வியாழன், 10 ஆகஸ்ட், 2017

டெல்லியில் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளில் 5 பேர் நியாயத்தை நிலைநாட்ட சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் - ஏப்ரல் மாதத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று ஜந்தர்மந்தர் பகுதியில் 41 நாட்கள் பல்வேறு நூதன போராட்ட வடிவங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், அதன் பிறகு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுவான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், மீண்டும் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் டெல்லி சென்று கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தத் தொடர் போராட்டத்தில், இந்த அரசு விவசாயிகளை அடிமைகளைப் போல நடத்துகிறது என்பதைக் காட்டச் சங்கிலிகளை உடலில் கட்டிக்கொள்ளுதல், விவசாயிகளின் மீது அக்கறை செலுத்தாதவர்களுக்கு வாக்களித்ததற்காக விவசாயிகள் தங்களைத் தாங்களே காலணியால் அடித்துக்கொள்ளுதல் உள்ளிட்ட நூதனமான போராட்ட வடிவங்களில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், போராட்டத்தின் 26வது நாளான இன்று (ஆகஸ்ட் 10) போராட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் நாராயணசாமி , துவரங்குறிச்சி பழனிசாமி ,சென்னை செல்லபெருமாள், திருச்சி பெரியசாமி, ராஜவேல் ஆகிய 5 பேரும் விவசாயிகளின் பக்கம் உள்ள நியாயத்தை நிலைநாட்ட சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, அய்யாக்கண்ணு தலைமையில் சில விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற சென்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ‘எங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு குறைந்தபட்சம் 200 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 70 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். மற்ற எம்பிக்களிடமும் கையெழுத்து பெற்று, அந்த மனுவை விரைவில் பிரதமர் அலுவலகத்தில் அளிப்போம்’ என்று கூறினார்.
தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 200 நடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றால், விவசாயிகளின் கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்ற கருத்து உறுதிப்படும்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: