திங்கள், 7 ஆகஸ்ட், 2017

தன் பெருமை சாதியில் இருப்பதாக நம்பும் அறிவீனம் .. சேலத்தில் நால்வர் தற்கொலை.

Ganesh Babu :கேள்வி:: சேலத்தில் மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குப் பேர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்களே?
பதில்: (முழுவதும் படிக்கவும்)
இந்தச் செய்தியை இந்திய துணைகண்டத்திற்கு வெளியே பிறந்து வளர்ந்த ஒருவரிடம் சொன்னால், அவரால் இதைப் புரிந்துக்கொள்ளவேமுடியாது. ஆனால் நமக்கு இத்தகைய செய்திகள் புதிதில்லை.
நம் நாட்டில் காதலுக்கான எதிர்விணை பொதுவாக மூன்று வகைப்படும்.
1.காதலர்களை கொன்றுவிடுவது.
2.காதலித்தவர்களின் பெற்றோர் தற்கொலை செய்துக்கொள்வது.
3.கொலை, தற்கொலை இரண்டும் செய்வது.
இதெல்லாம் நடக்காத வீட்டில்கூட குறைந்தப்பட்சம் பெற்றோர் விடுக்கும் 'தற்கொலை மிரட்டல்' என்ற கொடூரமான மனஅழுத்தத்தையாவது ஏறக்குறைய எல்லாக் காதல் ஜோடியும் ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்பது இங்குள்ள நிலைமை.
இதனாலேயே இந்த முட்டாள் நாட்டில், "காதல் விவகாரம்: இருவர் வெட்டிக்கொலை" போன்ற நகைமுரணான(irony) செய்தித் தலைப்புகள்கூட நமக்குப் பழகிவிட்டன. 'காதலுக்கும், கொலைக்கும் என்னடா சம்பந்தம்?' என்று கேட்பார் எவருமில்லை.
பிள்ளைகளின் காதல் என்ற இயற்கையின் இயல்பான கேள்விக்கு, கொலை முதல் தற்கொலை வரை எல்லாவிதமான அசாத்தியமான, அநியாயமான பதில்களையும் கொடுக்கவே பெற்றோர் அணியமாக இருப்பதன் உளவியல் பின்னணியை நாம் புரிந்துக்கொள்வது அவசியம்.

பல நேரங்களில் இத்தகைய கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் அடிப்படையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதனால் நாம் இவற்றை ஒரே பிரச்சனையின் இருவேறு கூறுகளாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.
குறிப்பாக சேலத்தில் நடந்த தற்கொலை சம்பவத்தை எடுத்துக்கொண்டால், பெற்றோர் இத்தகைய முடிவை ஏன் எடுத்திருக்கக்கூடும் என்பதற்கு நாம் நம்மளவில் சில காரணங்களை புரிந்துவைத்திருக்கலாம். அதில் முக்கியமான காரணமாக பலர் கூறுவது 'சாதிப்பெருமை, கவுரவம், அவமான உணர்ச்சி' போன்றவை.
இவை முற்றிலும் சரியானவைதான் என்றாலும், இவையனைத்துமே ஓரளவு மேலோட்டமான காரணங்களாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. சாதியைக் கடந்தப் பிள்ளைகளின் காதலில், பெற்றொருக்கு இருக்கும் முதன்மையான சிக்கல் சாதிவெறி/சாதிப்பற்று போன்றக் கருத்தியல் அடிப்படையிலான வெற்று உணர்ச்சிகள் (hollow emotions) அல்ல என்பது என் புரிதல்.
"அய்யோ நம்ம சாதி பெருமை கெட்டுப்போயிடுச்சே. இதுக்கு நம்மப் புள்ளையே காரணமாகிப்போச்சே" என்ற ஆழமான சாதிப்பற்றின் காரணமாக எவரும் தற்கொலை செய்வதாகத் எனக்குத் தெரியவில்லை. பிறகு மரணத்தை நோக்கி அவர்களைத் தள்ளுவது எது?
தன் பிள்ளையின் காதலால் சமூகத்தில் தான் சந்திக்கப்போகும் விளைவுகளைக் குறித்த நேரடியான அச்சமும் பீதியும்தான், வேறென்ன?
அப்படியென்ன கோரமான விளைவுகள் என்கிறீர்களா?
"புள்ளைய ஒழுங்கா வளர்க்கத் துப்பில்லை. இவனுக்கு வேட்டி சட்டை ஒருக் கேடா? நானா இருந்தா தூக்குல தொங்கியிருப்பேன்யா" என்று தொடங்கி, இன்னப்பிற பழிச்சொற்கள், கேலிப்பேச்சுகள், தள்ளிவைப்பு/ஒதுக்கப்படுதல், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதைச் சொல்லியே தன் மற்றப் பிள்ளைகளின் திருமண வாய்ப்புகளையும் கெடுத்தல... போன்ற அந்தப் பெற்றோர்கள் நினைத்து மிரளும் விளைவுகள் சொல்லிமாளாது.
ஆக, இந்தியப் பெற்றோர்கள் தற்கொலைவரை செல்வதற்கு முக்கியக் காரணம் இதுப்போன்ற நேரடியான விளைவுகள் குறித்த அச்சமும் நடுக்கமும்தான். சரி, காதல் திருமணம் செய்வது இவர்களின் பார்வையில் தவறென்றே(?!) வைத்துக்கொள்வோம்.
பிள்ளைகள் செய்த "தவறுக்காக", சம்பந்தமில்லாமல் பெற்றோர்களை இத்தனைக் கொடுமையான முறைகளில் தண்டிப்பது யார்? இப்படி தற்கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மேல்சாதியினர் என்று தங்களைக் கருதிக்கொண்டிருப்பவர்கள் என்பதால் கேட்கிறேன், இவர்களின் வலிமையான சாதிப் படைவீரர்களையும் மீறி சமூகத்தில் யார் இந்தப் பெற்றோர்களை இப்படிக் கொடுமையாக தண்டித்துவிடமுடியும்?
ஹாஹாஹா. அடேய்! மேற்சொன்ன அத்தனை அநீதிகளையும், கொடுமைகளையும், இழிவுகளையும் அவர்களுக்குச் செய்வதே அந்த சாதிக்காரர்கள்தான். கடந்தக்காலத்தில் இதுப்போன்ற காதல் விவகாரத்திற்குப் பிறகு தன் சாதிக்காரனுக்கே இவர்கள் இழைத்த அநீதிகள் எத்தனை கொடூரமாக இருந்திருந்தால், இவர்களுக்கு பயந்து இந்தப் பெற்றோர்கள், "இந்தக் கொடுமையான விளைவுகளைக்காட்டிலும் மரணமே பரவாயில்லை" என்று முடிவெடுத்திருப்பார்கள்? சிந்திக்கவேண்டும்.
'அயோக்கியர்களே! சொந்த சாதிக்காரனை தற்கொலை செய்துக்கொள்ளுமளவு துன்புறுத்திவிட்டு, பழியை ஏன் காதல் மீதுப் போடுகிறீர்கள்' என்று இவர்களைக் கேட்கப்போவது யார்?
ஆக, பெற்றோர்கள் தற்கொலை செய்வது இந்த சாதிவெறி மிருகங்களுக்கு பயந்துதான். இதைவிடக் கொடுமை என்னவென்றால், இப்படி சாதிவெறியின் வன்மத்திற்கு பலியாகுபவரும் கடந்தக்காலத்தில் இன்னொரு வீட்டுப் பிள்ளையின் காதல் விவகாரத்தில் அந்தப் பெற்றோருக்கு தற்கொலை எண்ணம் வரும்படி அவரை நோகடித்ததில் இவரது சாதிவெறியும் பங்காற்றி இருந்திருக்கக்கூடும். இப்படி மாற்றி மாற்றி சாதிக்குள் ஒருவரையோருவர் கொலை/தற்கொலைக்குத் தூண்டிக்கொள்ளும் மனநோயாளிகள் இவர்கள். இது ஒரு மீளா சுழற்சி(unending cycle). இதுதான் சாதியின் முகம்.
எந்த சாதி தனக்குத் பாதுகாப்பாக நிற்கும் என்று பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறார்களோ, அதே சாதிதான் அவர்களை இப்படிப் பாடையில் ஏற்றிக்கொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப்போகிறார்கள்?
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே. "காதல் விவகாரம்: இருவர் வெட்டிக்கொலை" என்றத் தலைப்பு செய்தி சரியா? தவறா?
அந்த இருவரை வெட்டிக்கொன்றது காதலா? சாதியா?
-GANESH BABU

கருத்துகள் இல்லை: