ராசரத்தினம் -அமிர்தலிங்கம் - கலைஞர் - மங்கையர்கரசி அமிர்தலிங்கம் |
தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972. தமிழ் மக்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குச் சிகரமாக ஒரு புதிய அரசியல் அமைப்பை யாத்து, முந்திய அரசியல் அமைப்பில் ஆங்கில ஆட்சி சிறுபான்மையோருக்கு வழங்கிய பாதுகாப்புக்களையும் பறிக்க இலங்கை அரசு முற்பட்டது. வங்க மக்களுக்குப் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி போரில் இறங்கி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் கொடுத்த சம்பவம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் புது நம்பிக்கையைக் கொடுத்தது.
கிழக்கு வங்காளத்திற்குச் சார்பாக இந்தியா செயல் படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. மேற்கு வங்கம் பொங்கி எழுந்து இந்தியா அரசுக்கு ஏற்படுத்திய நிர்பந்தமே. அதே போல் இலங்கைத் தமிழ் மக்களுக்காக இந்தியா குரல் கொடுக்கச் செய்வதற்குத் தமிழ் நாடு பொங்கி எழ வேண்டும் என்று கண்டோம்.
1972 பிப்ரவரியில் என்னையும் அழைத்துக் கொண்டு தமிழ் நாடு வந்தார்தந்தை செல்வநாயகம். டாக்டர் இரா. ஜனார்த்தனம், மறைந்த திரு ஆ. இராசரத்தினம், திரு மணவைதம்பி ஆகியோர் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் முதல் எல்லா அமைச்சர்களையும் தந்தைப் பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சிலம்புச் செல்வர் ம. பொ. சி, காயிதே மில்லத், அன்று தி.மு.க . பொருளாளராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முதலிய எல்லோரையும் பார்த்து இலங்கையில்தமிழ் மக்களின் வரலாறு, இன்று எழுந்துள்ள பிரச்சனைகள், அவை தீர எமது கோரிக்கைகள் ஆகியவற்றை விளக்கவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். "புதுடெல்லி செல்ல வேண்டும், பாரதப் பிரதமரைப் பார்த்து வங்க தேச மக்களின் உரிமைக்கு உதவியது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் உதவிடக் 'கோர வேண்டும்", என்று தந்தை செல்வா விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்போ, வசதியோ அவருக்கு ஏற்படவில்லை.