கிழக்குப் பல்லைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ், சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக சிங்கள மாணவர்கள் விடுதியை விட்டு வீடுகளுக்குச் சென்றுள்ளனர். கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்கள் மதுபோதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விடுதியில் தங்கியிருந்த முதலாம் வருட மாணவ குழுக்களிடையே இடம்பெற்ற கைகலப்பு மற்றும் கல்வீச்சினால் விடுதி கதவு, யன்னல்கள் சேதமடைந்துள்ளன.
பல்கலைக்கழக நிருவாகம் பொலிஸாரும் பெரும்பான்மை இன மாணவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தமக்கு வந்தாறுமூலை வளாகத்தில் பாதுகாப்பு இல்லை. அண்மையில் சிங்கள மாணவர் ஒருவர் விடுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் தமிழ் மாணவர்கள் அடிக்கடி தம்முடன் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதாகவும் கூறியே சிங்கள மாணவர்கள் வெளியேறிச் செல்வதாக ஏறாவூர் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஐ.பி. இந்துனில் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போர் வெற்றி கொண்டாட்டத்தையிட்டு சிங்கள மாணவர்கள் நிதி சேகரித்ததாகவும் மதுபோதையுடன் விடுதியில் களியாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த விடுதிக்குச் சென்று தமிழ் மாணவர்கள் இங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் இருப்பதனால் விடுதியில் களியாட்டத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டதையடுத்து இரு சாராருக்குமிடையே வாய்த்தர்க்கம் பரஸ்பரம் கல்வீச்சும் இடம் பெற்றதாக அறியவருகிறது.
வந்தாறு மூலை வளாகவிடுதில் உள்ள முதலாம் வருட மாணவர்கள் 165 பேல் 38 பேர் சிங்கள மாணவர்கள் உள்ளனர். இதேவேளை பொஷன் பௌர்ணமி தினகொண்டாட்ட தினத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காகவே தாம் நிதி சேகரித்ததாக சிங்கள மாணவர்கள் கூறியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் கலாநிதி கே. பிறேம்குமார் தெரிவிக்கையில் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு உத்தர வாதமளிக்கப்பட்டு தேவையான வசதிகளையும் செய்து வருவதாக பல்கலைக்கழக நிருவாகத்தினர் கூறியபோதிலும் அவர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் வீடுகளுக்குச் சென்றதாகவும் இது தொடர்பாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது சுமூகமான பாதுகாப்பு நிலை காணப்படுவதால் எக்காரணம் கொண்டும் அம் மாணவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என தலைவர் தெரிவித்ததாக கூறினார்.