இப்போது தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது?
'ஓ.பன்னீர்செல்வம் என்னும் நான்...’ என்று முதல்வராகப்
பதவியேற்றுக் கொண்டவர், சில அறிக்கைகள்... சில ஆலோசனைகள் என்று மட்டுமே
நாட்களை நகர்த்தி வருகிறார். அமைச்சர்கள் யாரும் முதல்வரை கண்டுகொள்வதே
இல்லை. நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம் ஆகிய
மூன்று அமைச்சர்கள் மட்டும் எப்போதும் முதல்வரோடு வருகிறார்கள்,
போகிறார்கள். மற்ற அமைச்சர்களில் சிலர் அவரவர் சொந்த ஊர்களில் உண்ணாவிரதம்,
போராட்டம் என்று கோதாவில் இறங்கிவிட்டனர். இன்னும் சிலரோ, பெங்களூரில்
உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம்போட்டு பரப்பன அக்ரஹாராவில் தினமும்
அட்டண்டென்ஸ் போட்டுத் திரும்புகிறார்கள். பதவியேற்பு விழாவில்
கண்ணீர்விட்டு அழுது புரண்ட அமைச்சர்கள் சிலர், பெங்களூரில் அந்தச்
சோகத்தைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுற்றி வருகிறார்கள்.
'க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. இங்கேயே இருந்திடலாம்போல!’ என்றும் சிலர்
பேசிக்கொண்டார்களாம்.