கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பாஜகவோடு கூட்டு வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாக ராகுல் காந்தி பேசினார் என்று தகவல்கள் வந்தன. அதற்கு குலாம் நபி ஆசாத், நான் பாஜகவோடு கூட்டு சேர்ந்துள்ளதை நிரூபித்தால் கட்சியை விட்டே விலகிவிடுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்டு 28 ஆம் தேதி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவருக்கு கட்சியில் ஒரு சதவிகிதம் ஆதரவு கூட இருக்காது. மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் பதவிகளுக்கு கட்சித் தேர்தலை எதிர்ப்பவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்று அஞ்சுபவர்களாகத்தான் இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு கட்சியை வழிநடத்தினால் கட்சியின் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும், இல்லையெனில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியில்தான் அமரும்" என்று ஆசாத் கூறினார்.