்திப் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் ஃபை ஐஸ் அமைப்பின் மூலம் கனடாவிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையே பல உரையாடல்கள் நடைபெற்றதாகவும் கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹென் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த கொலை குற்றச்சாட்டு குறித்து கனடாவுடன் ஒத்துழைப்பதாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் தனது தரப்பிலிருந்து முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: