சமச்சீர் கல்வி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் போல் புதிய தலைமைச் செயலக வழக்கிலும், நீதிமன்றம் எதிராக தீர்ப்பு வழங்கிடுமோ என்ற பயத்தில் தான், புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் மருத்துவமனை அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,
தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. பொய் புகார் அளிப்பவர்கள் மீது உச்சநீதிமனறம் வரை சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை ஜெயலலிதா அரசு ஏற்க மறுத்து அவசர சட்டம் கொண்டு வந்து ரத்து செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சிறப்பான தீர்ப்பு வழங்கியதால், தமிழக மக்கள் வெற்றி அடைந்துள்ளனர்.
சமச்சீர் கல்வி வழக்கில் வழங்கப்பட்டதுபோல் புதிய தலைமைச் செயலக வழக்கிலும் எதிரான தீர்ப்பு வந்திடுமோ என்ற அச்சம் காரணமாகவே அதில் புதிய மருத்துவமனை செயல்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயலலிதா செய்தது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்களோ, ஏன் தலைமைச் செயலகமாக பயன்படுத்தவில்லை என்று சொன்னாலும் கூட வேறு ஏதாவது அரசு பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சம், பயம் இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அவசர அவசரமாக புதிய மருத்துவமனை செயல்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வருவதிலே நாங்கள் எதிர்க்கிறோம் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதற்கு ஏற்ற இடமா அது. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என்றால் வெறும் நாடகமா. நீதிமன்றத்தை ஏமாற்றுகிற திட்டமா. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக