பெங்களூரு அலைச்சல் அ.தி.மு.க-வினரை ரொம்பவே
களைப்பாக்கிவிட்டது. எல்லோரும் சோர்ந்து போய்விட்டார்கள். பரப்பன அக்ரஹாரா
வளாகத்தில் இப்போது அ.தி.மு.க-வினரின் பழைய பாய்ச்சலைப் பார்க்க
முடியவில்லை. எல்லோரும் இயல்பு நிலைக்கு மாறுவது தெரிகிறது. தங்களது
ஆற்றாமையை சிலர், பத்திரிகைகள் மீது வெளிப்படுத்துகிறார்கள்'' என்றபடியே
நம்முன் ஆஜரானார் கழுகார்.
''ஜெயலலிதா கைது பரபரப்பில், பரப்பன அக்ரஹாரா பகுதி
மக்களுடைய சுதந்திரம் பறி போய்விட்டது. அந்தச் சிறைப் பகுதியில்
நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிறைக்குச் செல்லும்
சாலையைத்தான் அவர்களும் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், பரப்பன அக்ரஹாரா
நுழைவுப் பகுதியிலேயே செக் போஸ்ட் அமைத்து வழியை மறித்துவிட்டார்கள். செக்
போஸ்ட்டில் சோதனைக்கு நிற்கும் போலீஸ்காரர்களை அ.தி.மு.க-வினர் அட்ஜெஸ்ட்
செய்து உரிமையோடு உள்ளே செல்கிறார்கள். ஆனால், அங்கேயே வசிக்கும் மக்களை
அத்தனைச் சாதாரணமாக உள்ளே அனுமதிப்பது இல்லை. கேள்வி மேல் கேள்வி
கேட்கிறார்கள். அந்தப் பகுதிக்கு வரும் விருந்தினர்களுக்கு கூட அனுமதி
மறுக்கப்படுகிறது.