நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை நாட்டின் சகலப்பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய சூப்பர்மேன் போல பார்த்து மயங்குவது என மயக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சுவாமி நித்யானந்தா அதுபோல் மயக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். எழுத்தாளர்கள், நடிகர்கள், மெத்தப்படித்தவர்கள், அதிகாரிகள் என எல்லா சூப்பர்மேன்களும் சுவாமி நித்துவின் கால்களில் விழுந்துள்ளனர். அது மட்டுமா? கட்டுக்கட்டாக பணமும் செக்-புக்கில் கையெழுத்துப் போட்டும் கொடுத்துள்ளனர். பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கதைகளைப் பார்த்துக் கொண்டும் அது பற்றி பேசிக்கொண்டும் இருந்தவர்கள் தானே இவர்கள். பிறகேன் விழிப்படையவில்லை?
மயக்கங்கள் இரண்டு விதத்தில் பிடித்துக் கொள்கின்றன. ஒன்று ஆராயாமல் நம்புவது, மற்றொன்று தான் நம்புவதைத் தவிர மற்றது எல்லாம் தவறு என நினைப்பது, ஆகவே ஒவ்வொருவரும் தான் அனுபவப்படும் வரை சிந்திப்பதில்லை.
தங்களின் அறிவு, வயது பற்றிய எந்த நினைப்புமின்றி, நித்யானந்தா என்ற 30 வயது இளைஞனிடம் விழுந்து சரணாகதி அடைந்ததை எண்ணி யாரும் வெட்கப்படவில்லை. சுவாமி நித்யானந்தா ஆன்மீகப் புத்தகங்களை அதிகமாகப் படித்து அதை எளிமையாக கதை கதையாகச் சொல்வதில் தனித்திறமை பெற்றவர் அவ்வளவுதான். ஆனால் அவரை ஏதோ அவதாரமாகவும் சகலஜாலங்களும் செய்யக்கூடிய சக்திபடைத்தவர் என்றும் இன்னும் ஒருபடி மேலே போய் அவரைக் கடவுள் என்றே எண்ணினர்.
காவி, விபூதி, கொஞ்சம் மதத் தத்துவ தத்துப்பித்துகள் தெரிந்தால் போதும் ஆயிரக்கணக்கில் இளிச்சவாயர்கள் கிடைப்பார்கள் என்பது எல்லா ஆனந்தாக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் தனது செயலை நியாயப்படுத்தி நடிகையுடன் ஆத்மபரிசோதனை செய்ததாகச் சொல்லும் தைரியத்தை நித்யானந்தாவுக்குக் கொடுக்கிறது. ஆத்ம பரிசோதனை செய்ததை ஏன் வீடியோ வெளியான பின் சொல்கிறார். அதை அவரே சி.டி போட்டு பக்தர்களுக்கு காட்டவேண்டியது தானே. அந்த ஆத்மபரிசோதனையை படம் பிடித்து வெளியிட்ட சீடர் ஏன் இன்னும் தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் யாருக்கும் இன்னும் எழாது என நம்புகிறார் சுவாமி நித்து. அவரது சீட கோடிகளோ கோடிகளோடு வரிசையில் நிற்கின்றனர்.
சுவாமி நித்து, நடிகையை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் அவர் மனசாட்சிக்காவது அஞ்சுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாமியார் அடுத்தடுத்து சித்துவேலைகளில் இறங்குகிறார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் மனிதன் கூட இல்லை. பிறகெப்படி மாமனிதன் ஆவது? உண்மையச் சொன்னா அவர் ஒரு நித்திய பிராடு.
அவர் மட்டுமில்லை அவரைப் போல் பலர் ஆடம்பரம், படோபடம், வெளிநாடுகளில் கணக்கிலடங்கா சொத்துக்கள், அடியாட்கள் சகிதம் வலம் வருவதை அருவருப்பாக நினைப்பதில்லை. நாம் தான் இவர்களிடம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிகொடுத்துவிட்டு அசடு வழிந்து நிற்கிறோம்.யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும;நானே சொன்னாலும்உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்>பொருந்தாத எதையும் நம்பாதே” – புத்தர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக