பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக் என்பாரே வடிவேலு... அதற்கு சரியான உதாரணம் தமிழ் சினிமாதான்!
இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட் பரந்து விரிந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்திய சினிமாவின் அடையாளமாகப் பார்க்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது படங்களை பார்த்துப் பார்த்து செதுக்கும் கமர்ஷியல் விற்பன்னர்களும்தான்.
இந்த மார்க்கெட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இன்றைய ஹீரோக்கள், இயக்குநர்களுக்கு உள்ளதே தவிர, படங்களில் நல்ல கதை, செறிவான காட்சிகளை அமைப்பதில் இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை.
மாஸ் படம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமாக படங்களை எடுத்து மக்களை வெறுப்பேற்றுவது அதிகரித்து வருகிறது. உதாரணம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை, வேங்கை!
இதன் காரணமாக, தமிழ் சினிமா வளர்ந்த வேகத்திலேயே பெரும் வீழ்ச்சி கண்டு தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு போட வைக்கிறது.
2011 தமிழ் சினிமாவின் முதல் அரையாண்டுக்கான லாப நஷ்டக் கணக்கு என்று பார்த்தால், நாம் மேலே சொன்னது எந்த அளவு உண்மை என்பது புரிய வரும்.
இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை (ஆங்கில, தெலுங்கு, இந்தி டப்பிங் படங்கள் சேர்க்கப்படவில்லை) 65.
இவற்றில் சூப்பர் ஹிட் என்று பார்த்தால் இரண்டு படங்கள்தான். ஒன்று ஜீவாவின் கோ. இரண்டாவது கார்த்தி நடித்த சிறுத்தை.
ஹிட் ரகம் என்றால், பாலாவின் அவன் இவன், சிம்பு நடித்த வானம், விஜய்யின் காவலன் போன்றவற்றைச் சொல்லலாம்.
6 தேசிய விருதுகளை வென்றாலும், சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் ஆடுகளம் பாக்ஸ் ஆபீஸில் மகா சுமார் படம்தான். ஆரண்ய காண்டம் பெரிதாக பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவியது.
சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை குறிப்பிடத்தக்க படமாக நின்றது. ஓரளவு நன்றாகவும் போனது.
விமல் நடித்த எத்தன், விஷ்ணு நடித்த குள்ளநரிக் கூட்டம் போன்றவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.
வேறு எந்தப் படமும் இந்த 6 மாதங்களில் முதல் இரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்றைய நிலவரப்படி 100 நாட்கள் ஓடினால்தான் வெற்றி என்று சொல்ல முடியாது. முதல் இரண்டு வாரங்கள் நல்ல வசூல், போட்ட முதலுக்கு மேல் லாபம் வந்தால் போதும் என்பதுதான் மார்க்கெட் நிலவரம். அந்த கணக்கின்படிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் படங்கள் ஓடாமல் போக ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது சினிமாக்காரர்கள் வழக்கம். அதன்படி கடந்த காலங்களில் குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தை சொல்லி வந்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இத்தனை நாட்களில் வெளியான படங்களில் ஒரே ஒரு படம்... தெய்வ திருமகள் மட்டுமே தேறியுள்ளது.
இப்போது யாருடைய ஆதிக்கமும் இல்லாத நிலையில், வெளியாகும் படங்கள் ஓரளவு வசூலையாவது எடுத்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் முடியவில்லை?
"குடும்ப ஆதிக்கம், டிவி ஆதிக்கம்... இப்படி ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நல்ல சரக்குள்ள படம் சந்தையில் யார் தயவும் இல்லாமல் ஓஹோவென்று ஓடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இயக்குநர்கள் நல்ல படங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆனால் அவர்களோ ஆயிரம் அரசியல் பண்ணிக்கொண்டு படைப்பாற்றலை இழந்து விடும் போக்கு உள்ளது. தோல்விக்கு அடுத்தவரை நோக்கி விரல் நீட்டாமல், தங்கள் தவறை உணர்ந்து கதைகளை உருவாக்க வேண்டும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.
தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினோம்.
2011-ல் இதுவரை வெளியான எந்தப் படமும் ஹீரோக்களுக்காகவோ, ஹீரோயிசத்துக்காகவோ ஓடவில்லை. ஆனால் இன்னும் கூட ஹீரோயிசத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தனுஷ் போன்ற ஹீரோக்கள். தமிழ் சினிமா சாண் ஏறினால் முழம் சறுக்கக் காரணம் இதுவே. இந்த நிலை மாற வேண்டும். அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. பலர் அவன் இவன் படத்தை விமர்சித்தாலும் அந்தப் படம் வெகுஜன ரசனையைத் திருப்திப்படுத்தியது. ஓரளவு லாபமும் கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு தமிழை விட நன்றாக சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. வித்தியாசம் மற்றும் ரசனைக்குத் தீனிபோடும் சமாச்சாரங்கள் நிறைய வேண்டும்," என்றார்.