செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்: தமிழ்த்தேசியத்தின் பயங்கரவெறிக்கு ஈடுகட்டுவதுபோல் சிங்கள் இனவெறி .

போருக்குப் பின்னான சமுக மாற்றங்களுக்களும் முற்போக்குவாதிகளின் கடைமைகளும் (1)
-  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
முன்னுரை.
 கடந்த ஐம்பது வருடங்களாதகப் பல அரசியல் மாற்றங்கள் உலகிற் பல இடங்களில் நடந்திருந்தாலும், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில்,  அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களின் பன்முகக் கருத்துக்கள் பற்றி பல அறிஞர்கள் ஆராய்கிறார்கள். அதற்கு ஒரு பெரிய காரணியாகவிருப்பது பெருமளவான தமிழர்கள் புலம் பெயர்ந்திருப்பதாகும். புலம் பெயர்ந்த தமிழர்களால் அவர்கள் புலம் பெயர்ந்த நாட்டு மக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்  தமிழர்களின் பிரச்சினைகள் பரவலாக்கப்படுகின்றன.

 புலம் பெயர்ந்த பல நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழரின் இன்றைய அரசியல், கலாச்சாரம், பண்பாடு, சுயதேவை, குடும்ப உறவுமுறைகளும் தொடர்புகளும், அவர்களுக்கும் இன்று இலங்கையில் வாழும் தமிழர்களுக்குமான உறவுகளுடனும் உதவிகளுடனும் தொடர்பு பட்டவை. ஆவை எந்த அளவுக்கு ஒரு புதிய சமுதாயததை உருவாக்க உதவுகிறது என்பது போன்ற பலதரப்பட்ட விடயங்கள் பல்கலைக்கழக் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப் படுகின்றன.

 ஓரு நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால், அந்நாட்டில் ஏதோ ஒரு பிரச்சினை வந்து நாடுகடந்த மக்களில் இலங்கைத் தமிழர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட நாட்டில் வாழும் தமிழ்மக்களின் சனத்தொகைக்குச் சமமான விதத்தில் இலங்கைத் தமிழர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

எங்கள் சமுதாயத்தைப்பற்றி மற்றச் சமுதாய அறிஞர்கள் பன்முக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவது போல் எங்களைப்பற்றிய சுய விமர்சனங்கள், ஆய்வுகள் என்பதை நாங்கள் ஒரு ஆரோக்கியமுறையில் இதுவரையும் கைக்கொள்ளவில்லை.

காலனித்துவத்தின் ஆதாயத்துக்கான பொருளாதாரத்தைக்கொண்டிருந்த இலங்கைத் தீவு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுவர முன்னெடுத்;த இடது சாரிகள் தமிழ் சிங்கள் அரசியல்வாதிகளால் ஓரம் கட்டப்பட்டதை நினைத்துப் பார்ப்பதில்லை.

 வடக்கில் தொடங்கிய பல்விதமான பொருளதார மாற்றங்களின் ஒரு அடையாளமாக வளர்ந்த கூட்டுறவுச் சங்கங்கள் பற்றி யாரும் பேசுவது கிடையாது.
 இலங்கை மக்கள் அத்தனைபேருக்கும் சம உரிமைகள் இருக்கவேண்டுமென்ற போராட்டங்களில் வடக்கில் வெடித்த சாதிக் கலவரங்கள் மறைக்கப்படுகின்றன.
 இலங்கை அரசியலில் தோளோடு தோள் கொடுத்துப் போராடிய இடதுசாரிகள் பெரும்பாலோர் இலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களால், சரித்திரத்தால் மறைக்கப்பட்ட வெற்று மனிதர்களாகிவிட்டார்கள்.

 தமிழர்களிலுள்ள மேல்வர்க்கம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் ஒட்டு மொத்த தமிழினத்தின் பிரச்சினையாக வளர்க்கப்பட்டது. வடக்கில் ஆளுமை கொண்டிருந்த மேற்தட்டு ஆதிக்கவர்க்கம் ஒட்டுமொத்தத் தமிழர்களின் வாழ்க்கையையும் சின்னாபின்னப் படுத்த ஆரம்பித்ததை எதிர்க்க வலிமையற்ற சக்தியாக முற்போக்குவாதம் ஓரம் கட்டப்பட்டது.

தமிழ்ச்சமுகத்தின் ஒருசாரார் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்குத் தமிழ்மொழியையும், தமிழ் உணர்வையும் தமிழ்ப் பிற்போக்குவாதம் ஆயுதமாக எடுத்துப்போராடியது, அந்த விதமான அரசியல் நகர்வுகள், இந்தியாவிலுள்ள தமிழுணர்வுவாதிகளின் ஆசீர்வாதத்தைப்பெற உதவி செய்தது. அத்துடன், 1970ம் ஆண்டுகளில் தெற்காசியாவிற் தொடர்ந்த அகில உலக அரசியல் வலிமைப்போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் ஒரு ஆயதமாக இந்தியாவினால் பயன்படுத்தப்பட்டது.

 ஓரு சிறிய நாட்டுக்குள் ஒரு பெரிய அரசியற் பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் தமிழ் இனம் இன்று பல நாடுகளில் புலம் பெயாந்திருக்கிறது. தாங்கள் பிறந்த பூமியின் உண்மை நிலை, அரசியல், பொருளாதார மாற்றங்கள், தமிழ் மக்கள் வெளிநாட்டுக்கும் உள்நாட்டுக்கும் இடம் பெயர்ந்ததால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்கள் என்பதைப் பன்முக ஆய்வுக்கு உள்ப்படுத்தாமல் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு உண்ர்ச்சி வசப்படுதல் பல எதிர் விளைவுகளைத்தான் தந்துகொண்டிருக்கிறது.

 எங்கிருந்தாலும் எப்படிவாழ்ந்தாலும் எங்களுக்கு ஒரு சமுதாயக்கடமையிருக்கிறது. இது மனிதாபிமானத்தை அடிப்படையாக்கொண்டது. எங்கள் இனத்தின் விடுதலைக்காகப்போராட ஆயுதம் எடுத்தவர்கள் இயக்க ரீதியாகப் பலி எடுக்கப்பட்டபோது, 'எங்கள் இன இளைஞர்களை இப்படி ஏன் கொலை செய்கிறீ;கள்' என்ற கேள்வியை எழுப்பாமல், பலியெடுத்த கொலையாளிகளுக்குக் கொக்கொ கோலா உடைத்துக்கொடுத்துத் கொலைவெறியில் ஏற்பட்ட தாகத்தைத் தீர்த்த சமுகச் சிந்தனையை நாங்கள் இன்று மாற்றவேண்டும். வறுமை தாங்காமல் களவாகக் கோழியைக் கள்வாடியவர்களை கொடிக்கம்பத்தில் ஏற்றித்தூக்குத் தண்டனை கொடுத்ததைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த அரசியல் சிந்தனையின் வளர்ச்சி இன்று, பழிவாங்கும் அரசியலைத் தொடர்கிறது.

தான் ஆசைப்பட்ட பெண் இன்னொருவனைச் செய்தபடியால் அந்தக் கணவனைத் தனக்குத் தெரிந்த ஆயத தாரிகள் மூலம் துரோகியாக்கிக் கொலைசெய்து தான்விரும்பியவளை விதவைக்கோலத்தில் பார்த்துச் சந்தோசப்பட்ட மிகக்கேவலமான புல்லுருவிகளை வளர்த்துவிட்டவர்கள் நாங்கள். தன்னை விட அடுத்த கடைக்காரன் கடையில் நல்ல வருமானம் வருகிறது என்பதைப் பொறுக்காத பொறாமைவாதி அடுத்த கடைக்காரனை, ஆர்மிக்காரனுச் சாமான் விற்ற தமிழத்துரோகி என்று சுட்டுத் தீர்;த்தவர்களை மாவீரர்களாகப்போற்றுபவர்கள் நாங்கள்.  ஆயத கலாச்சாரத்துக்குப் பயந்து எங்களுக்கு முன் நடந்தததைக்கேள்வி கேட்காமல் இதுவரை இருந்து விட்டோம்.

 குறுகிய அரசியற் பாhவைகளைக் கடந்தது மனிதநேயம். சாதி, மத இனமென்று பார்க்காது விழுந்தவனை எழுந்து நிற்க உதவுவது மனித நேயம். என்னால் முடிந்ததை, என்னைவிட வசதியற்ற ஒன்றுமில்லா ஏழைக்குக்கொடுக்க நினைப்பது மனித தர்மம். இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள், பல துறைகளிலும் நேராக நிமிர்ந்து நின்று வாழ்வை எதிர்கோக்குகிறார்கள், ஆனால் எங்கள் சகோதர, சகோதரிகள் பலர் உண்ண உணவின்றி, உடுக்க நல்ல உடையின்றித் தாயகத்தில் தவிக்கிறார்கள்.

 இந்தியாவிலிருந்து 2 விகிதமான இந்திய மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களிற் பெரும் பாலோர் தங்களால் முடிந்த உதவிகளைத் தங்கள் இனத்தவர்களுக்குச் செய்கிறார்கள். புத்திஜீவீகள் தங்கள் மூலதனமான அறிவுப்பெருக்கத்தைத் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  அண்மையில், ஒருதரம் டெல்கி சென்றிருந்தபோது தவறாக ஒரு மகாநாட்டு மண்டபத்தின் வாசலுக்குள் நுழைந்தபோது, புலம் பெயர்ந்த இந்திய டாக்டர்களின் அகில உலக மகாநாடு இந்தியாவிலுள்ள புற்று நோயாளர்களுக்கு எப்படி உதவுவது என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் மிகத் திறமைபடைத்த ஒரு சாதாரண வைத்தியரைக்காண்பதே அரிது.

படித்த மேற்தட்டுத் தமிழர்கள் வெளியேறியபின் அங்கிருக்கும் ஏழைத்தமிழர்களுக்கு வைத்தியம் செய்யத் தமிழர்களின் எதிரி என்று பார்க்கப்படும் சிங்கள வைத்தியர்தான் செல்கிறார்கள். இலவசக்கல்வி, இலவச மருத்துவ வசதிபோன்ற பல அரச உதவிகளைப்பெற்றுப் பெரியபடிப்புக்களுடன் புலம் பெயர்ந்த பலரில் ஒருசிலரே தங்கள் நாட்டுடன் ஒரு ஆரோக்கிய உறவை வைத்திருக்கிறார்கள்.

 இரண்டாம் உலக யுத்தத்திற் தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனியும் யப்பானும் உடைந்து விட்ட கட்டிடங்களைத் திருத்தவும், தளர்ந்துபோன பொருளாதாரத்தை மேம்;படுத்தவும், சிதைந்துவிட்ட கல்வி வளங்களைச் சீர்திருத்தவும், அழிந்துபோன பாதைகளைத் திருத்தவும் தங்கள் எதிரியான அமெரிக்கiர்த்தான் நாடினார்கள். அன்று தோல்வியைச் சந்தித்த ஜேர்மனியும் யப்பானும்  இன்று பணக்காரநாடுகளில் முன்னிலையிலிருக்கிறார்கள்

இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் ஏராளம். மனிதநேயவாதிகள் தமிழர்களின் இன்றைய தேவைகளையும் எதிர்கால முன்னேற்றங்களையும் கவனத்தில் எடுப்பது இன்றியமையாத கடமைகளிற் சிலவாகும்.

புலம் பெயர்ந்த பலர்,சொந்தங்களுக்குச் செய்யும் உதவிகள், தாங்கள் கல்வி கற்ற கல்வி நிலையங்களின் மேம்பாட்டுக்கு உதவுதல், பிறந்த ஊரின் முன்னேற்றத்துக்கு உதவுதல், அரசியல், பொரளாதார, சமூக சூழ்நிலையால் அல்லற்படும் ஏழைகளுக்கு உதவுதல் என்று பல உதவிகளைச்செய்கிறார்கள், இது மனிதப் பண்பு.

இன்று இலங்கையின் பொருளாதார விருத்தித் திட்டங்களில் பல இடங்கள் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இலங்கையின் ஜிடிபி (குறொஸ் டொமஸ்ரிக் புறடக்ட்ஸ்) 8 விகிதமாக வளர்கிறது. வடக்கும் கிழக்கும் இந்தத் திட்டங்களாலும் விவசாயத்தை மேன்படுத்துவதாலும் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்பத்தைக் காணவிழைகிறது.
இன்றைய நிலையில் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் பொருளாதார உதவி மட்டுமல்லாமல் புத்திஜீவித்துவ வளர்ச்சிக்கான உதவிகளும் தேவை.

இன்று இலங்கையில் தமிழ்ப்பகுதிகளில் ஆயிரக்கணக்காகப் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த  வந்த கலாச்சார விழுமங்கள் பாதுகாப்பாரின்றி அழிகின்றன. இங்கிருக்கும் புத்திஜீவிகளின் அளப்பரிய கொடையாயன அறிவுப் பரிமாறல்கள் வளர்ந்துவரும் தமிழ்த் தலைமுறைக்குக் கிடைக்காமல் தடைப் படுத்தப்படுகின்றன. புலம் பெயர்த்த சில தமிழ்; எழுத்தாளர்கள், கலைஞர்கள,; உலக மட்டத்தில் வைத்துக் கணிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் இவர்களைப்பற்றி இலங்கையில் வளரும் இளம் தலைமுறை அறிந்துகொள்ள முடியாதிருக்கிறது.

 ஓரு மனிதனின்  தன்னைத் தன் சமூகத்தில் எப்படிப் பிணைத்துக்கொள்ளப்போகிறான், தனது
சமூகத்தை மேன்படுத்தப்போகிறான், அவனைச்சுற்றிய மற்றச் சமூகத்துடன் எப்படித்தன்னைப் பிரதிநிதித்துவம் செய்யப்போகிறான் என்பன அவனின் அடிமன உந்துதலால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த  உந்துதல்களுக்கும் அதனடிப்படையான நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவன் பிறந்த ,வளர்ந்த சூழ்நிலை, படித்த கல்வியின் ஆளுமை, வாழ்க்கையின் அனுபவங்கள் என்பன உதவி செய்கின்றன.

கிரேக்க அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்கள் மனித நடவடிக்கைகளுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறைக்கும் அவர்களின் பிறப்புடன் சேர்ந்த சில அடிப்படை விடயங்கள் அத்திவாரமிடுகிறனவா என்ற கேள்வியை எழுப்பினார்கள். சிக்மண்ட் பராயிட் என்பவர் மனிதனின் பிரச்சனைகளுக்குகாரணம் அவனின் அடிமனத்தில் ஆழ்ந்து கிடக்கும் அடைய முடியாத சில ஆசைககளின் விரக்தியின் வெளிப்பாடுகள்  என்றார்.

எரிக் எரிக்ஸன் என்ற அறிஞரோ,' 'மனிதன் எப்படியான பொருளாதார வசதியோ வசதியோ அற்ற குடும்பத்திற்   பிறந்தாலு;ம் வளர்க்கப்பட்டாலும் அவனின் வளர்ச்சியின்போது அமைந்திருக்கும் சூழ்நிலை அவனின்  செயற்;பாடுகளுக்கு அவனைப்பின்னிப் பிணைந்திருக்கும் அரசியல் பொருளாதார, கலாச்சார ஆதிக்க சமூக சூழ்நிலை என்பன அவனை எதிர்காலத்திற்குத் தயார் செய்கிறது' என்றார். ஜீன் பியாயே என்ற அறிஞரோ, குடும்ப அமைப்பு, பொருளாதாரம், அரசியல், என்ற பெரும் சக்திகள் மனிதனை மாற்றுகிறது என்பதை விட, தனிமனிதன,; தனக்கு என்ன வேணும் என்று முடிவு கட்டுகிறானோ அதையடைய அவன் தன் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்கிறான் என்றார்.

ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற அடையாளத்துடனும் மனித உரிமைவாதி என்ற  முறையிலும், அவுஸ்திரேலியா, நோர்வே, இந்தியா. இங்கிலாந்து போன்ற நாடுகளின் பல்கலைக்கழக் ஆராய்ச்சியாளர்கள் பல பேட்டிகளை என்னுடன செய்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பட்டதாரிப்படிப் படிக்கும் மாணவர்கள் பலர் எனது எழுத்துக்களிலுள்ள சமுதாயம் சார்ந்த, மனித நேயம் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த கருத்துக்களைவைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

 அதே கேள்வியுடன் இன்று இங்கு வந்திருக்கிறேன். ஓரு சமுதாய மாற்றம் படுவேகத்துடன் நடந்துகொண்டிருக்கும்போது எங்களளைப்போன்றவர்களின் பணியென்ன? சமுதாயத்துக்கு எப்படி உதவப்போகிறோம்;? எங்களின் தனிப்பட்ட பணிகள் என்னவாகவிருக்கும் என்பதுதான் இந்தப்பிரயாணத்தின் நோக்கம்;.

நீண்ட காலமாக இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதால், இலங்கையின் அரசியல்மாற்றங்களுக்கும், யார் அதிகாரத்துக்கு வருகிறார்கள் என்பதை நிர்ணயிப்பதற்கும் எந்த உரிமையும் எனக்குக் கிடையாது. ஆனால் ஒரு மனிதநேயவாதி என்றமுறையில் எங்கள் தமிழ் மக்களில் உதவி கேட்டு நிற்கும் ஏழைகளுக்கு உதவுவதற்காக என்னால் முடிந்தளவு தொடர்புகளை மற்றவர்களுடன்,அது அரசியல்வாதிகளாக இருக்கலாம், மனித நலவாதிகளாகவிருக்கலாம், அப்படிப்பட்டவர்களுடன்  ஏற்படுத்துதல் இன்றியமையாததாகவிருக்கிறது.

 இன்றையநிலை:

தற்போதுள்ள இலங்கையின் அரசியற் தலைமையை விரும்பாத மேற்குலக சக்திகளாலும் தங்கள் இலாபத்துக்கு இலங்கைத் தமிழரை ஆயதமாகப்பாவிக்கும் தமிழகத் தலைவர்களாலும்  சில புலம் பெயர்ந்த தமிழர்களாலும் இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை இன்னும் துயருக்குள்ளாக்கும் நிலை தொடர்கிறது. ஓரு சிலர், வெளிநாட்டுச்சக்திகளால் தமிழ் ஈழம் எடுத்துத் தரம்படும் என்ற கற்பனாவாதப் பிரசாரத்தை இன்னும் இவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.

போரினால் மிகவும் அடித்தளத்துக்குப் போய்விட்ட தமிழர்களின் வாழ்வுநிலை இந்தத் தமிழ்த் தலைவர்களின் பீரங்கிப்பேச்சுக்களில் அடிபடுவதில்லை. கிட்டத்தட்ட 90.000 விதவைகள் பல்லாயிரக்கணகான அனாதைக்குழந்தைகள், போருக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து இன்ற சாதாரண வாழ்க்கைக்குள் நுழையத்துடிக்கும் பழைய போராளிகள், அங்கவீனமாகிப்போன ஒரு இளம் தலைமுறையினரின் சோகம், இன்றும் சிறையில்வாடும் கிட்டத்தட்ட 800 மேற்பட்ட தமிழ் அரசியற் கைதிகள், தமிழ்ப்பகுதிகளில் முப்பது வருடங்களாகத் தேங்கிக்கிடக்கும் கல்வி வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி என்பன இவர்களின்பேச்சின் மூலப்பொருட்களாக இல்லாதிருப்பது பலருக்கும் தெரிந்தவிடயம்.

ஓரு மனிதனின் அடிப்படைத்தேவைகளுக்கப்பால், அந்த மனிதன் வாழும் சமுதாயத்தின் நாகரிகவளர்ச்சியின் அடையாளங்களான கலைப்படைப்புக்கள, சுதந்திர சிந்தனா வளர்ச்சி, மனிதாபிமானம், அடுத்தோருடன் வாழும் நேசபனப்பான்மை, சாதி மத, பிராந்திய வெறியற்ற சகோதர மனப்பான்மை என்பன தமிழ்த்தேசியத்தால் சிதைக்கப் பட்டுவிட்ட பல விடயங்களில் சிலவாகும். அந்தந் சிதைவுகளைச்சீர்;படுத்தும் மனிதநேயம் ஒன்றுபடவேண்டும்.

 பழைய காலத்தில் சர்வவல்லமை படைத்த வல்வலரசுகளான கிரேக்க, உரோம சாம்ராச்சியங்களும் அவர்களைத் தொடர்ந்து ஸ்பானிய, ஆங்கிலேய வல்லரசுகள்; தங்களால் அடிமை கொண்ட ஆசிய ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் அடையாளங்களான மொழி, கலை, சமுதாயப் பண்பாடுகளையழித்தொழித்து தங்களின் கலாச்சாரத்தை விதைத்ததுபோல் இன்று தமிழத்தேசியம் என்ற பெரும் பூதம் தன்னை எதிர்க்கும் அத்தனை சக்திகளையும் ஏப்பம் விட்டுத் தன்னைப் பின்பற்றுமாறு கட்டளை விடுகிறது. வல்லரச ஆதிக்கவாதிகள்மாதிரி இவர்களும் தங்களால் அங்கிகரிக்கப்பட்ட 'மொழியைப்பேசவும், சடங்குககள், விழாக்களைக்கொண்டாடவும்' நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

தமிழ்த்தேசியத்தின் பயங்கரவெறிக்கு ஈடுகட்டுவதுபோல் சிங்கள் இனவெறி வளர்கிறது. ஒட்டுமொத்தமாக இலங்கையில் 1920ம்ஆண்டுகளிலிருந்து வளர்ச்சியடைந்துகொண்டு வந்த முற்போக்குவாத சிந்தனைகள் தமிழ்-சிங்கள தேசியவாதத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.

 ஜனநாயக்குத்துக்கு இன்றியமையததான ஒரு எதிர்க்கடசியைக்கூட இலங்கையில் அமைக்க முடியாதமாதிரி இனவாதம்; பயமுறுத்துகிறது. ஓரு சாதாரண தமிழ்க்கூலியிலிருந்து முதலாளிவரை தமிழ்த்தேசியத்துக்குத் தலை குனியாவிட்டால் அவன் தன்னைச் சார்ந்த சமூகத்தால் ஒதுக்கி வைக்கபபடும் நிலயிருக்கிறது. இதை முகம் கொடுத்த கலைஞர்கள் எழுத்தாளர்கள் என்ற பல தாரப்பினரும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் புலம் பெயாந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியத்துக்குத் தலை வணங்கவேண்டியிருக்கிறது. இது தனிமனித சுதந்திர சிந்தனைக்கு இட்ட பயங்கர சவாலாகும. இந்த ஆதிக்கம் மிகவும் பயங்கரமாக எங்கள் சமுதாயத்தின் பல பரிமாணங்களிலும் வேருன்றி விட்டது என்பதற்கு ஒரு சாதாரண தமிழனின் வாழ்க்கை மட்டுமல்ல தமிழ்ப்புத்திஜீவிகளின் நிலைகளும் சாட்சியங்களாகி விட்டன. புல புத்தி ஜீவிகள் தமிழ்த்தேசியத்தின் அடிமைகளாக மவுனம் சாதிக்கிறார்கள் அதை மீறுபவர்கள் துரோகிகள் என்று பழிவாங்கப் படுகிறார்கள்.

பழைய காலத்தில் பல வல்வலரசுகளால் சிறு இனங்கள் அழிந்ததுபோல் இன்று தமிழ்த்தேசியத்தின் குறுகிய சிந்தனையால் எங்கள் மக்களின் வாழ்க்கை பன்னு+று வருடங்களுக்குப்பின் தள்ளப்பட்டுவிட்டன. இலங்கையின் நான்காம் தரவாழ்க்கைய எதிர்நோக்கும் துயரை எங்கள் மக்கள் இலங்கையில் அனுபவிக்கிறார்கள். இதைக் கேள்வி கேட்கும் சுதந்திர சிந்தனை கேவலமாக எள்ளி நகையாக்கப்படுகிறது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்போர் அவர்கள் வாழும் சமுதாயத்தின் ஜன்னலகளாக மதிக்கப்படுபவர்கள். அந்தக் கலைஞர்களின் படைப்புக்கள் அவர்கள் காணும் நிகழ்ச்சிகளின் ஒரு சில பதிவுகளாகும். முக்கியமாக, ஒரு எழுத்தாளன் சுதந்திர சிந்தனையுடன் தான் கண்ட உலகத்தின் நடவடிக்கைகளை அவதானித்து அச்சமுதாயத்தின்போக்கை, நிறைகுறைகளை, காத்திரமான ஒரு கருத்தரங்குக்கொண்டு செல்லாமல், சமுதாயத்தை அடக்கியாளும் சக்திகளுடன் இணைந்து அடக்கப்படுபவர்களின் திருப்திக்கு எழுதத்தொடங்கினால் அந்த எழுத்துக்கள்pல் உண்மையான அழுத்தங்களோ அல்லது ஆத்மீகமான கேள்விக்குறிகளோ ஒலிக்காது. துன ;சுயசிந்தனைக்குச் சரியானவற்றை எழுதாமல் மற்றவர்களைத் திருப்திப்படுத்திப் பெயரும் புகழும் எடுப்பது ஒரு வியாபாரமாகும்.

 இதைவாசிக்கும் பலரும் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற பல தரப்பட்ட அடக்குமுறைகள் அனர்த்தங்களைக் கண்டவர்கள், அனுபவித்தவர்கள், அதன் காரணமாகப் புலம் பெயர்ந்தவர்கள். புலம் பெயர் முடியாமல் தாய்நாட்டில் அல்லற்படும் எம்மினத்தினத்துக்கு நல்வாழ்வும் வழியும் பிறக்கவேண்டும் என்று நம்புவர்கள்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: