கதை விவாத அறையில் ஆரம்பிக்கிறது இந்த உரிமை. எல்லாரும் கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருந்தால் இவன் எதற்குத் தேவையில்லாமல் இங்கே என்ற எண்ணம் வருமல்லவா? அதைப் போக்குவதற்காகவாவது பேச வேண்டும். நமது பேச்சை அந்த இடத்தில் மதிக்கிறார்களோ, இல்லையோ. காட்சி இப்படியிருந்தால் நல்லாயிருக்கும் சார் என்று தைரியமாக சொல்ல வேண்டும். அதுதான் உதவி இயக்குனரின் உரிமை. அவ்வளவு ஏன்? அந்த அறையின் மூலையில் பல்லி ஒன்று சுவற்றில் ஒட்டிக் கொண்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்வப்போது ‘ப்ளூச் ப்ளூச்’ என்று ஏதாவது சொல்லிக் கொண்டேயிருக்குமல்லவா? அதுவே நான் இங்கதான் இருக்கிறேன் என்பது மாதிரி குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு உதவி இயக்குனர் உரிமையோடு பேச வேண்டாமா?
பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகச் சேர்கிற சிலர், அந்த இயக்குனர் சொல்கிற எல்லா விஷயத்தையும் சூப்பர் சார். பிரமாதம். ஆஹா என்று பாராட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்நியன் படத்தின் கதை விவாதத்திலும் அதுதான் நடந்தது ஷங்கருக்கு.
அவர் என்ன செய்தார் தெரியுமா? பல வருடங்களுக்கு முன் தன்னோடு உதவி இயக்குனராக இருந்த செந்தமிழனை வீடு தேடிப் போய் அழைத்துவரச் செய்தார். இருவரும் பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள்.
அதன்பின் ஷங்கர் பல வெற்றிகளைக் கொடுத்து உயர்ந்த இடத்துக்குப் போய்விட்டார். செந்தமிழனுக்கு அவ்வளவு பெரிய வெற்றி வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. பல வருடங்களாக இருவரும் சந்திக்கவும் இல்லை. போனில் கூட ஒரு ஹலோ சொன்னதில்லை. இந்த நிலையில்தான் திடீரென்று இவர் வீட்டுக்கு வந்து நின்றது ஒரு கார். “ஷங்கர் சார் உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார்” என்றார் வந்தவர்.
இந்த திடீர் அழைப்பை ஏற்றுக் கொண்டு அங்கு போன செந்தமிழனிடம் ஷங்கர் சொன்ன வார்த்தைகள்தான் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். “நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், இல்லைன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்” என்றார். பிறகு ‘அந்நியன்’ படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றினார் செந்தமிழன்.ஷங்கரிடம் இருந்த இந்தப் பக்குவம் இன்று பல இயக்குனர்களிடம் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த அணுகுமுறைதான் ஷங்கரை இன்னும் வெற்றிப்பட இயக்குனராகவே வைத்திருக்கிறது.
ஷங்கருடன் ஓர் உதவி இயக்குனரைப் போலத்தான் உற்சாகமாகப் பணியாற்றினார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. ஷங்கரின் கதை விவாதத்தில் மட்டுமல்ல, எடுத்த காட்சிகளைத் திரையில் பார்த்து அதில் கரெக்ஷன் சொல்லித் திருத்துகிற அளவுக்கு அவரது பங்கு மிக மிக முக்கியமானதாக இருந்தது. இது ஷங்கர் யூனிட் என்று ஒருபோதும் அவர் பிரமிப்பு காட்டியதில்லை. மிகப்பெரிய எழுத்தாளர் என்று ஷங்கரும் நான்கடி தள்ளி நின்று பழகவில்லை.
தேக்கடிக்கு ஒரு முறை கதை விவாதத்துக்காகப் போயிருந்தோம். அப்படியே வேறு விஷயத்தை நோக்கி டாபிக் போய்விட்டது. சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா சார், இப்போ உங்க எல்லாருக்கும் அடிவிழப் போகுது. வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டதை இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு என்கிறார் செந்தமிழன்.
பாரதிராஜாவிடம் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பாக்யராஜும் இப்படி தான் சொல்ல வந்ததைத் தயங்காமல் சொல்லிவிடுகிற அளவுக்கு தைரியசாலியாக இருந்தார். அவ்வளவு ஏன்? இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்த முதல் படத்திலேயே அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். எந்த காட்சிக்காக தெரியுமா?
பதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை காதலிக்கும் டாக்டர் அவரை எப்படியாவது அனுபவித்துவிட்டு விலகி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பார். அது தெரியாத ஸ்ரீதேவி டாக்டரை உண்மையாகக் காதலிப்பார். ஒரு சந்தர்ப்பத்தில் தந்திரமாக ஸ்ரீதேவியை ஏமாற்றி தனது வேட்கையை அவர் முடித்துக் கொள்வது போலக் காட்சி. இதில் தனது கற்பை ஸ்ரீதேவி பறி கொடுப்பது போலத்தான் கதையை அமைத்திருந்தார் பாரதிராஜா. அந்தக் காட்சியை வேறு விதமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிற விதத்தில் ஒரு இளநீர் வியாபாரி இளநீரை சீவிக் கொண்டிருப்பது போலவும் ஒவ்வொரு சீவலுக்கும் ஒவ்வொரு துணியாக அவிழ்வது போலவும் காட்சியை அமைத்திருந்தார். கடைசியாக ஸ்ட்டிரா போட்டு இளநீரை ஒருவர் உறிஞ்சுவது போலத் தொடருமாம் அது.
இப்படி ஒரு காட்சியை வைத்தால் இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இது நம் கலாசாரம் சார்ந்த விஷயம். கதாநாயகி தனது கற்பை இழந்துவிட்டு பின்பு ஹீரோவைக் கல்யாணம் செய்து கொள்வது போல காட்சி இருந்தால் அது சரியான முடிவாக இருக்காது என்று வாதிட்ட பாக்யராஜ், அந்தக் காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் கூறினாராம். இளநீரை சீவும்போதே அது கைதவறி கீழே விழுந்து உருண்டு ஓடிவிடுவது போல ஒரு காட்சியை எடுத்து படத்துடன் சேர்த்து கதையையே மாற்றினார் பாக்யராஜ்.
பாக்யராஜ் படங்களில் கதை விவாதம் எப்படியிருக்கும்?
தனது உதவி இயக்குனர்களுடன் அமர்ந்து கதை பேசுவார். பல காட்சிகளை அப்போது கலகலப்பாக உருவாக்குவார்கள் இவர்கள். சுமார் நாலைந்து நாட்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் தன் உதவியாளர்களுக்கு திடீரென்று லீவ் கொடுப்பார் பாக்யராஜ். ஒரு நாலைஞ்சு நாள் கழிச்சு வாங்கப்பா என்று செலவுக்கும் பணத்தை கொடுத்து அனுப்பிவிடுவார். வெவ்வேறு வேலைகளில் பிசியாகிவிட்டு என்ன பேசினோம் என்பதையே கிட்டதட்ட மறந்துவிட்டு நிற்பார்கள் அத்தனைபேரும். அப்போது ஒரு பேனாவும் பேப்பரும் கொடுத்து நாலைஞ்சு நாட்களுக்கு முன்னாடி நாம பேசின விஷயத்தைக் கொஞ்சம் எழுதிக் கொடுங்க என்பார். அவர்கள் எழுதிக் கொடுக்கிற சீன்களை மட்டுமே படத்தில் சேர்த்துக் கொள்வார். மற்றவை அப்படியே குப்பையில்!
இந்த யுக்தியில் ஒரு உளவியல் இருக்கிறது. சுவாரஸ்யமான விஷயங்கள் மட்டுமே மனத்தில் நிற்கும். மற்றவை மண்டையை கசக்கினாலும் நினைவுக்கு வராது. அப்படி எழுதப்பட்ட காட்சிகள்தான் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.
ஏ.ஆர்.முருகதாசிடம் அவரது முதல் படமான தினாவில் இருந்தே பணியாற்றி வருகிறார் சரவணன். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு படத்திலும் சரவணன்தான் இணை இயக்குனர். முருகதாசின் ரமணா மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும், மாஸ் ஹீரோவான விஜயகாந்த்தை அவரது ரசிகர்களுக்காக எவ்வித காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளைமாக்சில் கொன்றுவிடுகிற அளவுக்கு வலுவான டைரக்டராக முருகதாஸ் இருந்தார் என்பதும் நாம் அறிந்த விஷயம்தான். அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் சிங் ஒருவர் நடித்திருப்பார்.
இந்த சிங் கேரக்டரில் நடிக்க நல்ல நடிகரை தேடிக் கொண்டிருந்தார் முருகதாஸ். அவர் புதியவராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது அவரது விருப்பம். ஆனால் முருகதாஸ் நினைத்த மாதிரி ஒருவரும் அமையவில்லை இந்த கேரக்டரில் நடிக்க. கிட்டதட்ட மாதக்கணக்கில் இந்த தேடுதல் முயற்சி தொடர்ந்தது. ஆனால் தன் முயற்சியில் தோல்விதான் கிட்டியது தாசுக்கு. ஒரு கட்டத்தில் சோர்ந்து போன அவர், படப்பிடிப்பில் கண்ணில் தென்பட்ட ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு தாடியை ஒட்ட வைத்து சிங் ஆக்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அந்த நேரத்தில்தான் சரவணனின் ஒரு வார்த்தை முருகதாசை நிலை குலைய வைத்தது.சார். இந்த ஆளுக்கு நீங்க அந்த கேரக்டரை கொடுத்திங்கன்னா அந்த கேரக்டரே நாசமாயிரும். நீங்க இப்போ செய்யுற வேலை நடந்து போக அலுப்பு பட்டுக்கிட்டு சித்தப்பா வீட்ல துங்குன மாதிரி இருக்கு என்று முகத்தில் அடித்தாற்போல சொன்னார். இப்படி ஒரு உதவி இயக்குனர் சொன்ன பிறகு பிடிவாதமாக இருக்க முருகதாஸ் என்ன, முரட்டு ஆசாமியா? சரிப்பா. நீ சொன்ன மாதிரியே அந்த கேரக்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆளைத் தேடுவோம் என்றார். எப்படியோ பஞ்சாபிலிருந்தே ஒருவரைக் கொண்டு வந்து நடிக்க வைக்க, படத்தில் அந்த கேரக்டர் தனியாகப் பாராட்டப்பட்டது பலராலும்.
நாம் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாரோ, இல்லையோ. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுவோம். அதனால் என்ன ஆனாலும் சரி என்று நினைக்கிறவர்தான் உண்மையான உதவி இயக்குனராக இருக்க முடியும். இதே சரவணன் முருகதாசின் கஜினி படத்திலும் ஒரு கருத்தைச் சொன்னார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத டைரக்டர், பின்பு இதே கதையை இந்தியில் எடுக்கும்போது சரவணன் சொன்ன விஷயத்தைத்தான் செய்தார்.
அது அடுத்தவாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக