புதன், 27 டிசம்பர், 2023

எண்ணூர் அமோனியா கசிவு! ? 8 கிராமங்களில் நடந்தது என்ன

பிபிசி , பிரபாகர் தமிழரசு :   சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண், காது, மூக்கு, நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்கான திரவ அமோனியம் நேரடியாக கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கடலுக்கு அடியில் உள்ள குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு, திரவ அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் வாயு கசிந்துள்ளது.
இந்த திரவ அமோனியா, காற்றில் கலந்து , சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளது. காற்றில் பரவிய அமோனியா வாயுவால், தொழிற்சாலை அமைந்துள்ள பெரியகுப்பம் பகுதி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விஞ்ஞானிகள், உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசு, அந்தக் குழு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கையளித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதுவரை, அந்த தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தள்ளார். தொழிற்சாலையை தற்காலிகமாக மூடவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோரமண்டல் நிறுவனம், கடற்கரையோரம் தங்களது அமோனியா இறக்கும் குழாயில் அசாதாரண சூழலை உணர்ந்ததாகவும், உடனடியாக தங்களது நிலையான செயல்பாட்டு முறையை கையாண்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் என்ன நடந்தது? மக்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்? அசம்பாவிதத்திற்கு யார் காரணம்?

செவ்வாய்க் கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் யாரோ சிலர் எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டியுள்ளனர்.

மிரண்டு எழுந்த மக்கள், மூச்சுவிட சிரமப்பட்டு, கதவுகளைத் திறந்துள்ளனர். கதவைத் திறந்ததும் சிலர் அங்கேயே மயங்கியுள்ளனர், சிலர் கண் விழிக்க முடியாமலும், சிலர் முக எரிச்சல் தாங்க முடியாமலும், சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் அலறித் துடித்து சாலையில் ஓடினர்.

“சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் திருவொற்றியூர் நோக்கி ஓடிச் சென்று என் குழந்தைகளை விட்டுவிட்டு, பின் மீண்டும் வந்து அக்கம் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மக்களையும் கதவைத் தட்டி வெளியேற்றினேன்,” என்கிறார் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா.

மீனவரான சுபத்ரா, தனது ஐந்து வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகளுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி உயிர் தப்பியுள்ளார்.

“எனக்கு மூச்சுவிட சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், எனக்கே அப்படி இருந்தால், எப்படி உணர்கிறோம் என்று சொல்லத் தெரியாத என் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டுதான், உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர்களை காப்பாற்றினேன்,” என்றார் சுபத்ரா.

சுபத்ராவைப் போலவே, அந்தச் தொழிற்சாலை அமைந்துள்ள பெரியகுப்பம் பகுதி மக்கள் அனைவரும் தங்களது உடமைகளை விட்டு, ஓடிச் சென்றுதான் உயிர் தப்பியுள்ளனர்.

நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்?


இரவு 11.30மணிக்கு வாயு கசிவு நடந்திருந்தாலும், வீட்டிற்குள் இருந்ததால், மக்கள் ஆரம்பத்தில் எதுவும் உணராமல் இருந்துள்ளனர்.

“நாங்கள் மீனவர்கள். என் கணவர் பெரும்பாலும் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுவிடுவார். அதனால், இரவு கதவைச் சாத்தினால், அதிகாலையில் தான் திறப்போம். நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டி கூச்சலிட்டதால் முதலில் திறக்கவில்லை. பின்னர் தான் எனக்குத் தெரிந்தவர்களின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து வெளியேறினோம்,” என்றார் பெரியகுப்பத்தைச் சேர்ந்த ரோகிணி.

சுமார் 11.30 மணியளவில், பெரியகுப்பத்தை கடந்து மற்ற கிராமங்களுக்கு செல்லும் வழிப்போக்கர்கள்தான் இந்த அமோனியா வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன், அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதாகக் கூறுகின்றனர் பெரியகுப்பம் கிராம மக்கள்.

“இந்த ஆலையின் நிர்வாகத்தினரோ, காவல்துறையோ அல்லது அரசு அதிகாரிகளோ எங்களை மீட்கவில்லை. இந்த வழியாகச் சென்றவர்கள்தான் எங்களை வெளியே வரும்படி கதவைத்தட்டி வெளியேற்றினர். இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றதும்தான் அரசு பேருந்துகளும், ஆம்புலன்ஸ்களும் வந்தன. அங்கிருந்து தான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றார் நந்தினி.

வழிப்போக்கர்கள் கதவை தட்டியபோது, பெரியகுப்பத்தில் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த விஜயமூர்த்தி, அடித்துப் பிடித்து வெளியேறி, தன் குடும்பத்தினர் மட்டுமல்லாது அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

இப்படி மக்களை மீட்டுக் கொண்டிருக்கும்போதே அமோனியா வாயுவைத் தொடர்ந்து சுவாசித்ததால், சாலையிலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி சரிந்திருக்கிறார் விஜயமூர்த்தி. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், தற்போது திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். அதனால், கிராமத்தில் ஆண்கள் குறைந்தளவிலேயே இருந்தோம். அதனால், அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டியிருந்தது. இப்போதும் சுவாசப் பிரச்னை இருக்கிறது. மருத்துவர்கள் முதலுதவி செய்து, எக்ஸ் ரே(X ray) மற்றும் பிற சோதனைகள் செய்துள்ளனர். முடிவு வந்த பிறகு தான் என்ன நிலை எனத் தெரியும்,” என்றார் விஜயமூர்த்தி.

அமோனியா சுவாசித்த மக்களுக்கு என்னவானது?
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகளும், உடல் உபாதைகளும் இருப்பதாக தனியார் மருத்துவமனையின் இயக்குனர் செல்வராஜ் பிபிசியிடம் கூறினார்.

“அமோனியா சுவாசித்ததாக எண்ணூரில் இருந்து அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மூச்சு விடுவதில் சிக்கல், நெஞ்சு எரிச்சல் மற்றும் கண், காது, மூக்கு மற்றும் தோள்களில் எரிச்சல் உள்ளது. அவர்களுக்கு முதலுதவி செய்து சிகிச்சையளித்து வருகிறோம். குறைந்த பாதிப்பு உள்ளவர்கள் இன்றே வீடு திரும்புவார்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் மட்டும் நாளை வரை மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார்கள்,” என்றார்.

இன்று மாலை வரை எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களில், சுமார் 45 பேர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும், ஆறு பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தின் போது அமோனியா வாயுவை சுவாசித்தவர்கள் மட்டுமின்றி, நிலைமை சரியாகிவிட்ட பின் தங்களது வீடுகளுக்குத் திரும்பச் சென்றவர்களும் அந்த அமோனியா வாயு தாக்கத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று மதியம் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனர்.

ஒரு தனியார் மருத்துவமனையில், இன்று காலை 11 பேர் மட்டுமே அமோனியா வாயு சுவாசித்ததால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலை 4 மணியளவில், அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.

பிபிசி, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் மூன்று பேர் சுவாசக்கோளாறால் மருத்துவமனைக்கு அவசரமாக அழைந்து வந்து அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இன்றே வீடு திரும்புவார்கள் என்றும் கூறினார். மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரியகுப்பம் பகுதியில் நடந்து வரும் மருத்துவ முகாம்

இதற்கிடையே, நேற்று நள்ளிரவு ஊரைவிட்டு வெளியேறிய மக்கள், இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து, கோரமண்டல் ஆலையின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பிபிசியிடம் பேசிய லட்சுமி ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்றார்.

“இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறினர். ஆனால், நாங்கள் காலை வீட்டிற்கு திரும்ப வந்து, கதவைத் திறந்ததும், அதே புகை வாசம் இருந்தது. தற்போதும், அந்த வாசம் காற்றில் உள்ளது. இப்படி இருக்கையில், நிலைமை இயல்பாகிவிட்டதாக எப்படிக் கூற முடியும்,” எனக் கேட்டார்.

மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதுவரையில், ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடரும் மக்கள் போராட்டம்

எண்ணூரில் நடக்கும் தொடர் விபத்துகளுக்கு என்னதான் தீர்வு?

போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலை

தொழிற்சாலைகள் நிரம்பியுள்ள வட சென்னையின் எண்ணூர் பகுதியில், விஷவாயு கசிவு, அமோனியா வாயு கசிவு, கடலில் எண்ணெய் கலப்பது, மழை நீரில் எண்ணெய் கசிவு என தொடர் விபத்துகளால் எண்ணூர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், எண்ணூர் பகுதியில் இனி எந்த ஒரு புதிய தொழிற்சாலையோ அல்லது இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கமோ அறவே கூடாது என்றார்.

“எண்ணூர் பகுதி தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கும் திறனை தாண்டிவிட்டதாக பல ஆண்டுகளுக்கு முன்னரே தேசிய பதுமைத் தீர்பாயத்தின் அறிக்கையில் கூறிவிட்டனர். ஆனாலும், அதனை யாரும் பொருட்டுத்துவதில்லை. அதனால், எண்ணூரை தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்,” என்றார்.

மேலும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளும் உயர்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

“நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அங்கேயே செல்பட்டு வருவதால், அவர்கள் அதே பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுகளை வெளியேற்றி வருகிறார்கள். தற்போதைய பாதிப்புகளை உணர்ந்து, அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.

கருத்துகள் இல்லை: