ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

திவ்யாவுக்கு கொலை மிரட்டல் ..படைப்பாளிகளுக்கு எதிரான புது ஆயுதம் ! மின்னம்பலம்

சண்டே சர்ச்சை: படைப்பாளிகளுக்கு எதிரான புது ஆயுதம் ‘கொலைமிரட்டல்’!
நவீன யுகத்தில் கல்வி, தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என்று அனைத்துத் துறைகளிலும் உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுபவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது நம் நாடு. இதற்காக நாம் ஒருமுறை கைதட்டிக் கொள்ளலாம். அடுத்து...
நம்நாட்டில்,  இந்த 21ஆம் நூற்றாண்டிலும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தொடர்ந்துவருவதை தட்டுவதற்கு யாரிடமிருந்து கையைக் கடன்வாங்குவது? அந்த மனிதர்களிடம் கைகுலுக்கவும் தயாராக இல்லாத இந்த சமூகத்தில் அவர்களது வலியைப்பற்றி யார் பேசுவது. பதிவாவது செய்துவைக்கவேண்டுமல்லவா? அதைத்தான் மதுரையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் திவ்யா, “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.


மலக்குழிகளில் மனிதர்கள் இறக்கப்படுவதும், அவர்கள் மரணித்தால் அவர்களின் குடும்பம் படும் துன்பங்களையும் அத்துடன் குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே இந்தத் தொழிலை செய்யக்கூடிய சூழல் நிலவுவதையும் ஆதாரங்களுடன் அந்த ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நம் சமூக அவலத்தைப் படம்பிடித்துக் காட்டிய இந்த ஆவணப்படம், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றதுடன், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

இந்நிலையில், ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த நபர்கள், மலம் அள்ளும் தொழிலை செய்வதில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அத்துடன், அந்த ஆவணப்படத்திலிருந்து அந்தக் குறிப்பிட்ட சாதியின் பெயரை நீக்குவதுடன், திவ்யா வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, சிலர் சமூக வலைதளங்களில் திவ்யாவுக்கு எதிராக, அருவருக்கத்தக்க விமர்சனங்களை முன்வைத்ததோடு, திவ்யாவின் மொபைல் எண்ணையும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பலர் திவ்யாவைத் தொடர்புகொண்டு அவரை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் திட்டுவதுடன், கொலை மிரட்டலையும் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, திவ்யா தரப்பில் காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் என்பவர் திவ்யபாரதிமீது கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று ஒத்தகடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த வழக்குக்கு நடவடிக்கை எடுக்காமல், இங்கே கட் செய்து 8 வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறார்கள்.
2009ஆம் ஆண்டு திவ்யா சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, மாணவர் விடுதியில் மாணவர் ஒருவர் பாம்பு கடித்து இறந்துபோனார். இதனையடுத்து, தலித் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, விடுதிகளின் தரத்தினை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மதுரை அரசு மருத்துவமனை அருகில் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுடன் திவ்யாவும் கலந்துகொண்டார். இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கான வழக்கு எட்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் திவ்யபாரதி மற்றும் அவரது நண்பர் நிசாம்மீது சில தினங்களுக்கு முன்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் மதிச்சியம் காவல் நிலையத்தில் ஏழு நாள்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த திவ்யபாரதி, வழக்கை உரிய முறையில் நடத்திய பிறகும் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், என்னைப்போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களைத் தேசத் துரோகிகள் என்று ஒடுக்க அரசு முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சியினரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யபாரதி, “10 நிமிடத்துக்கு ஒருமுறை எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. மிரட்டல் விடுத்தவர்களைத் தொடர்புகொண்டால் தாங்கள் பாஜக பிரதிநிதிகள் அல்லது புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்தவர்கள் என்றே கூறுகின்றனர். எனக்கு வரும் மிரட்டல்களில் 40 சதவிகிதம் ஆன்லைன் கால்களே. தொடர்புகொள்பவர்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசுகின்றனர். வழக்கு ஒன்றுக்காக மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது என்னைப் பின்தொடர்ந்து சிலர் வருகின்றனர். என்னைக் கொலை செய்ய ரூ.2 கோடி விலை நிர்ண‌யம் செய்யப்பட்டுள்ளது” என்று கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார் திவ்யா. அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

சமூகத்தில் உள்ள அவலங்கள்குறித்து ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு அரசியல் கட்சிகள், சாதிய அமைப்புகள், தொழில்துறை நிறுவனங்கள் என்று பல வழிகளில் அச்சுறுத்தல்கள் வருவது தொடர்ந்துவரும் நிலையில், தற்போது திவ்யாமீது தொடுக்கப்படும் இந்தத் தாக்குதலுக்கு காரணம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மலம் அள்ளுபவர்களாகக் காட்டப்பட்டதா அல்லது திண்டுக்கல்லில் 15 துப்புரவுப் பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பொதுவெளிக்கு வெளிச்சம்போட்டுக் கட்டியதா அல்லது தனது ஆவணப்படத்தில் தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் வரிப்பணம் வசூலிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது, அதனால் மக்களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை என்ற கருத்தினை மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காகவா அல்லது தனது அடுத்த ஆவணப்படம் ‘மாட்டிறைச்சி தடைக்கு’ எதிரான படம் என்று அறிவித்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஏனெனில் மாடுகள் புனிதமானவை அவற்றை இறைச்சிக்காகக் கொல்வது குற்றம் மட்டுமல்லாது பாவச்செயலும்கூட என்று கருத்துகளை முன்வைக்கும் சங்பரிவார் அமைப்புகள் மற்றும் அவர்களோடு ஒத்த நிலைப்பாடுகொண்ட பாஜக அரசு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

திவ்யாவின் கைது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டபோது அதற்கு “பின்புலமில்லாமல், குற்றச்சாட்டு இல்லாமல் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள். நக்சலைட் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நாட்டில் எந்த வகையிலும் தீவிரவாதம் தலைதூக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில் ஒரு குற்றவாளி தப்பித்துவிடக் கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் நமது ஜனநாயகத்தின் அடிநாதமாகும். அதேவேளையில், கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உரியச் சட்டங்கள் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளன. ஆகவே, கிருஷ்ணசாமி போன்று சிலர் முன்வைக்கும் இந்தக் கோரிக்கைகள் நியாயம் என்று அவர் கருதினால், அந்தக் கோரிக்கைகளை திவ்யா ஏற்க மறுத்தால், அவர் தனது நியாயத்தை முன்வைத்து நீதி பெறுவதற்கு நீதிமன்றம் உள்ளது. அதை விடுத்து, கருத்து சுதந்திரத்தை ஒடுக்கம் வகையில், ஒரு தனிநபருக்கு எதிராக விமர்சனங்களையும் முன்வைப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையா என்ற கேள்வியை விவாதத் தளங்களில் ஏற்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை: