திங்கள், 4 டிசம்பர், 2017

விளம்பரம் கொடுத்து விலகப் பார்க்கும் சேகர் ரெட்டி? மணல் மாபியாவின் தில்லானா ..

இன்றைய தினத்தந்தி பேப்பரில் ஒரு விளம்பர அறிவிப்பை பார்த்ததும் ஷாக் ஆக இருந்தது.
திரு.ஜெ.சேகர் என்ற ஜி.சேகர் ரெட்டி என்பவர் அந்த விளம்பரத்தை கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எஸ். மைனிங் கூட்டு நிறுவனத்தின் பங்குதாரர் என்ற பெயரில் சேகர் ரெட்டி சார்பில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. சேகர் ரெட்டியோ, அவர் சார்ந்த கூட்டு நிறுவனமோ தமிழகத்தில் மணல் குவாரி உரிமமோ குத்தகையோ இதுவரை பெற்றது இல்லை. சேகர் ரெட்டியின் நிறுவனம் நூற்றுக்கணக்கான லாரிகள், கனரக இயந்திரங்களை சொந்தமாக வைத்து கட்டுமானத் தொழில், மணல் மற்றும் சுரங்க வேலைகளுக்கு வாடகைக்கு விடும் தொழில் மட்டுமே செகிறது என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.
சேகர் ரெட்டியையும் சில அரசியல்வாதிகளையும் தொடர்பு படுத்தி கடந்த ஒரு ஆண்டாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும், இது பொய்யான தகவல் என்றும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புகிறவர்கள் மீது குற்ற வழக்கு உள்பட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த விளம்பரம் எச்சரித்திருந்தது.
கடந்த ஒரு ஆண்டாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என்றால், என்ன மாதிரியான பொய் பிரச்சாரம்? அதை ஏன் ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில் தடுக்க நினைக்க வேண்டும்?
இவை முக்கியமான கேள்விகள்… ஆம். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சேகர் ரெட்டி பணம் செலவழித்தார் என்றும், இப்போதைய துணை முதல்வர் ஒ.பி.எஸ்.சுக்கும் சேகர் ரெட்டிக்கும் மணல் கொள்ளையில் பங்கு உண்டு என்றும் முன்பு கூறப்பட்டது.
சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது, 33 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், நூறு கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது என்றும், தங்கம் மற்றும் வைரக் குவியல் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்காக மக்கள் ஏ.டி.எம். வாசல்களில் சாப்பிடாமல் மயக்கத்துடன் வரிசையில் காத்திருந்த சமயத்தில் சேகர் ரெட்டிக்கு மட்டும் 33 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.
இந்நிலையில், அந்த பணமெல்லாம் சேகர் ரெட்டியின் வீட்டில் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், அந்த பணமெல்லாம் சேகர் ரெட்டி பங்குதாரர் ஆக இருக்கும் மைனிங் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில்தான் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணப்பட்டுவாடா லிஸ்ட், சேகர் ரெட்டி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அலுவலகம் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்தெல்லா எதிர்க்கட்சிகள் வினா எழுப்பி வருகின்றன.
சேகர் ரெட்டிக்கும் ஒ.பி.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பு, அதிமுகவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்தெல்லாம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அந்த பிரச்சாரத்துக்கு பிரேக் போடவே சேகர் ரெட்டி சார்பில் இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனாலும், வெறும் அவதூறு வழக்குகளுக்கு பயந்து தமிழகத்தை ஆட்டுவிக்கும் மணல் கொள்ளை குறித்தும், வருமானவரித்துறை நடத்திய ரெய்டுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பேசாமல் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
-ஆதனூர் சோழன்
nakkeeran

கருத்துகள் இல்லை: