வீரபாண்டியார் விவகாரம்: வில்லங்க நிலையில் ‘விலுக் விலுக்’ போலீஸ்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகம் தரப்பு, தமிழக காவல்துறைக்கு எதிராக கோர்ட்டை நாடியுள்ளது.
அதையடுத்து, காவல்துறைக்கு கோர்ட் நோட்டீஸ் போயிருக்கிறது. இப்போது,
விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது போலீஸ்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவானது. குண்டர் தடுப்பு சட்டம் என்பதால், வீரபாண்டியார் ஜாமீனில் வெளியே வருவது கடினமாகிப் போனது. அதை எதிர்த்தே ஹைகோர்ட் சென்றிருக்கிறார், வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருப்பது, ஒரு ஆட்கொணர்வு மனு. இந்த ரகத்திலான மனுவுக்கு, காவல்துறை கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். வீரபாண்டி ஆறுமுகம் சாதாரண சட்டங்களுக்கு அப்பால்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் புக் பண்ணப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன என்பதை போலீஸ் விளக்க வேண்டியிருக்கும்.
வீரபாண்டியார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, அதற்கான உத்தரவில் கூறப்பட்டிருந்த காரணம், அவர்மீது 5 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது மாத்திரமே! அந்த வழக்குகள் எதிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இன்-ஃபாக்ட், 4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வேறு வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது, தீர்ப்பு வழங்கப்படாத 5 வழக்குகள் பதிவாகியுள்ள ஒரே காரணத்தால், அவரை குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யலாம் என்று போலீஸ் வாதிட்டால், வீரபாண்டியார் தரப்பு மற்றொரு ‘வில்லங்கமான’ கேள்வியை கேட்டால், கதை கந்தலாகி விடும்!
“முதல்வர் ஜெயலலிதா மீது எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?”