வியாழன், 8 ஜூன், 2023

மாநில வாரியாக கூட்டணி: திருமாவளவன் அழைப்பு!

 minnambalam -monisha  : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெல்ல, மாநில வாரியாக கூட்டணி அமைக்கப்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று (ஜூன் 7) இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலைஞரை புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து, “மாநில அரசுகள் இப்போது தான் குமுற தொடங்கியிருக்கின்றன. மத்தியில் அதிகாரத்தைத் திணித்து ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சி என்கிறார்கள். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

புதிய நாடாளுமன்றம் மதச்சார்பற்றது அல்ல. மதச்சார்பின்மை எங்களது கொள்கை இல்லை என்பதை பிரகடனப்படுத்தும் நோக்கில் தான் நம்மூர் சைவாதினங்களை அழைத்துக் கொண்டு போய் அமர வைத்திருக்கிறார்கள். குடியரசுத் தலைவரை வெளியேற்றி விட்டார்கள். ஜனாதிபதி வெளியே, மடாதிபதி உள்ளே.

இது ஏதோ தன்னிச்சையாக நடந்தவை அல்ல. அவர்களது அஜெண்டாவில் போய் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது அரசியல் அஜெண்டா. 888 இருக்கைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

மக்களவையில் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டவிருக்கிறார்கள்.

மக்கள் தொகை அடிப்படையிலே அந்த எண்ணிக்கை அமையுமேயானால் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து மட்டுமே இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான எண்ணிக்கையை அவர்களால் வென்றெடுத்திட முடியும்.

6 அல்லது 7 மாநிலங்களில் இருந்து மட்டுமே தேவையான உறுப்பினர்கள் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு இந்து ராஷ்டிரா கனவை நனவாக்கிக் கொள்வார்கள். அது அடிப்படையில் இந்து ராஷ்டிரா அல்ல பிராமண ராஷ்டிரா.

மாநில வாரியாக கூட்டணி அமைக்க தலைவர்கள் முன்வர வேண்டும். அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் ஜனநாயக சக்திகள், பாஜகவை வீழ்த்துகிற களத்தில் கைகோர்த்து நிற்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 உறுப்பினர்கள் வருவார்கள் என்றால், புதிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை வரப்போகிறது.

இந்த புதிய வரையறை மக்கள் தொகையை மட்டும் வைத்து மாற்றியமைக்கப்பட்டால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் தமிழ்நாடும் கேரளாவும்.

அதனால் மக்கள் தொகையில் இன்றைக்கு நாம் வளர்ச்சி விகிதத்தில் குறைந்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்காது குறையும் என்று சொல்லுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் மக்கள் தொகை இரண்டு மடங்காக உயரும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையில் நம்முடைய தலையீடு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்” என்று பேசினார் திருமாவளவன்.
மோனிஷா

கருத்துகள் இல்லை: