வியாழன், 23 மார்ச், 2023

ராகுல்காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை ..குஜராத் நீதிமன்றம் .. மோடி மீது அவதூறு பேச்சாம்

 மாலை மலர்  :  சூரத் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார்.
அப்போது அவர் "எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்ப பெயரை ஏன் வைத்து உள்ளனர்?" என்று பேசியதாக கூறப்படுகிறது.
தொழில் அதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இதை பேசினார். பிரதமர் மோடியை மறைமுகமாக அவதூறு செய்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது.
இதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


முன்னாள் குஜராத் மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான புர்ணேஷ் மோடி இது தொடர்பாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுப்படுத்திவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 (அவதூறு தொடர்பானது) ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வந்த நிலையில் இறுதிகட்ட விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில் மோடி பெயர் குறித்து அவதூறாக ராகுல் காந்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று (23-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் மாநிலம் சூரத் சென்றார். தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் ஆஜரானார். மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் உள்ளிட்ட தலைவர்கள் கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் குவிந்து இருந்தனர்.

சூரத் நகர் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அவதூறு கிரிமினல் வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்திய தண்டனை சட்டம் 499-வது பிரிவு (அவதூறு) 500-வது பிரிவு (தண்டனைக்குரிய அவதூறு) ஆகியவற்றின் கீழ் அவர் குற்றம் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எச்.எச்.வர்மா அறிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்குகிறோம் என்றும், 30 தினங்களுக்குள் அவர் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பை தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை கேட்டதும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டம் மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்திக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு ஆகும்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: