வியாழன், 21 அக்டோபர், 2021

இயக்குனர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

BBC : சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்வதாக பலமுறை புகார் தெரிவித்தும், இதனை அனுசரித்து செல்லும்படி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தினர் தன்னிடம் கூறியதாக மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது, மாணவி புகார் தெரிவித்தும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு உறுதி செய்திருக்கிறது.
போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5 பேர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர் நிலைகளையும், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்‌ பேரில் மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது கிரிக்கெட் மைதானத்திற்கு இந்த தடைகள் நீக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மைதானம் சீல் வைக்கப்பட்டிருந்த போது ஒரு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அப்போது பயிற்சிக்கு வந்த 16 வயது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பயிற்சியாளராக இருந்த தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் மாணவி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், அனுசரித்துச் செல்லும்படி மாணவியிடம் நிர்வாகத்தினர்‌ தெரிவித்துள்ளதாக மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மாணவி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் மற்றும் அதற்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் புகாரளித்துள்ளார்.

மாணவியின் புகாரை விசாரித்த குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு மாணவிக்கு கிரிக்கெட் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் மாணவி புகார் தெரிவித்தும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காதது உறுதியானது.

இதையடுத்து கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யும்படி புதுச்சேரி மேட்டுப்பளையம் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதனை பிபிசி தமிழிடம் பேசிய புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு நல அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

"புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது போக்சோ பிரிவு 10 மற்றும் 12ன் படி பாலியல் சீண்டல், பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் தாமோதரன், பயிற்சியாளர் ஜெயக்குமார், செயலாளர் வெங்கட் மற்றும் புதுச்சேரி சீனியர் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் (இயக்குநர் ஷங்கரின் மருமகன்) உள்ளிட்டவர்கள் மீது பாலியல் குற்றத்தை மறைத்து தவறுக்கு உடந்தையாக இருந்ததால் போக்சோ பிரிவு 12 படி பிரிவின்‌ கீழ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ‌

புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 5 பேர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: