புதன், 9 ஆகஸ்ட், 2017

யுனெஸ்கோ அதிர்ச்சி ! தமிழரின் வரலாற்று அடையாளங்களான கோவில்கள் சிதைப்பு .


தமிழக அரசு மேற்கொண்ட கோயில் பாதுகாப்புப் பணிகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களின் ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் உண்மை கண்டறியும் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களை யுனெஸ்கோ ஆய்வுசெய்துவருகிறது.
இந்நிலையில்,யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஜூலை மாத அறிக்கையில் தமிழ்நாடு அறநிலையத் துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளதாகவும், பல கோயில்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை யுனெஸ்கோவின் உண்மை கண்டறியும் குழு மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், வனமாமலை பெருமாள் கோயில், நாமக்கல் மருதகாளியம்மன் கோயில், கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயில், மானம்பாடி நாகநாதசாமி கோயில், சென்னை பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பத்துக் கோயில்களை ஆய்வுசெய்தனர். அது குறித்த விரிவான விளக்கங்களை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானம்பாடி நாகநாதசாமி கோயில் அறநிலையத் துறையின் தவறான அணுகுமுறையினால் காரணமில்லாமல் இடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்ப சாஸ்திர விதியைப் பின்பற்றவில்லை. பழைய தூண்கள் இடிக்கப்பட்டுள்ளதால் கோயிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (HR & CE) தரம் வாய்ந்த வல்லுநர்கள் கொண்டு இந்த நினைவுச் சின்னங்களில் வேலை செய்யவில்லை. மேலும், ஆவணப்படுத்துதல், மதிப்பிடுதல், புகாரளித்தல், பாரம்பரிய வேலைகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக முறையான முறையீடு செய்யப்படவில்லை. அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடமும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஒப்புதல் பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, தமிழக கோயில்களின் மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்குமாறு யுனெஸ்கோவைச் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. யுனெஸ்கோவைச் சேர்க்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. இந்த நினைவுச் சின்னங்கள் விஷயத்தில் அரசாங்கம் கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை கூறும் குற்றச்சாட்டுகளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையர் நடராஜன் மறுக்கிறார். “கோயிலின் பழைமையான தூண்கள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் இருக்கின்றன. மீனாட்சி அம்மன் கோயில், ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் கோயிலுக்கென்று பிரத்யேகமாக புனரமைப்புப் பணிகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகின்றன. புனரமைப்புப் பணிகள் தொடர்பாகக் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், கோயிலுக்கென்று இருக்கும் துறை நிபுணர்கள் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து நிபுணர்களின் எண்ணிக்கை 13 பேரிலிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின்படி மட்டுமே, கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் வராதபடி புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன” என்பவர், யுனெஸ்கோ, தங்களிடம் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை என்றும், அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் முற்றிலும் தவறானது என்றும் கூறுகிறார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: