திங்கள், 18 டிசம்பர், 2023

தூத்துக்குடி -காயல்பட்டினம் - 95 செ.மீ. மழை: ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியது - தற்போதைய நிலை என்ன?

 BBC News தமிழ் -  Ansari    எழுதியவர், சிராஜ் :  தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் எனும் சிறிய கடற்கரை நகரம் தமிழ்நாட்டில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு ஊராக மாறியிருக்கிறது,
காரணம் அங்கு ஒரே நாளில் பெய்துள்ள வரலாறு காணாத மழை. அங்கு 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை போன்ற ஒரு பெருநகரில் 2 நாட்களில் பெய்த 50 செ.மீ மழையே பல வாரங்களுக்கு நகரத்தை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்த போது, காயல்பட்டினம் எனும் சிறிய ஊரில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மொத்த மழை 24 மணிநேரத்தில் பெய்தால் அந்த ஊரின் நிலை என்னவாகும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.



"நேற்று காலை கனமழை பெய்யத் தொடங்கியது, சரி நவம்பர்-டிசம்பர் காலத்தில் பெய்யும் பருவ மழை போல தானே என்று நினைத்தோம். ஆனால் இரவு வரை கூட மழையளவு குறையாமல் தொடர்ந்து பெய்த போது தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தோம்" என்கிறார் காயல்பட்டினத்தைச் சேர்ந்த கைலானி.

"பல இடங்கள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. எனக்கு நினைவு தெரிந்தவரை இப்படியொரு மழை வெள்ளத்தை காயல்பட்டினத்தில் கண்டதில்லை. இன்னும் மழை நிற்கவில்லை. மேலும் மழை தொடர்ந்தால் நிமைமை மோசமாகும். பலரை தொடர்பு கொள்ள முடியாததால், உறவினர்களின் நண்பர்களின் நிலை குறித்து சரியாகத் தெரியவில்லை" என்கிறார் கைலானி.

அவர் தொடர்ந்து கூறுகையில், "இங்குள்ள தெருக்கள் மிகவும் சிறியவை. வீடுகளும் நெருக்கமாகவே கட்டப்பட்டிருக்கும். அருகே கடல் இருப்பதால் எவ்வளவு பெரிய கனமழை பெய்தாலும், தண்ணீர் உடனே வடிந்து விடும். இந்த முறையும் அப்படிதான் என நினைத்தோம், ஆனால் உணவுக்கு கூட சிரமப்படும் நிலை வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை" என்றார்.

"காயல்பட்டினம் கடலின் அருகே இருப்பதால், வழக்கமாக கனமழை பெய்தால் அது உடனடியாக கடலில் சென்று சேர்ந்து விடும். ஆனால் தொடர்ந்து 48 மணிநேரமாக நாங்கள் இதுவரை பார்க்காத கனமழை பெய்து வருவதால் தண்ணீர் எல்லா இடங்களிலும் தேங்கி நிற்கிறது.

நாங்கள் முடிந்தவரை ஜேசிபி மூலமாக சில இடங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம். ஒரு அரை நாள் மழை நின்றால் போதும், பல இடங்களில் நீர் வடிந்து கடலில் கலந்துவிடும்" என காயல்பட்டினம் ஐக்கிய ஜமாத் பேரவையைச் சேர்ந்த அன்சாரி கூறுகிறார்.

"காயல்பட்டினத்தில் எங்கு பார்த்தாலும் கடற்கரை மணலைக் காணலாம். பார்ப்பதற்கு வறண்ட ஊர் போல தெரியும் காயல்பட்டினம் சற்று தாழ்வான பகுதியாகும். நிலத்தடி நீருக்கு இங்கு பஞ்சம் இல்லை. காரணம் அருகிலுள்ள ஆறுமுகநேரி, குரும்பூர் போன்ற ஊர்களில் இருந்து வரும் நீர் இங்குள்ள கடலில் கலக்கும்.

இப்போது அதுதான் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீரும் சேர்ந்து முழு ஊரும் வெள்ளத்தில் மிதக்கிறது" என்கிறார் அன்சாரி.

அவர் தொடர்ந்து பேசியது, "மூன்று ஆண்டுகளுக்கு முன் நீர் மேலாண்மை அதிகாரிகள் காயல்பட்டினத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து, ஊரின் தாழ்வான பகுதிகளில் ஆறு குட்டைகளை அமைத்தார்கள். இதன் மூலம் ஊரின் நிலத்தடி நீரின் அளவும் உயரும் மற்றும் கனமழை ஏற்பட்டாலும் நீர் தேங்காமல் இருக்கும்.

ஆனால் இப்போது பெய்துள்ள வரலாறு காணாத மழையால், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அந்த ஆறு குட்டைகளும் முழுவதும் நிரம்பி விட்டன. இவ்வளவு பெரிய மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை"

"முழுக்க முழுக்க ஊர் மக்களே களத்தில் இறங்கி செயல்படுகிறோம். அரசு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது, தொலைத்தொடர்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அதிகாரிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்கிறார் அன்சாரி.

'மழை நின்றால் தான் உண்மையான பாதிப்புகள் தெரியும்'

"ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் அனைத்து சமுதாய மக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முடிந்த வரை அவர்களுக்கான உணவை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். மருத்துவ வசதிகளுக்காக ஆம்புலன்சும் உள்ளது. ஆனால் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு செல்ல வாகன வசதிகள் இல்லை.

விடாது கொட்டி வரும் மழை சற்று நின்றால் தான், உண்மையான பாதிப்புகள் தெரியவரும். எந்த உயிர் பலியும் இருக்காது என நம்புகிறோம். மழை நிற்காமல் தொடர்ந்து பெய்தால் நிலைமை மோசமாகும் அபாயமுள்ளது. உணவுப் பற்றாக்குறையும் உள்ளது.

காயல்பட்டினம் சிறிய ஊர் தான் என்றாலும், இங்கு பெய்துள்ள அதிகளவு மழையைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் காயல்பட்டினத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சுலைமான்.

"காயல்பட்டினத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 932 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், இது ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை அளவை விட அதிகம்.

இது தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில், 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழையளவு ஆகும் மற்றும் 1992இல் மாஞ்சோலையின் காக்காச்சி பகுதியில் பதிவான 965 மி.மீ மழைக்கு அடுத்து இரண்டாவது அதிகபட்ச மழை இதுதான்" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'மழை நீர் வடிவதில் தாமதம் ஏற்படலாம்'

இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகையில், “தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒராண்டு சராசரி மழை அளவை விடவும் மிக அதிகம். இந்த மழை மேகவெடிப்பால் பெய்யவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்துள்ளது.

மழையால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்பு பணிக்கு முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையைப் பொறுத்தவரை மழை நீர் சீக்கிரம் வடிந்துவிடும். ஆனால் தூத்துக்குடியில் மழை நீர் வடிய தாமதம் ஆகலாம். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இதற்காக கோவை மாவட்டம் சூலார் விமானப்படை நிலையத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. 1070 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை சொல்லலாம். வானிலை மையத்தின் எச்சரிக்கை அடிப்படையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன” என்றார்.

ரயில்கள் ரத்து மற்றும் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை-வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவில் இரு மார்க்கத்திலும் திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 18 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 அன்று ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக இருந்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 18 அன்று இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் - திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ‌

டிசம்பர் 18 அன்று நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும்.

அதேபோல, கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும்.

நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் டிசம்பர் 18 அன்று மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் இருந்து இயக்கப்பட்டது.

கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்டது.

திருநெல்வேலி, மானாமதுரை, பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட வேண்டிய செங்கோட்டை - தாம்பரம் ரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

கருத்துகள் இல்லை: