வியாழன், 29 ஜூன், 2023

சாதி அரசியலை மாமன்னன் பேசுகிறது: சமூக வலைதள விமர்சனம்

tamil.indianexpress.com :  மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் திராவிட ஆட்சி காலத்தில் நடைபெறும் சாதி அரசியலை தோலுரித்து காட்டியுள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களின் மூலம் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 3-வது படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார்.


உதயநிதியின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் இன்று வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர்மகன் படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாமன்னன் திரைப்படம திராவிட ஆட்சியின் சாதி அரசியலை காட்டியுள்ளதாக கூறி வருகின்றனர்.

இதனிடையே ராவணன் அம்பேத்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திராவிட ஆட்சிகளில் நிலவும் சாதி அரசியலை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். அரசியல், அதிகாரம், மரியாதை என பல சிடுக்குகளில் பட்டியல் சாதி சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட கட்சிகளின் கீழ் வெறும் கோவில் மாடுகளாக நடத்தப்படுவதையும் அதை எதிர்த்து கிளம்பும் இளைய தலைமுறையையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக இடைவேளையை நோக்கி நகர்த்துவதாகட்டும் முன்கதை பின்கதை என நகர்வதாகட்டும் மிக நேர்த்தியாக திரைக்கதையை பின்னியிருக்கிறார்.

இந்த படத்தை முழுவதுமாக தாங்கிப் பிடிப்பது வடிவேலு மட்டுமே. ஒரு பட்டியல் சாதி அரசியல்வாதியாக, தொண்டனாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி சட்டமன்ற உறுப்பினரான பின்னும் அவரை துரத்தும் சாதியும் தீண்டாமையும் என பெரும் கனத்தை அநாயசமாக சுமந்து இருக்கிறார். கதாப்பாத்திரமாகவே வாழக் கூடிய வெகு சில நடிகர்களில் ஒருவரான அவருக்கு இது பெரிய சுமையில்லை. இது போன்ற தெறிப்புகள் அவரது பல முந்தைய படங்களில் இருந்தாலும் இதில் முழுவதுமாக வாழ்ந்து தீர்த்து விட்டார். அதிலும் இடைவேளைக்கு பிறகு மகனின் சொல்கேட்டு சுயமரியாதையை மீட்டெடுக்கும் பொழுது அவர் உடல்மொழியில் கொண்டு வரும் மாற்றத்தை எல்லாம் திரை நடிகர்களுக்கு பாடமாகவே வைக்கலாம். அவர் இருக்கும் தைரியத்திலோ என்னவோ உடன் நடித்த எல்லோருமே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ஒரு நல்ல நடிகராக உருவாகி விட்ட உதயநிதிக்கு இது கடைசி படம் என்பது தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு.

அடுத்த பலம் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். உயிரை கொடுத்து இசைத்திருக்கிறார். ஏற்கனவே பழகிய இயக்குநர்களோடு அல்லாமல் இது போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அவர் தம் படைப்பின் உச்சத்தை தொட முடியும் என்பது மீண்டும் நிரூபனமாகிறது. பின்னனி இசையில் பிரித்து மேய்ந்து விட்டார் என்றே சொல்லலாம். ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எல்லோருமே தத்தமது பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள். இரண்டாம் பாதி திரைக்கதையில் தேர்தல் வெற்றி என்பதை தாண்டி கொஞ்சம் புதுமையாக யோசித்து இருக்கலாம் என்பது ஒரு குறையென்றாலும் ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியலை மையமாக கொண்ட படத்தில் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

பட்டியல் சாதியினர் தங்கள் அரசியலை எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு இத்திரைப்படம் நீண்டநாட்களுக்கு ஒரு கையேடாக இருந்து செயல்படப் போகிறது என்பதற்காகவே பாராட்டுவோம். உதயநிதி, கமல்ஹாசன் போன்றோரும் இது தங்களது அரசியல் என்று ஏந்திக் கொண்டது சமூக மாற்றத்திற்கான நல்ல அறிகுறி. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் வெற்றி பெற்று விட்டார் என்று தனது முதல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: