புதன், 9 ஆகஸ்ட், 2017

2 வகையான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து மிகப்பெரிய மோசடி!” : காங்கிரஸ்

 ரகசியமாக 2 வகையான 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழலில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். 500 ரூபாய் நோட்டு மாதிரிகளின் படங்களுடன் வந்திருந்த அவர், அவற்றை சபாநாயகர் மற்றும் சக உறுப்பினர்களிடம் காட்டி, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏன் மத்திய அரசு மேற்கொண்டது என்று இன்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். ரிசர்வ் வங்கி இருவகையான 500 ரூபாய் நோட்டுகளை இருவேறு அளவுகள் மற்றும் டிசைன்களில் வெளியிட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், இரு அளவுகளில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் செய்யப்பட்டுள்ளதாக கபில்சிபில் குற்றம்சாட்டியதை அடுத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.


இதனை அடுத்து, ஆவேசமாக பேசிய குலாம் நபி ஆசாத், “நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கட்சிக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று என இரு வகையிலான நோட்டுகளை அச்சடிக்கவில்லை. தற்போது 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இரண்டு வகைகளாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.

இவ்விவாகரம் தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரையான், “இரு ரூபாய் நோட்டுகளையும் பாருங்கள். கபில்சிபில் மிக முக்கிய பிரச்சனையை எழுப்பியுள்ளார்” என பேசினார். ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த சரத் யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால் ஆகியோரும் இக்கருத்தை ஆதரித்து பேசினர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பொறுப்பற்ற முறையில் உள்ளதாகவும், Zero Hour வீணடிக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதிலளித்தார்.

தொடர்ந்து, பண மதிப்பிழப்பு விவகாரத்தை எழுப்பி மாநிலங்களையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அருண் ஜெட்லி, இத்தகைய ரூபாய் நோட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ரூபாய் நோட்டுகளில் சிறிய அளவிலான வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்த அவர், வெவ்வேறு பிரிண்டிங் பிரஸ்களில் பணம் அச்சடிக்கப்படுவதால் அளவு மற்றும் டிசைன்களில் இத்தகைய சிறிய வித்தியாசங்கள் ஏற்படலாம் என்றும், அரசு இருவகைகளில் பணத்தை அச்சடித்துத் தரக் கோரவில்லை என்றும் தெரிவித்தார்   http://ns7.tv/ta/

கருத்துகள் இல்லை: