ஞாயிறு, 21 நவம்பர், 2010
உயிரை முடித்துக் கொள்ளும் அளவுக்கு என் மகளுக்கு
உலக முடிவுக்கு சென்று உயிரை முடித்துக் கொள்ளும் அளவுக்கு என் மகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை இது தாயின் கதறல். என் அன்புக் காதலிக்கு என்ன நேர்ந்ததென்று எனக்கே புரியவில்லை இது காதலனின் புலம்பல். கொலையா? தற்கொலையா? தற்செயலா? இது பொலிசாருக்கும் புரியாத புதிர். கதையா? கற்பனையா? காவியமா? இது உண்மையை அறியத் துடிப்போர் மத்தியில் குடிகொண்டுள்ள ஆதங்கம்.
இலங்கையின் ‘மினி வேல்ட் என்ட்’ என அழைக்கப்படும் ‘சிறிய உலக அந்தம்’ காவுகொண்ட இருபதை எட்டிய இளமங்கை தம்மிகா குமாரியின் மரண காவியம் தான் இது. துலங்காத மர்மமாகவே இது இன்னும் விளங்குகின்றது. ஒரு கதையாக கருதவும் முடியாத கற்பனையாக வர்ணிக்கவும் முடியாத காவியமாகவே வடிக்க வேண்டிய ஒரு சம்பவம் தான்.
சம்பவ தினம் இரவு 09.00 மணியளவில் இது விடயமாக உடுதும்பறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேனக பீ. ஜயசிங்கவோடு தொடர்பு கொண்டேன். அப்போது அவர் முக்கியமான பணியொன்றில் தற்சமயம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகக் கூறியதோடு வழமையாக எப்போதும் தான் அதிகாலை 04.00 மணிக்கே கடமைக்கு வந்து விடுவதாகவும் எனவே அதிகாலை உரிய நேரத்தின் பின்பு தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். அவரின் கடமையுணர்வைப் பாராட்டி விடை பெற்ற நான் மறுநாள்அதிகாலை வழமை போல் 05.00 மணிக்கு எழுந்து என் கடமைகளை முடித்துக்கொண்டு 05.15 மணி அளவில் தொடர்பு கொண்டு காலை வந்தனம் கூறினேன். குரலை இனம் கண்டு கொண்ட அவர் காலை வந்தனத்தோடு ஆரம்பித்து நடந்த சம்பவத்தையும் விபரித்தார்.
கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய எனும் பிரதேச்ததில் உடவெல கிராமத்தைச்சேர்ந்தவர் தம்மிகா குமாரி இருபதை எட்டியிருந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த மாணவியுமாவார். கல்வியில் ஆர்வம் கொணடிருந்தது. மட்டுமன்றி அன்பாகவும் பழகுவார். பண்புகளில் உறைவிடமாக பேசுவதில் இங்கிதமாக மூத்தோரிடம் பணிவாக நடந்து கொள்பவர். காண்போரைக் கவரும் கட்டழகும் இவரிடம் இருந்தது. வாலிப உள்ளங்களைச் சுண்டியிழுக்கும் பருவம் அது. காதல் மலரும் வயதும் கூட.
இவர் அதே பிரதேசத்தை அண்டிய பகுதியில் வாழும் அதிரடிப் படை வீரர் ரவீந்திரலால் கொடமுன்ன என்பவரிடம் தன் இதயத்தை ஒப்படைத்து இரண்டே மாதங்கள் தான் ஆகின்றனவாம். காதல் உரிய பக்குவத்தைக் கூட இன்னம் அடைந்திருக்கவும் இல்லை.
பெற்றோரிடம் மிகுந்த அன்பும் பணிவும் கொண்டிருந்த இவர்பெற்றோரின் மனம் புண்படுமே என்ற காரணத்தினால் காலம் கனிந்ததும் தெரியப்படுத்துவோம் என்ற நோக்கில் இரகசியமாகவே காதல் நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளார். இப்படி இருந்த வேளையில் காதலன் மனதில் முதன்முதலாக ஒரு ஆசை மலர்ந்திருக்கிறது. காதலியிடம் இதனைத் தெரிவித்துள்ளார். உலகத்தின் எல்லையில் சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா என்பது தான் அந்த ஆசை.
தம்மிகாவும் சரி என்றாள். நாளும் நிச்சயிக்கப்பட்டது. காதலும் பொய்யும் இரட்டைக் குழந்தைகள் அல்லவா. நவம்பர் மாதம் 13ம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் விழித்தெழுந்த தம்மிகா தாயிடம் ஒரு பொய்யைப் சொன்னாள் காதல் மலர பொய் என்ற எரு மிக மிக அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார் போலும். இன்று கண்டியில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று தன் தாயாரான கொயின் மெனிக்காவிடம் கூறினாள். தாயும் அதை நம்பினார். தம்மிகா பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். அதற்கிடையில் வகுப்புக்குச்செல்லும் மகள் திரும்பி வரும் வரை பசியில் இருப்பாளே என்று பரிதாபப்பட்டு அவருக்கு காலை உணவையும் தயாரித்து உண்ணக்கொடுத்து பகல் உணவையும் தயாரித்து பொதி செய்து வைத்தாள்.
காலை 7.00 மணியிருக்கும். மகள் ‘வகுப்பு க்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியேறும் முன் தன் தாயாரின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்து பின்னர் தாயின் முகத்தையே சற்று நேரம் உற்று நோக்கிக்கொண்டிருந்தாராம். அதன் பின்னர் தான் விடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினாராம். அந்தப் பார்வை என்ன பார்வை என்பது தாய்க்கும் ஆச்சரியமாக இருந்ததாம். அது முதன் முறையாக உங்களுக்குப் பொய் சொல்லி விட்டுப் போகிறேன் என்பதை உணர்த்திய பார்வையா அல்லது இது தான் என் தாயைப் பார்க்கும் கடைசிப் பார்வை என்பதைச் சொல்லாமல் சொல்லிய பார்வையா யாரறிவார்.
வீட்டிலிருந்து வீதிக்கு வந்த அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி உரிய இடத்தில் சென்று வழிமேல் விழி வைத்திருந்தார் சில நிமிடங்களில் முச்சக்கர வண்டியொன்று அருகே வந்து நின்றது. யாரை எதிர்பார்த்தாரோ அவரும் அங்கே இருந்தார். சைகையால் அழைத்ததும் ஏறிக் கொண்டார். முச்சக்கர வண்டி விரைந்தது. ஹ¤ன்னஸ்கிரிய லூல்கந்துர தோட்டப் பிரதேசத்தின் ஊடாக தேயிலைத் தோட்டங்களைத்தாண்டி அது சென்றது. லூல்கந்தூர என்பது நாட்டின் தேயிலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர். ஏனென்றால் இலங்கையில் முதன் முதலாக தேயிலைச் செடி நடப்பட்ட இயற்கை வனப்பு மிக்க இடமல்லவா அது.
வண்டிச் சாரதி இதற்கு முன்னர் எப்போதுமே வந்திராத வழி அது என்பதால் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி ‘சிறிய உலக அந்தம்’ எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். அப்போது அங்கே இருந்தவர்கள் அங்கு போக வேண்டிய சந்தியைத் தாண்டி நீங்கள் அதிக தூரம் வந்து விட்டீர்கள் என்று கூறி திரும்பிச் சென்று இந்த இடத்தால் திரும்புங்கள் என்று வழிகாட்டி உள்ளார்கள். காலை 10.30 மணியளவில் உரிய இடத்தை அடைந்த காதல் சோடியினர் தாம் திரும்பி வரும்வரை காத்திருக்குமாறு சாரதியிடம் கூறிவிட்டு உலக முடிவின் அழகை தரிசிக்க மலையேறிச் சென்றுள்ளனர்.
இடையில் அவர்களுக்கு களைப்பாகவும் இருந்தது. இயற்கைக் கடன் கழிக்கும் உணர்வும் எழுந்தது. காதலி அதனை காதலனிடம் சைகையால் உணர்த்தி விட்டு மறைவிடமொன்றை நோக்கி சென்றுள்ளார். நிமிடம் நிமிடமாக கடிகாரம் நடந்து கொண்டிருந்தது. ஓசையில்லை. தம்மி தம்மி என்று கூப்பிட்டுப் பார்த்தும் பயன் இல்லை. காடும் அடர்ந்த காடு. நிலப்பாங்கும் பயங்கர பள்ளத்தாக்கு சந்தேகம் வலுக்கவே செடி கொடிகளை நீவிக் கொண்டு தம்மிக்காவை தேடியவர் அங்கே பாரிய பள்ளத்தாக்கு ஒன்றினைக் கண்டதும் தன்னையறியாமலே கூக்குரலிட்டுள்ளார். உல்லாசமாய் பொழுது போக்க அங்கு வந்திருந்தோர் ஒலி கேட்ட வழி நெடுகே ஓடோடிச் சென்றுள்ளனர்.
அங்கே ரவி புலம்பிய வண்ணம் சம்பவத்தை விபரித்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்த போது சுமார் 400 அடி பள்ளத்தாக்கில் சாடையாக ஒரு உருவம் விளங்கியது. தகவல் பறந்தது. பொலிஸ¤க்கு. பொலிஸ் விரைந்தது ஸ்தலத்துக்கு பெற்றார் உற்றார் உறவினர்களின் அழுகுரல் மலையடிவாரத்தையே மலைக்க வைத்தது. காலை புலர்ந்த வேளையில் உயிரோடு தைரியமாக வந்த தம்மிகா மாலை மயங்கிய பொழுதினில் உயிரற்ற ஜடமாக கீழே கிடத்தப்பட்டிருந்தாள்.
விசாரணைகள், பரிசோதனைகள், சட்ட ஆய்வுகள் என்பன மேற்கொள்ளப்பட்ட பின் தம்மியின் உடல் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிரடி வீரர் ரவீந்திரலால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பாதுகாவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்கும் பொலிஸாரே பாதுகாப்பு பொலிஸாரின் தந்த தகவல் இவ்வளவு தான் இதனை அடுத்து நான் செயலில் இறங்கினேன். தனது வீட்டிலே உயிரோடு இருந்தது போலவே உயிரற்ற நிலையிலும் தேவதையாக தம்மிகா காட்சியளித்தாள். மகளை இழந்த வேதனையில் தாய் தந்தையர் புலம்பிக் கொண்டிருந்தனர். அன்பு மகளே உனக்கு என்ன நடந்தது. உன்னை மணப் பெண்ணாக்கி அழகு பார்க்க ஆசையோடு இருந்தோமே. அது நிராசையாகி விட்டதே என்று கதறிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர். சம்பவம் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதையோ புகைப்படம் எடுப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.
ஒரு மூலையில் வேதனையோடு வீற்றிருந்த ஒரு தாயிடம் பேச்சுக் கொடுத்தேன். தான் தம்மிகாவின் நெருங்கிய தோழியின் தாய் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது தம்மிகா மிகவும் நல்ல பிள்ளை. நல்ல பண்புகள் உள்ளவர். பழகுவதற்கு இனியவர். எனது மகளோடு பல தடவைகள எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். எங்கள் வீட்டில் உணவருந்தியும் உள்ளார். என் மகளுக்கு இப்படியொரு நண்பி கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்பட்டுமிருக்கிறேன். இந்தப் பெண்ணின் கதையை இறைவன் ஏன் இப்படி முடித்தான் என்று கவலையோடு கூறினார்.
நாட்டின் நாளைய தலைமையைப் பொறுப்பேற்க தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த வேளையில் காதல் வயப்பட்டு பின்னர் காலனின் வயப்பட்டு இன்று காவியமாகியுள்ள தம்மிகாவைப் பற்றி நம்மாலும் கவலைப்பட மட்டும் தான் முடியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக