சுமார் ஒன்றரை
ஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.
“சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.
எனக்கு இவர்களது தோற்றமும் அணுமுறையுமே கொஞ்சம் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த காலத்தில் இது போன்ற டிப்டாப் பெந்தேகொஸ்தே ஆசாமி ஒருவரிடம் ‘நற்செய்தி’ கேட்கச் சென்று கிடைத்த அனுபவம் வேறு அச்சுறுத்தியது. அன்று காதில் ரத்தம் வழிய ஓடிவந்த எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக ஆவி, சாத்தான், இயேசு, பரமண்டலம், நரகம், கொதிக்கும் வென்னீர், உருகும் எலும்பு, சாவு என்று ஒரே கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருந்தது. வீட்டில் பயந்து போய் தாயத்து மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த பத்து நாட்கள் எனது கனவுக்குள் முண்டக்கண் மாரியும், சுடுகாட்டு மாடனும், ஒண்டி முனியும், பிடாரியும் ஊடுருவி கும்மியடித்தனர். அந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது.
என்றாலும் தொடர்ந்த இவர்களின் நச்சரிப்புத் தாளாமல், என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். எடையையும் உயரத்தையும் அளந்தவர்கள், ஒரு சிறு கருவியை என்னிடம் கொடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள்.
“ஐயையோ சார்…..” எப்போதும் சிரிப்பைக் காட்டும் அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி. அந்த இளைஞரின் முகமும் இருண்டது.
“ஐயையோ என்னாங்க எதுனா கேன்சாரா…?” சமீப நாட்களாக சளிக் காய்ச்சல் வருவது போல் எல்லோருக்கும் கேன்சர் வரப்போவதாக பத்திரிகைகளில் பீதியைக் கிளப்பி வருகிறார்களே.
“உங்க உடம்பில் நிறைய கொழுப்பு சேர்ந்திருக்கு சார். இப்படியே விட்டீங்கன்னா கொலஸ்ட்ரால் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சர்க்கரை நோய் வரலாம், அப்புறம் மாரடைப்பு வரும். எடை அதிகமா இருக்கிறதாலே ஆர்த்ரிடிஸ் வரும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்தெலும்பு தேய்மானம், தோள்பட்டை வலி… கேன்சரே கூட வந்தாலும் வரலாம் சார்.”