பொதுவாகவே அமெரிக்க ஜனாதிபதிகள் மிகவும் சாதுர்யமானவர்கள், திறமையான அரசியல்வாதிகள், வல்லாளகண்டர்கள் என்பது தெரிந்ததே. கென்னடி, ரீகன், கிளிண்டன்- எல்லோருமே தேன் குழையப் பேசுவதில் வல்லவர்கள். அருமையான சந்தர்ப்பவாதிகள். அதிலும் இந்த பராக் ஒபாமா இருக்கிறாரே அவர் இந்த பேச்சுக்கலையில் வில்லாதிவில்லர். பேச்சுத்திறமை மட்டுமில்லாமல் மேற்சொன்ன எல்லோரையும் விட நிஜமாகவே கொஞ்சம் நல்லவரும் கூட என்பது அவருக்கு பயங்கர ப்ளஸ் பாயிண்ட்..
சமீபத்திய அமெரிக்க இடைத்தேர்தல்களில் சாத்து சாத்தென்று போட்டு சாத்தப்பட்டாலும், நிலை குலையாமல், கம்பீரம் குறையாமல், “புதிய நடைமுறை உண்மைகளுக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக் கொண்டுதானாக வேண்டும். மாற்றம் ஒன்றுதானே நிலையானது?!” என்று தத்துவார்த்தமாகவும் தக்க சமயத்திலும் சொல்லத் தெரிந்த சமர்த்தர் ஒபாமா.
குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியுமான இரண்டு பெரிய அமெரிக்க அரசியல் கட்சிகளுமே இந்தியாவை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ளாமல், அதே சமயம் இந்தியாவுக்காக எதையுமே வெளிப்படையாக விட்டுக்கொடுத்தும் விடாமல் பேலன்ஸ் செய்து சர்க்கஸ் காட்டுவதில் ராட்சஸர்கள். பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ராணுவத் தளவாடங்களை வாரிக்கொடுத்த அடுத்த மாதமே இந்தியாவுக்கும் வந்து “இந்தாருங்கள் நீங்கள் அன்றே கேட்ட ந்யூக்ளியர் ரியாக்டர்கள், இந்தாருங்கள் நீங்கள் இன்னமும் கேட்காத புது ஜெட் விமானங்கள், எதிர்காலத்தில் நீங்கள் கேட்கப்போகும் டெக்னாலஜிக்கள். ஸேல்ஸ் ஆர்டர்கள், நம் கூட்டு வியாபாரம் பெருகட்டுமே …ஜெய்ஹிந்த்!”
“நீங்கள் இனிமேலும் தூங்கி வழியும் இடிச்சபுளிகளல்ல, வீறு கொண்டெழுந்துவிட்ட சிங்கங்கள்” என்று யாராவது நம்மை உசுப்பிவிட்டால் உடனே நாம் புளகாங்கிதப்பட்டு சமிபத்திய மல்டி பில்லியன் டாலர் ஸ்கேண்டல்களை எல்லாம் உடனே மறந்து சிரிக்கும் அப்பாவிகளல்லவா நாம்!
வள்ளல் ஒபாமா வாரி வாரி வழங்குகின்ற வாக்குறுதிகளையும், வானளாவப் பாராட்டிய நம் பாரம்பரிய நிதர்சனங்களையும் கேட்டுக்கேட்டு, காது குளிர்ந்து, கண்ணில் நீர்மல்க, வாய் குளற, நாம் உணர்ச்சிக் குவியலாகி நிற்கிறோம்.
“பார்லிமெண்ட் பேச்சில் பாகிஸ்தானை ஒரு விரட்டு விரட்டி விட்டாரா, பலே! பயங்கரவாதத்திற்கு எதிராக அதே தாஜ் ஹோட்டலிலேயே தங்கினாரா, அதற்கும் ஒரு பலே! நம் பிரதமரைப் பாராட்டி, நம் பாரம்பரிய கலாசாரத்தைப் புகழ்ந்து, நம்ம ஊர் சுக்கா ரொட்டி, மட்டன் கபாப், மாம்பழ லஸ்ஸி என்று ஒரு கட்டு கட்டிவிட்டாரா ஒபாமா? ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ், பலே பலே!
பரஸ்பர ஒப்பந்தங்கள், வர்த்தக விளம்பரங்கள், கைகுலுக்கல்கள், கட்டிப்பிடி வைத்தியங்களின் பின்னர், இந்தப் பாராட்டுமழையின் உச்சகட்டமாக, ஒபாமா இன்னொன்றும் சொன்னார்:
“ வருங்காலத்திலாவது ஐ. நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவும் ஆனால் அதை அமெரிக்கா மிகவும் விரும்பும், ஆதரிக்கும்”
இதைக்கேட்ட சவுத் ப்ளாக் சஃபாரி சூட் கும்பலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அமெரிக்க ஆக்ஸெண்ட் புரிந்தாலும் புரியாவிட்டாலும் அத்தனை எம். பிக்களும் எகிறிக் குதித்துக் கை தட்டினார்கள். சேனல் சேனலாக இதைக்காட்டி ரேட்டிங்சை எகிறச் செய்யவல்ல டீவி சேனல்கள் மகிழ்கின்றன.
ஆனால், இதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா? நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா?
இரண்டாவது உலகப்போருக்குப் பின்னால், நம் தாத்தா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஐ. நா. செக்யூரிட்டி கௌன்சில் ஒரு கட்டப் பஞ்சாயத்து கோஷ்டியே. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ் என்று ஐந்தே ஐந்து நிரந்தர உறுப்பினர்கள். அவர்களுக்கே மட்டுமே எங்கேயும், எப்போதும், சந்தோஷம், சங்கீதமாகிய வெல்லவல்ல ‘வீட்டோ’ அதிகாரம். மற்றைய நூற்றுச்சொச்ச மெம்பர்களும் வெறும் மெம்பர்களே.
“என்னய்யா பெரிய வெங்காய ஐ. நா செக்யூரிட்டி கௌன்சில்? அதெல்லாம் செத்த பாம்பு. அதுல நாம பெர்மனெண்ட் மெம்பரா ஆனா என்ன, இல்லாட்டிதான் என்ன?” என்று கேட்போருக்கு ஒரு உண்மையைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.
இந்த வீட்டோ அதிகாரம் உண்மையிலேயே மிகப்பெரிய துருப்புச்சீட்டு. நிஜமாகவே இது கிடைத்தால் நாம் பாகிஸ்தானிய தந்திரங்களை, எல்லை மீறிய சீறல்களைத் தவிடுபொடி ஆக்கிவிட முடியும். ஏன், விடாக்கண்டன் கொடாக்கண்டனாய் இழுத்தடிக்கும் காஷ்மீர் விவகாரத்துக்கே கூட ஒரு சுப முற்றும் போட்டுவிட முடியும். Backdoor diplomacy க்கு இது மிகவும் உதவும்.
முதலில் நடக்கவேண்டுமென்றால், ஐ. நா. அசெம்பிளியில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி சப்போர்ட் நமக்கு வேண்டும். அப்புறம் யாரும் வீட்டோ செய்து நம்மை விரட்டி அடிக்காமல் இருக்கவேண்டும். இன்னும் சிலபல ’டும் டும்’களும் இருக்கின்றன. நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா?
ஜெர்மனிக்குக்கூட ஒரு காலகட்டத்தில் கிளிண்டன் கொடுத்த அல்வாதான் இது. ஹிட்லரின் அசகாய சூரத்தன அழிவாட்டங்கள் இன்னமும் முழுதாக நினைவிலிருந்து மறையாத காரணத்தால், புத்திசாலி யூத ஊடகங்கள் விடாமல் அதையெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்கிக்கொண்டே இருப்பதால், ஜெர்மனி ப்ரபோசல் ஜில்லிட்டு ஃப்ரிஜ்ஜுக்குள் போனது.
முன்னாள் ஐ. நா. செக்ரட்டரி ஜெனரல் கோஃபி அன்னனை நினைவிருக்கிறதல்லவா? 2005-ல் அவர் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி, ஆறு புதிய ‘பர்மனெண்ட்’ மெம்பர்களை உடனே நியமிப்பது அல்லது சில ‘செமி-பர்மனெண்ட்’ மெம்பர்களையாவது உடனே நியமித்து, ஒரு குறிப்பிட்ட காலம் சென்ற பிறகு, அந்த செனா பானா கும்பல் ஒரு தேர்தலில் நின்று கெலிப்பது. இதெல்லாம் எதுவுமே செல்லுபடியாகாமலும், ஈராக், ஆஃகானிஸ்தான் என்று அமெரிக்கா கபளீகரப் படலம் ஆரம்பித்ததையெல்லாம் அசடு வழிந்துகொண்டு அபத்தமாய்ப் பேசிக்கொண்டு லட்சக்கணக்கில் வெட்டிச் சம்பளம் வாங்கிக்கொண்டே பார்த்துக்கொண்டும் தன் கடமையை வெற்றிகரமாக ஆற்றி முடித்தார் அண்ணன் அன்னன்.
என்னதான் ஐ. நா. பல நேரங்களில் வெத்தாக, கையைப் பிசைந்துகொண்டு வெட்டியாக நின்றாலும், இன்றளவும் அதைவிடப் பெரிய உலகளாவிய ஒரு நிறுவனம் கிடையாது. ஆரம்பித்த காலத்திலிருந்தே ”நாங்க அஞ்சு பேரு சொல்றதுதான்யா சட்டம்” என்று அழிச்சாட்டியமாக ஆடப்படும் ஆட்டம்தான் இது. அதிலும் இந்த அமெரிக்க சட்டாம்பிள்ளை அழித்து அழித்து ஆடுகிற அழுகுணி ஆட்டத்தில் எக்ஸ்பர்ட்! ஐ. நாவுக்கு ஒழுங்காக மெம்பர்ஷிப் பணத்தையே செலுத்தாமல் வருஷக்கணக்காக மில்லியன்கள் கணக்கில் கடன் வைத்து அதிபர் புஷ் பண்ணிய அட்டூழியங்கள் அதற்குள் மறந்துவிடுமா என்ன? (”ஐ. நா இருப்பதே நியூயார்க் நகரில்தான் என்பதை மறந்துவிட வேண்டாம், ஜாக்கிரதை!”) ஈராக் தாக்குதலுக்கு உடனடி ஒப்புதல் தெரிவிக்கக்கோரி ஐ. நாவை அமெரிக்கா மிரட்டியதெல்லாம் சமீபத்திய நிகழ்வுகள்தானே!
இந்த ஐ.நா. செக்யூரிட்டி கௌன்சில் சீட் அல்வா ஏற்கனவே ஜப்பானுக்கு ஊட்டப்பட்ட ‘இனிப்பு’ என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவை விட ஜப்பானுடனான அமெரிக்க வர்த்தக உறவு, தொழில்நுட்ப பரிவர்த்தனைகள் ஏராளம், ஏராளம். அமெரிக்கர்கள் காதில் மாட்டியிருக்கும் ஸ்டீரியோவிலிருந்து, கணநேரமும் வாசம் செய்யும் கார்களிலிருந்து, கணினிகள், எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள், சாப்பிடுகிற ஸ்பெஷாலிட்டி கோபி பீஃப், சர்வம் சப்பைமூக்கு மயம்.
ஜப்பானுக்கு அதீத போஷாக்கு கொடுத்து ஊட்டி வளர்த்தால் சைனா வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்கும்? இருக்கவே இருக்கிறது, வீட்டோ வெடி, கொளுத்து அதை, அடி ஜப்பானை!
அதிபர் ஒபாமா சொன்னது மிகச் சாதுர்யமான வார்த்தைக் குவியல். “in the years ahead, I look forward to a reformed U.N. Security Council that includes India as a permanent member.”
அதாவது, ’பின்னொரு காலத்தில் அத்தைக்கு மீசை முளைத்து அவள் சித்தப்பன் ஆனபிறகு, அந்த சித்தப்பன்னுக்குப் பிறக்கப்போகும் பேரக் குழந்தைக்கு இப்படியும் ஒரு பெயர் வைத்தாலென்ன?’ என்கிற மாதிரியான டுபாக்கூர் ஐடியா.
இதை நம்பி நம் ஊடகங்கள் குதித்துக் குட்டிக்கரணம் போடத் தேவையில்லை.
தௌசண்ட்வாலாவைக் கொளுத்தி நாம் கொண்டாடிக் கும்மாளம் போடுவதற்கு முன், நம் உள்துறை மந்திரி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சில விஷயங்களிலாவது அமெரிக்காவை நிர்ப்பந்திக்கலாம்.
1. ஹெட்லி மேட்டரில் மாதக் கணக்கில் சொதப்பிக் கொண்டே இருக்காமல் உருப்படியாக, நிஜமாகவே உதவுவது.
2. மும்பை தாக்குதல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தர பாகிஸ்தானை நிர்ப்பந்திப்பது
2. வெறும் ஜெட் விமானங்களை நம் தலையில் கட்டாமல் இந்தியாவிலேயே அவற்றைத் தயாரிக்க கனரக தொழில் நுட்பம், மற்றும் கூட்டுறவு முறையில் தொழிற்சாலைகள் கட்டுதல்
3. ஒரு பக்கம் அமெரிக்க விசா கோட்டாவை அதிகரித்து விட்டு, மறுபக்கம் ரேட்டை அநியாயமாக உயர்த்துவது போன்ற டகால்டி வேலைகளை நிறுத்துவது.
4. அமெரிக்க அவுட்சோர்சிங்கினால் அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றனவே தவிரக் குறைவதில்லை என்று இந்தியா நிஜமாகவே நம்புவதால், அவுட்சோர்சிங் வேலைகளை இன்னமும் அதிகரிக்கச் செய்வது
5. சூப்பர் கம்ப்யூட்டர் துறைகளில் இன்னமும் இருக்கும் தடைகளை நீக்குவது
இப்படி இன்னமும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படியெல்லாம் ஆக்கபூர்வமாக ”எதுவுமே வேண்டாம். தேவரீர் திருப்பாதம் எங்கள் கட்டாந்தரையில் பட்டதே போதும்” என்று வெற்று ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தால், ஒபாமா மாமா கொடுத்த லாலிபாப் இன்னும் பல வருஷங்களுக்கு நமக்கு இனித்துக்கொண்டேதான் இருக்கும்!