திங்கள், 7 ஆகஸ்ட், 2017

நக்கீரன் உதவி ஆசிரியர் ஆரணி எஸ்.சம்பத் அவர்கள்

சம்பத் அய்யா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நக்கீரன் உதவி ஆசிரியர் ஆரணி எஸ்.சம்பத் அவர்கள் 04.08.2017 வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது எழுபத்தி இரண்டு. கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக நக்கீரனில் பணியாற்றிய இவரின் பத்திரிகைத் துறை அனுபவம் ஐம்பது ஆண்டுகளையும் தாண்டியது. அலை ஓசை, தீபம், சாவி உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியுள்ள இவரின் எழுத்துகள் தினத்தந்தி, ராணி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சிறுகதைகளும் எழுதியுள்ளார். மூத்த பத்திரிகையாளர்கள் பலருடன் நட்பு வைத்திருந்தவர். பெரியாரின் வழியில் திராவிட இயக்க செயல்பாடுகள் கொண்ட இவர் ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசிய கட்சியில் பங்காற்றினார்.

 'நடிகர் திலகம்' சிவாஜியின் மீது மிகுந்த அபிமானமும் அன்பும் கொண்ட சம்பத் அய்யா, சிவாஜி ரசிகர்களுக்காக தன் சொந்த செலவில் பத்திரிகை நடத்தியவர். நக்கீரனில் மெய்ப்புத் திருத்தும் பணியுடன், இதழ் சார்ந்த அனைத்து ஒருங்கிணைப்புகளையும் அக்கறையுடன் செய்தவர். தன் ஆழ்ந்த அரசியல் அறிவையும் அனுபவங்களையும் நக்கீரனின் அனைத்து ஊழியர்களிடமும் பகிர்ந்து கொண்டவர். வயது, இவரது வாசிப்பை என்றுமே தடை செய்யவில்லை. ஒரு துண்டுத் தாள் கண்ணில் பட்டாலும், அதைப் படிக்காமல் விடமாட்டார், படித்ததைப் பிறரிடம் பகிராமல் விடமாட்டார்.


அவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். செய்தி கேட்ட ஒவ்வொருவருக்கும் அதிர்வு நீங்க பல நிமிடங்கள் ஆனது. நேற்று மாலை வழக்கம் போல சிரித்துக் கொண்டே, உரிமை கொண்டோரை திட்டிக்கொண்டே கிளம்பிய ஒருவர், இன்று இல்லை என்பதை யாரும் உடனே ஏற்பதில்லை, காலம் காலமாய் மரணம் இப்படித்தான் நிகழ்கிறது என்றாலும்... நேற்றுதான் வேலைக்கு சேர்ந்த இளைஞன் போல, அலுவலக நேரத்துக்கு முன்பே வரும் அவர், நக்கீரனின் ஒவ்வொரு இதழும் இறுதி வடிவம் பெறும் 'ரேப்பர்' தினத்தன்று, முழுமையடைந்த இதழைக் கண்ணால் பார்க்காமல் கிளம்பமாட்டார்.

நக்கீரனின் இளைஞர்களுக்கும் இவருக்கும் உள்ள உறவு தனித்தன்மை வாய்ந்தது. கேலியும் கிண்டலும் உரிமையும் நிறைந்தது. பிறந்தநாளுக்காக அவரிடம் ஆசி பெறும் இளைஞர்களுக்கு அவர் அளித்த ஒவ்வொரு பழைய பத்து ரூபாய் தாளிலும், அவரது அன்பையும் அனுபவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் பிரித்துக் கொடுத்தார். ஒல்லியான அந்த தேகத்தில் அத்தனை வருட வாழ்வையும் வைத்திருந்தார். மரணத்திற்கு முந்தைய நாள் வரை சுறுசுறுப்பாக இருப்பது ஒரு வரம்... அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லாத அதிர்ஷ்டசாலி அவர்... அவரை இழந்து தவிக்கும் துரதிருஷ்டசாலிகள் நாங்கள். பத்திரிகைத் துறையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த சம்பத் அய்யாவுக்கு நக்கீரன் குடும்பம் அஞ்சலி செலுத்துகிறது,

அவரை இழந்து வாடும் குடும்பத்தின் துயரைப் பகிர்ந்துகொள்கிறது. ஓட்டேரி மின்மயானத்தில் 04.08.2017 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிச்சடங்கில் மூத்த பத்திரிக்கையாளர்கள் ஜவகர், முத்தையா, நக்கீரன் கோபால், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன், டைம்ஸ் நவ் சபீர் மற்றும் பல பத்திரிக்கையார்கள் கலந்து கொண்டனர். நக்கீரன் குடும்பம்

கருத்துகள் இல்லை: