வெள்ளி, 21 ஏப்ரல், 2023

12 மணி நேர பணி வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு!

minnambalam : 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே 12 மணி நேரம் பணி செய்யலாம் என்றார்

இதுதொடர்பாக பேசிய விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், “தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் திருத்தம் வேண்டும் என்பதற்காக 2023-ல் தொழிற்சாலை திருத்த சட்டம் தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை முதலாளிகளே மாற்றி அமைக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. சிறப்பு நேர்வு என்ற ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் நீண்ட கால உரிமை போராட்டத்திற்கு எதிரான விளைவைத் தரும்.

ஒன்றிய அரசு ஏற்கனவே இருந்த தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக கொண்டு வந்திருக்கிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். எவ்வாறு ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்ததோ, அதே எதிர்ப்பு இதற்கும் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இன்று (ஏப்ரல் 21) கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தை அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். முதலமைச்சர் இதனைத் தேர்வு குழுவிற்கு அனுப்புவதாக தெரிவித்தார். அது ஆறுதலாக இருந்தது. ஆனால் பேரவையில் 12 மணி நேர வேலை சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் இது யார் மீதும் திணிக்கப்படாது என்று சொல்கிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே விரும்பினால் மட்டுமே இந்த நேர நீட்டிப்பு தரப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் தொழிலாளர்கள் விரும்புவதாக பாவனைச் செய்யப்பட்டு அவர்களின் உழைப்பை சுரண்டும் ஒரு சட்டமாக இது அமையும். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “திமுக ஆட்சியில் 12 மணி நேர வேலை சட்டம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இது சரியல்ல. இந்த மசோதாவைத் திரும்ப பெற வேண்டும். விருப்பப்பட்டால் செய்யலாம் என்ற விளக்கங்கள் ஏற்புடையது அல்ல.

முதலாளிகளின் விருப்பம் இந்த மசோதா மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மே தின நூற்றாண்டைக் கொண்டாடவிருக்கின்றன இந்த சூழலில் இது பின்னோக்கி செல்கின்ற சட்டமாக இருக்கின்றது. திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கூட இதனை ஏற்றுக் கொள்ளாது. இந்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும்” என்று கூறினார்.

மோனிஷா

கருத்துகள் இல்லை: