minnambalam.com - Aara : வைஃபை ஆன் செய்ததும் நீதிமன்றத் தீர்ப்பால் அமைச்சர் பதவியை இழந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடி உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று டிசம்பர் 21ஆம் தேதி தண்டனையை அறிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதற்காக இன்று காலை பொன்முடி தனது மனைவி விசாலாட்சியோடு காலை 10 மணிக்குள் உயர் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். இன்று நேரில் ஆஜராகலாமா அல்லது வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆஜர் ஆகலாமா என்று நேற்று இரவு வரை தனது வழக்கறிஞர்களோடு தீவிரமாக ஆலோசித்தார் பொன்முடி.
அதேநேரம் மேலும் சில வழக்கறிஞர்கள், ‘டிசம்பர் 19 ஆம் தேதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘டிசம்பர் 21 ஆம் தேதி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். அதில் ஏதும் கடினமாக இருந்தால் வீடியோ கான்ஃபிரன்சில் ஆஜராகலாம். நீதிமன்றம் அவர்கள் நேரில் வந்து ஆஜராவதையே விரும்புகிறது’ என்று சொல்லியிருக்கிறார். இந்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்தார். அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நினைத்தால் கூட… குற்றவாளி நேரில் சென்று நிற்கும்போது, உடல் நிலை பற்றிய கோரிக்கை வைக்கும்போது கடைசி நேரத்தில் தண்டனை குறைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. விதிக்கப்படும் தண்டனை மேல்முறையீட்டுக்காக நிறுத்தி வைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால் ஆவணங்கள், சாட்சிகள், ஆதாரங்கள் இவற்றையெல்லாம் தாண்டி குற்றவாளி நீதிமன்றத்தை மதிக்கும் முறையும் தண்டனைக்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, நீதிமன்றத்துக்கு நேரில் சென்று ஆஜராவதைத் தவிர்த்தால் அரசியல் ரீதியாகவும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். அது கட்சிக்கும் சற்று பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், குற்றவாளி என்று உறுதியாகிவிட்ட நிலையில் நேரில் சென்று நீதிபதியை எதிர்கொள்வதே நமக்கு அடுத்தடுத்த சாதகங்களை ஏற்படுத்தும் என்ற ஆலோசனையும் பொன்முடியிடம் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்குதான் பொன்முடி மறுநாள் காலை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவது என்ற முடிவை எடுத்தார்.
தண்டனை அறிவிப்புக்குப் பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பொன்முடியை நிரபராதி என்று நிரூபிப்போம் என அவரது வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என். ஆர். இளங்கோ பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படியே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை திமுக தொடங்கிவிட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கமான அமர்வுகள் இயங்காது. விடுமுறை கால அமர்வு மட்டுமே இயங்கும். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த அவசரம் கருதிய வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார்கள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறையில் இருக்கும் நிலையில் இந்த 30 நாள் அவகாசம் என்பது அந்த விடுமுறையும் சேர்த்தா அல்லது உச்சநீதிமன்ற விடுமுறைக்கு பிறகு தான் இந்த 30 நாள் அவகாசம் பொருந்துமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த தினத்தில் இருந்தே 30 நாள் அவகாசம் தொடங்கிவிடும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
இதன்படி ஜனவரி 21 ஆம் தேதிக்குள் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்த தண்டனையை நிறுத்தி வைக்க ஆணை பெறலாம். உச்ச நீதிமன்றம் இப்போது விடுமுறை என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்துக்கு டிசம்பர் 25 முதல்தான் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது பதிவாளர் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே 24-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை நிர்வாக ரீதியாக பதிவு செய்யலாம். ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு உச்ச நீதிமன்றம் வழக்கம்போல இயங்கத் தொடங்கியதும் உடனடியாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள் தரப்பில்.
உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை உடைப்பாரா என்பது பொன்முடி தரப்பு எடுத்து வைக்கும் வாதங்களில்தான் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக