நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் வெள்ளிக்கிழமை இரவு நடுக்கடலில், இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டனர். இதில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் செல்வராஜ் (35), பழனிச்சாமி (30), ராஜா (38), பொன்னுக்குட்டி (48), விந்தன் (32), விஜி (27), அமிர்தராஜ் (30) ஆகியோர் ஒரு விசைப் படகிலும், அதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (34), பாலையா (45), சந்தோஷ் (20), ராஜசேகர் (20), ரவி (20), செந்தில் (32), ஜெகன் என்ற வெங்கடேசன் (32) ஆகியோர் மற்றொரு விசைப் படகிலும் கடந்த 15-ம் தேதி இரவு நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் நாகை துறைமுகத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம்.அப்போது 6 நூலிழைப் படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை சுற்றி வளைத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினராம்.கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளால் நாகை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கியுள்ளனர். இதில், மீனவர்கள் பாலையா, பழனிச்சாமி, ஜெகன் என்ற வெங்கடேசன் ஆகிய 3 பேரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.மேலும், நாகை மீனவர்களின் படகுகளிலிருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்ளை இலங்கை மீனவர்கள், பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் 14 பேரும், சனிக்கிழமை காலை நாகையில் கரையேறினர்.கத்திக் குத்தில் காயமடைந்த மீனவர்கள் 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அமைச்சர் ஆறுதல்: இலங்கை மீனவர்களின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகை மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி ஆகியோர் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக