சனி, 19 பிப்ரவரி, 2011

ஆயுத காண்டம்


மோகன் தாஸ்
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய மோகன்தாஸ் ஒரு சுவாரசியமான மனிதர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்; இவரை ஆலோசனை செய்யாமல் எம்.ஜி.ஆர். முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டார்; எம்.ஜி.ஆருக்கு கண்ணும், காதும் மோகன்தாஸ்தான் என்றெல்லாம் சொல்வார்கள். அவர் ரிடையர் ஆனவுடன், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் அவர் வசித்த உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த அவரது பிரத்யேக அறையில் (அதற்கு செல்லமாக “டென்” என்று பெயரிட்டிருந்தார்) கல்கிக்காக அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அதற்கு முன்பும், பின்னரும் கூட சில தடவைகள் அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும், சொன்ன விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், ரிடையர் ஆனதும் அளித்த பேட்டி முக்கியமானது.
அவர் உத்தியோகத்தில் இருந்தபோது விவரமாகப் பேச முடியாமல் போன விஷயங்கள் உட்பட சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பழைய போட்டோக்கள் சிலவற்றை தன் சொந்த புகைப்பட ஆல்பத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். “நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானீர்கள்? மலையாளி என்பதால்தானா?” என்று கேட்டபோது, ” அவர் என்னை தமிழ்நாடு போலிசின் இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைவராக்கினார். 24 மணி நேரமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு அது. மாநிலம் முழுவதும் என்ன நடக்கிறது? என்பதை மட்டுமின்றி, பக்காவான இன்டலிஜென்ஸ் நெட் ஒர்க் மூலமாக அடுத்து எங்கே என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட அறிந்து முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப் பட்ட பதவி அது. எம்.ஜி.ஆரும், நானும் என்று இல்லை, ஒரு மாநில முதலமைச்சருக்கும், ஐ.பி. தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கவே செய்யும்” என்று விளக்கியவர், தனது பதவிக்காலத்தில் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சில சங்கடங்களையும் கூட தயங்காமல் பகிர்ந்துகொண்டார்.
“ஐ.பி. தலைவராக நான் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தது, பலருடைய பொறாமையை சம்பாதித்துக் கொடுத்தது. நான் என் மகள் திருமணத்துக்காக ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு கேரளாவுக்குப் போயிருந்த சமயம், மரியாதை நிமித்தம் அப்போதைய கேரள முதலமைச்சர் கருணாகரனை சந்தித்தேன். இரண்டே நிமிட சந்திப்புதான் அது என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை அரை மணி நேர உரையாடல் என்று செய்தியாக்கிவிட்டது.
என்னை எப்படியாவது சங்கடத்தில் மாட்டிவிடவேண்டும் என்று காத்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் போய், ” நான் எம்.ஜி.ஆர்.பற்றிய ரகசியங்களை கருணாகரன் மூலமாக ராஜிவ் காந்திக்குச் சொல்லி அனுப்பி, எம்.ஜி.ஆர். மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக கதை கட்டிவிட, எம்.ஜி.ஆரும் அதை நம்பிவிட்டார். மகள் திருமணத்துக்கு பத்தே நாட்கள் இருந்த நிலையில், என் லீவை ரத்து செய்து, பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். பணிக்குத் திரும்பிய என்னை, பழைய பதவியில் தொடர விடாமல், ஒரு டம்மியாக ஓரிடத்தில் உட்காரவைத்தார்கள்.  இந்த உதாசீனம் என்னை ரொம்ப பாதிக்கவே, ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்புறம் நிலைமை சீரடைய, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்” என்றும் விளக்கினார்.
ஓய்வு பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர் பற்றி மோகன்தாஸ் ஒரு புத்தகம் கூட எழுதினார். “எம்.ஜி.ஆர்: தி மேன் அண்ட் தி மித் ” என்று தலைப்பு. அந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
ராஜிவ் காந்தி படுகொலை நடந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழு ராஜிவ் படுகொலையைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்ற கோணத்திலேயே புலனாய்வினை மேற்கொள்வது சரியல்ல என்ற அவரது கருத்து கூட சலசலப்பை ஏற்படுத்தியது. இதே கருத்தை அடிப்படையாக வைத்து மோகன்தாஸ்,  ஆங்கிலத்தில் ஒரு நாவல் கூட எழுதினார்.  ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், சந்திரா சுவாமி என்று எந்தப் பெயர்களையுமே நேரிடையாகக் குறிப்பிடாமல் நாவலில் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அந்த நாவலின் மூலமாக அவர் சொல்ல வந்தது, நம் ஊரில் இருக்கும் அந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்கள் தலைவரது ஊழல் காரணமாக கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்கி, மீண்டும் ஆட்சிக்கு வர அந்த தலைவரையே பலியாக்கி, அனுதாப அலையை வீசச் செய்யும் வியூகத்தை வகுக்கிறார்கள். அந்தப் படுகொலையை, அந்தத் தலைவரின் மீது கோபம் கொண்ட அயல்நாட்டு போராளிக்குழுவின் மூலமாகச் செயல் படுத்துகிறார்கள். அயல் மண்ணின் போராளிக் குழு, தலைவரது படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிதான் என்பது அந்த நாவலின் ஹைலைட். அந்த நாவல் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
மோகன்தாஸ் சி.பி.ஐ. யில் இருந்த நாட்களில் அவர் துப்பு துலக்கிய கேஸ்கள் பல. உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரது தம்பி தன் 60 வது பிறந்த நாளைக்கொண்டாடியதன் அடிப்படியில், விசாரணை நடத்தியதில் அந்த நீதிபதி பொய்யான வயது கொடுத்து வேலைக்குச் சேர்ந்தது அம்பலமானது.  அதன் பிறகு, அந்த நீதிபதி தானாகவே முன் வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதாகச் சொன்னார் மோகன்தாஸ்.
தன் சர்வீசின் ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொன்னார் மோகன்தாஸ். அப்போது தூத்துக்குடி ரௌடியிசத்துக்குப் பேர் போன ஊராம். அங்கே, இவர் கையாண்ட ரௌடி தூத்துக்குடி கொம்பன் கேஸ் மிகப் பிரபலம். அந்தக் கொம்பன், மேலே ஏழெட்டு கொலை கேஸ்கள் இருந்தன. ஆனால் அவன் மீது போலிஸ் கை வைத்தது இல்லை. அவனைப் பிடிக்க சரியான ஒரு தருணத்துக்கு பொறுமையோடு காத்திருந்து, சாமர்த்தியமாகப் பிடித்து, கோர்ட்டில் நிறுத்தி, அவனுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தார் மோகன்தாஸ்.
அவர் சொன்ன இன்னொரு சுவாரசியமான கொலை வழக்கில் நான்கு பேர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றாவது, நான்காவது நபர்கள் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த கேஸின் முதல் தகவல் அறிக்கையில் அந்த நான்கு பேருடைய பெயர்களுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மோகன்தாஸ் தீவிர புலன் விசாரணை நடத்தினார். துப்பு துலங்கியது. முதல் இருவரும்தான் கொலையோடு சம்மந்தப்பட்டவர்கள். பர்சனல் விரோதம் காரணமாகப் பழி வாங்கும் நோக்கத்துடன் மற்ற இரண்டு பேர்களின் பெயர்களும் கேஸில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட நாலு பேர்களில் தக்க ஆதாரங்களைத் திரட்டி முதல் இருவருக்குத்தான் கொலையில் சம்மந்தமுண்டு; மற்ற இருவரும் சம்மந்தமில்லாத அப்பாவிகளென்று நிரூபித்து, அந்த இருவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தார்.  இதை நீதிபதிகள கூட பாராட்டினார்கள்.
மனைவியுடன்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இந்தியா விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்துவந்த ஆதரவு நிலைபாடு அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் மற்றும் இதர போராளிக் குழுக்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் மோகன்தாஸ். காக்கிச் சீருடைப் பணிக்காலத்தில் அவரது மாபெரும் சாதனை என்று நான் நினைப்பது அவர் விடுதலைப் புலிகளிடம்  நடத்திய ஆயுதப் பறிப்புதான். அது நடந்தபோது கூட அந்த ராஜ தந்திர வியூகம் பற்றி பற்றி விரிவாகப் பேசாத மோகன்தாஸ் ரிடைர்மென்ட்டுக்குப் பிறகு என்னிடம் விரிவாகப் பேசினார்.
மோகன் தாஸ் என்னிடம் விவரித்ததை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதமேந்தித் திரிந்து வந்த காலம் அது. வேதாரண்யம், சென்னை போன்ற ஒரு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் காரணமாக மத்திய அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என நினைத்தது. ஆனால் அதைச் செய்கிற பணியை எம்.ஜி.ஆரிடம் விட்டுவிட்டது. இது பற்றிப் பேச என்னை அழைத்தார் முதலமைச்சர்”
“விடுதலைப்புலிங்க கிட்டேயிருந்து ஆயுதங்களைப் பிடுங்கிடுங்க” என்றார் எம்.ஜி.ஆர். நான்,” அது இயலாத காரியம்”என்றேன். அவரோ,” எப்படியாவது செய்தே ஆகணும்” என்றார். “நிறைய உயிர்ச் சேதம் ஆகுமே?” என்று நான் சொல்ல,” மத்திய அரசுக்கு நான் வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்.
மத்திய, மாநில அரசுகள், உள்நாட்டுப் பாதுகாப்பு, அயலுறவு விவகாரம், உள்ளூர் அரசியல் என பல பரிமாணங்கள் கொண்ட மிகவும் சிக்கலான ஆயுதப் பறிப்பை எப்படிச் செய்வது என்று தீவிரமாக யோசித்தேன். நான் ஸ்பெஷலாக உருவாக்கிய கமாண்டோ படையினரைக் கொண்டு இதனைச் செயல்படுத்த ஒரு திட்டம் வகுத்தேன். இது ரொம்பவும் ரகசியமாகச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், முதலமைச்சருக்குக் கூட நீங்கள் உத்தரவிட்டபடி ஆயுதப் பறிப்பை செய்யப்போகிறேன்” என்று மட்டும் சொன்னேனே ஒழிய எப்போது என்று தேதியைச் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் போராளிகளின் முகாம்கள் எங்கெங்கே உள்ளன? அவற்றில் உள்ள முக்கிய போராளிகள், அவர்களிடமிருக்கும் ஆயுதங்கள் என எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு போராளி முகாமிற்கும் ஒரு கமாண்டோ சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “சமீபகாலமாக போராளிகள் ஆயுதங்களோடு திரிவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்னும் ஒரு வார காலத்துக்காவது நீங்கள் ஆயுதங்களை கையிலெடுக்காமல் இருக்கவேண்டும் என அரசாங்கம் நினைக்கிறது.” என்று சொன்னதும் அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள்.
“எல்லா ஆயுதங்களையும் உங்கள் முகாமிலேயே ஒரு அறையில் போட்டுப் பூட்டி, சாவியை நீங்களே வைத்துக் கொண்டால்போதும்” என்றதும் உடனடியாக அப்படியே செய்தார்கள். இப்படியாக தமிழகத்தின் ஒவ்வொரு முகாமிலும் ஆயுதங்கள் ஒரு பூட்டிய அறையில் முடக்கப்பட்டன; போராளிகள் நிராயுதபாணிகளானார்கள். கமாண்டோக்கள் நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பிய அரை மணிநேரத்தில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஸ்பெஷல் கமாண்டோ படையினர் போராளிகளின் பல்வேறு முகாம்களுக்கும் அதிரடியாகச் சென்று சுற்றி வளைத்தார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த அறைகளின் பூட்டைத் தகர்த்து அனைத்து ஆயுதங்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, என்ன நடக்கிறது என்று போராளிகள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நவீன ஆயுதங்களுடன் வந்த கமாண்டோ படையினரை நிராயுதபாணிகளான போராளிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அன்றைக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றிருந்தார். டெலிபோனில், விவரம் சொன்னபோது,” சாவு ரொம்பவுமா? என்றார். “ஒரு கேஷுவாலிடி கூட இல்லை” என்றதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்” என்று அந்த  அத்தியாயத்தைச் சொல்லி முடித்தார் மோகன்தாஸ். இதில் ஆன்டி-கிளைமாக்ஸ் என்னவென்றால், ஆயுதப் பறிப்பு அமைதியாக நடந்து முடிந்துவிட்டாலும், அடுத்த சில நாட்களில் பிரபாகரன் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க, எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார்.
அரசியல்!

கருத்துகள் இல்லை: