சனி, 11 ஜனவரி, 2025

சீமான் கைது - ஸ்டாலின் சிக்னல்… போலீஸ் ஸ்கெட்ச் ரெட?

 மின்னம்பலம் - Selvam :  “கடந்த எட்டாம் தேதி கடலூரில் சீமான் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியார் குறித்து மிக இழிவான சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
இது குறித்து உடனடியாக மூத்த பெரியாரியவாதி கோவை ராமகிருஷ்ணன், ‘பெரியார் சொன்னதாக சீமான் சொன்னது பற்றிய ஆதாரங்களை உடனடியாக அளிக்க வேண்டும்.
ஜனவரி ஒன்பதாம் தேதி அவரது நீலாங்கரை வீட்டிற்கு நாங்கள் வருகிறோம். அப்போது அவர் உடனடியாக ஆதாரத்தை அளிக்க வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வீடியோ வெளியிட்டார்.



இதற்குப் பிறகுதான் மற்ற பெரியார் இயக்கங்களும் ஏன் திமுக கூட இந்த விவகாரத்தை கையில் எடுத்தன.

கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நீலாங்கரையில் இருக்கும் சீமான் வீட்டுக்கு முற்றுகையிட சென்றபோது, 200 மீட்டர் தொலைவிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அங்கே நடந்த களேபரத்தில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்த நிலையில் தான் பெரியார் இயக்கங்கள் மூலம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போலீஸில் சீமான் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. திமுகவும் வழக்கறிஞர் அணி சார்பிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமான் மீது போலீசில் புகார் கொடுத்தது.

இந்த அடிப்படையில் சீமான் மீது இரண்டு முதல் ஐந்து பிரிவுகள் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜாமீனில் வெளிவரக்கூடிய 192, ஜாமீனில் வெளிவர முடியாத 353 (l l) உள்ளிட்ட பிரிவுகளில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் ஜாமீனில் வெளிவர முடியாத 353 வது பிரிவு என்ன சொல்கிறது என்றால், மதம், இனம், பிறந்த இடம், மொழி, சாதி அல்லது சமூகம் மற்றும் வேறு எந்த காரணத்தின் அடிப்படையிலும் சமூகங்களுக்கிடையே பகைமை வெறுப்பு உணர்வுகளை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்னணு ஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் வதந்திகள் ஆபத்தான செய்திகளை கொண்ட அறிக்கைகளை வெளியிடுவது, பரப்புவது ஆகிய குற்றங்கள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

இதன்படி இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்படுபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்த பிரிவின் கீழ் தான் தமிழகம் முழுவதும் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி மூத்த பெரியாரியவாதிகள் பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

திராவிட மாடல் அரசாங்கம் என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பெரியாரை இந்த அளவுக்கு இழிவாக தொடர்ந்து பேசி வருகிற சீமான் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்ற ஒரு குறிப்பையும் அளித்தார். மேலும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கும் பெரியார் வாதிகள் சிலர் முதல்வரிடம் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சரியான நேரம் இது என ஆலோசனை அளித்துள்ளனர்.

இதற்குப் பிறகும் சீமான் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்ற ஆலோசனை அரசு மேல் இடத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் தான்… மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடுக்கப்பட்ட வழக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்தார்.

அதாவது சீமானின் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றன. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அரசு தரப்பு வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதன்பிறகு சீமான் கைதுக்கு சட்ட தடைகள் எதுவும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில்… அவரை கைது செய்வதற்கான ஸ்கெட்ச் தொடங்கிவிட்டது.

இன்று ஜனவரி 10ஆம் தேதி மாலை 6.30 மணி வரை சீமான் துரைப்பாக்கத்தில் உள்ள பார்க் பிளாசா ஹோட்டலில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார். இதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.


சீமானைத் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நாளை (ஜனவரி 11) சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார். ஸ்டாலின் உரையாற்றிய பிறகு சட்டமன்ற தொடர் நிறைவு பெறும்.

இதன்பிறகு சீமான் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் அரசு மேல்நிலை வட்டாரங்களில். தொடர்ந்து பொங்கல் விடுமுறை வருகிற நிலையில், சீமானுக்கு இந்த முறை பொங்கல் பண்டிகை சிறைக்குள் கூட இருக்கலாம் என்று சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: