வியாழன், 18 மார்ச், 2010

வாடிகன்:அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.
போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ம் ஆண்டு முதல் 81ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்களுக்கு அவர் நாளை எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனபாதிப்பை சாந்தப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார்.இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.
அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாட்டிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, 'என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
இன்றைய நிலையில், ஜெர்மன் சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: