nakkheeran.in - kalaimohan கடந்த 20 ஆம் தேதி திருச்சியில் ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணம் 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நைசாக பேசி அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெரம்பலூர் ரோவர் அப்பகுதியைச் சேர்ந்த முருகையா என்கின்ற ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் நேற்று ஒருவர் சவாரி செய்துள்ளார். சவாரி செய்த அந்த நபர் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் ஒரு டிராவல் பேக்கை வைத்திருந்துள்ளார். அறை எடுத்து தங்க வேண்டும் தன்னை ஏதாவது ஒரு தங்கும் விடுதியில் இறக்கி விடுமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் போதையிலேயே கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஆட்டோ ஓட்டுனர் முருகைய்யா ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார், ஆனால் அந்த நபர் நிற்காத போதையில் இருந்ததால் விடுதி ஊழியர்கள் அவருக்கு அறை தர மறுத்தனர். அதனை அடுத்து வேறு ஏதாவது தங்கும் விடுதிக்கு வண்டியை விடுமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் அந்த போதை ஆசாமி கேட்டுள்ளார்.
பெரம்பலூர் புறநகர் பகுதியில் எல்.கே.எஸ்
ரெசிடென்சி என்ற மற்றொரு தங்கும் விடுதிக்கு ஆட்டோ ஓட்டுனர் மீண்டும்
வண்டியை விட்டுள்ளார். அப்பொழுது அடையாள அட்டை விவரங்கள் இருந்தால் தான்
அறை கொடுக்கப்படும் என விடுதி ஊழியர்கள் கேட்க, முதலில் இல்லை என மறுத்த
அந்த போதை ஆசாமி பின்பு பேக்கை திறந்து அடையாள அட்டையை தேடியுள்ளார்.
அப்பொழுது அந்த பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்
அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததை ஆட்டோ ஓட்டுநர் முருகையா பார்த்துவிட, இதனால்
சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் தனக்கு தெரிந்த இடத்தில் அறை எடுத்து தருவதாக
அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் காவல்
நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று போலீசாரிடம் இதுகுறித்து
முருகையா தெரிவித்த நிலையில், போலீசார் அந்த போதை ஆசாமியின் பையை சோதனை
செய்ததில் சுமார் 13 லட்சம் ரூபாய் கட்டு கட்டாக இருந்தது. பணம் குறித்து
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்காக போதை தெளியும் வரை
போலீசார் காத்திருந்தனர். போதை தெளிந்த பின்பு அவரிடம் நடத்தப்பட்ட
விசாரணையில், அந்த நபர் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 47 வயதான
ஸ்டீபன் என்பதும் பையில் வைத்திருந்த பணம் திருச்சி சிட்டி யூனியன்
வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
முதலில் வீட்டை விற்று வந்த பணம் என்று
ஸ்டீபன் கூறிய நிலையில் தொடர் விசாரணையில் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில்
தொடர்புடையவன் என்பதும், கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள்
நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 100 ரூபாய் மற்றும் 500
ரூபாய் கட்டுகளாக மொத்தம் 15 லட்சத்து 47 ஆயிரத்து 200 ரூபாயை கைப்பற்றிய
போலீசார் அவனை கைது செய்து திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மீதம்
பணத்தை பற்றி கேட்டபோது காசை குடித்தும் ஊர் சுற்றியும் உல்லாசம்
அனுபவித்து வந்தது தெரியவந்தது.
திருச்சி போலீசார் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளை அடித்து அந்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து சுற்றிவந்த திருடனை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவிற்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக